Type Here to Get Search Results !

வத்தல்மலை கிராமத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் 247 பயனாளிகளுக்கு ரூ.2.15 கோடி மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார் மாவட்ட ஆட்சியர்.

தருமபுரி மாவட்டம், தருமபுரி வட்டம், கிருஷ்ணாபுரம் உள்வட்டம், கொண்டகரஅள்ளி தரப்பு, வத்தல்மலை கிராமத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் மக்கள் தொடர்புத்திட்ட முகாம் இன்று (12.10.2022) நடைபெற்றது. இம்மக்கள் தொடர்புத்திட்ட முகாமில் தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் மரு.டி.என்.வி.எஸ்.செந்தில்குமார் அவர்கள், பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர் திரு.ஆ.கோவிந்தசாமி அவர்கள் ஆகியோர் முன்னிலை உரையாற்றினர்.

இம்மக்கள் தொடர்பு திட்ட முகாமிற்கு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் தலைமையேற்று, பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி, பேசும்போது தெரிவித்ததாவதுமக்கள் தொடர்பு திட்டம் முகாம் என்பது ஒவ்வொரு மாதமும் ஒரு கிராமத்தை தேர்வு செய்து, அங்கு அனைத்து துறை அலுவலர்களையும் ஒருங்கிணைத்து அரசின் திட்டங்கள் மற்றும் சாதனைகளை மக்கள் அறிந்துகொள்ளும் வகையிலும், மக்களிடம் குறைகளையும், கோரிக்கைகளையும் கேட்டறிந்து, அவற்றை நிறைவேற்றி தருவதற்கான முகாமாக இம்மக்கள் தொடர்பு திட்ட முகாம்களை நடத்திட வேண்டுமெனவும், அதில் குறிப்பாக பின்தங்கிய பகுதிகளான மலைக்கிராமங்களில் இத்தகைய முகாம்களை நடத்திட வேண்டுமெனவும் அரசு ஆணையிட்டுள்ளது. 

அதன்படி, தருமபுரி வட்டத்திற்குட்பட்ட வத்தல் மலை மலைக்கிராமத்தினை தேர்வு செய்து இன்றைய தினம் மாவட்ட ஆட்சித்தலைவரின் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடத்தப்படுவது மிகுந்த சிறப்பு வாய்ந்ததாக கருதுகின்றேன். இந்த முகாமின் மூலம் மலைவாழ் மக்களை நேரில் சந்தித்து, அவர்களுக்கு தேவையான நலத்திட்ட உதவிகளை வழங்குகின்ற வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்த மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடத்த திட்டமிடப்பட்ட உடனேயே வத்தல்மலை சார்ந்த மலைவாழ் மக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்று, அம்மனுக்களின் மீது துறைவாரியான தீர்வுகள் காணப்பட்டு, இன்றைய தினம் தகுதியான பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன. அந்த வகையில் இன்றைய தினம் இம்மக்கள் தொடர்பு திட்ட முகாமில் 247 பயனாளிகளுக்கு ரூ.2.15 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் பல்வேறு துறைகளின் சார்பில் வழங்கப்பட்டுள்ளது.

இம்மக்கள் தொடர்பு திட்ட முகாமினை முன்னிட்டு, அனைத்து துறை அலுவலர்களும் வத்தல் மலை கிராமமான இந்த மலைப்பகுதிக்கு வருகை தந்து, ஒவ்வொருவரும் தங்கள் துறையில் செயல்படுத்தப்பட்டு வரும் அரசின் திட்டங்கள், அதனை பெறுவதற்கான வழிமுறைகள் மற்றும் தகுதிகள், விண்ணப்பிக்கும் முறைகள் குறித்து இங்கு விரிவாக விளக்கவுரையாற்றி இருக்கின்றார்கள். இங்கு வருகைபுரிந்துள்ள பொதுமக்கள் அனைவரும் அதனை முழுமையாக கேட்டறிந்து இருப்பீர்கள். உங்களுக்கெல்லாம் ஒரு வேண்டுகோளாக நான் வைப்பது என்னவென்றால் மலைவாழ் மக்களின் மேம்பாட்டிற்காக அரசு எண்ணற்ற பல திட்டங்களையும், நலத்திட்ட உதவிகளையும், மானிய திட்டங்களையும் அறிவித்து செயல்படுத்தி வருகின்றது. 

பிற மக்களுக்கு கிடைக்ககூடிய மானியங்களை விட மலைவாழ் மக்களுக்கு அதிக மானிய நிதிஉதவிகள் வழங்கப்படுகின்றன. குறிப்பாக சொல்லவேண்டுமென்றால் சூரிய மின்சக்தியின் மூலம் இயங்ககூடிய மோட்டார் பம்ப் செட்டுகளுக்கு 90% அளவிற்கு மானியம் வழங்க கூடிய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. இப்படி பல்வேறு திட்டங்களுக்கு மானியங்கள் அதிகளவில் பெறக்கூடிய தகுதி மலைவாழ் மக்களுக்கு அதிக வாய்ப்புகள் உள்ளது. எனவே, அரசின் திட்டங்களை நீங்கள் கேட்டதோடு மட்டுமல்லாமல் உங்களை சார்ந்தவர்களுக்கும் அத்திட்டங்களை பற்றி தெரிவித்து, தகுதியான அரசின் திட்டங்களுக்கு அவர்களும் விண்ணப்பித்து பயன்பெற உதவிட வேணடும். 

மலைவாழ் மக்களுக்கான மானிய திட்டங்கள் மற்றும் நலத்திட்டங்கள் அதிகளவில் செயல்படுத்தப்பட்டு வருகின்ற போதிலும் அதிக நபர்கள் பயன்பெறாமல் இருப்பது மிகுந்த வருத்தத்தை தருகின்றது. இதற்கு முக்கிய காரணமாக நாம் கருதுவது அரசின் திட்டங்களை பற்றி மலைவாழ் மக்கள் முழுமையாக அறிந்து கொள்ளாமல் இருப்பதும், அதேபோல் எந்த திட்டங்களுக்கு எப்படி விண்ணப்பம் செய்ய வேண்டுமென்ற விவரங்கள் தெரியாமல் இருப்பதும், மக்களிடம் போதிய விழிப்புணர்வு இல்லாததும் ஆகும்.  ஏனென்றால் தற்போது ஒரு திட்டத்தினை பெறுவதற்கு சரியான முறையை உரிய ஆவணங்களோடு, விண்ணப்பிப்பது அவசியம்.  அவ்வாறு உரிய ஆவணங்களோடு சரியான முறையில் விண்ணப்பிக்காதவர்களுக்கு அரசின் இத்தகைய உதவிகள் கிடைப்பது சிரமமாகி விடுகின்றது. 

இதையெல்லாம் தவிர்ப்பதற்கு ஒரு திட்டத்திற்கு மலைவாழ் மக்கள் விண்ணப்பிக்கும்பொழுது முழுமையான விண்ணப்பங்கள், சரியான ஆவணங்களோடு உரிய முறையில் விண்ணப்பிக்க வேண்டும். பொதுமக்கள் அவ்வாறு அரசின் மூலம் பெறுகின்ற நலத்திட்டங்களை முழுமையாக பயன்படுத்தி கொண்டு, அத்தகைய திட்டங்களின் மூலம் தங்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்திகொள்ள முன்வர வேண்டும்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கடந்த 30.09.2021 அன்று இந்த வத்தல்மலைக்கு வருகைதந்து, இதே இடத்தில் மலைவாழ் மக்களாகிய உங்களை நேரில் சந்தித்து  குறைகளையும், கோரிக்கைகளையும் கேட்டறிந்த்தோடு, இப்பகுதி மலைவாழ் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான பேருந்து வசதி ஏற்படுத்தி கொடுப்பதற்கான நடவடிக்கைகள் விரைந்து மேற்கொள்ள வேண்டும் என உத்தரவிட்டு சென்றார்கள். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படி, நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த 13.08.2022 அன்று மாண்புமிகு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் அவர்களும், மாண்புமிகு போக்குவரத்துறை அமைச்சர் அவர்களும் வத்தல் மலை பகுதிக்கு புதிய பேருந்து சேவையினை தொடங்கிவைத்து, அந்த பேருந்திலேயே மாண்புமிகு அமைச்சர் பெருமக்களோடு, நானும் பயணம் செய்து இந்த வத்தல் மலைக்கு வந்தேன். 

முதன்முதலாக இந்த வத்தல்மலைக்கு பேருந்து வசதி ஏற்படுத்தி கொடுத்து, அந்த பேருந்து இந்த மலைப்பகுதிக்கு வந்த போது வத்தல் மலைப்பகுதி மலைகிராமங்களில் உள்ள அனைத்து மக்களும், பெரியோர்களும், இளைஞர்களும், குழந்தைகளும், பள்ளி மாணவ, மாணவியர்களும் மிகுந்த ஆர்வத்தோடு பேருந்தினை வரவேற்று, மக்களெல்லாம் ஆரத்தி எடுத்தும், மலர்தூவியும், ஆரவாரத்தோடு அந்த பேருந்தை வரவேற்ற காட்சி என் இதயத்தில் நீங்காமல் இன்றும் பதிந்துள்ளது. அந்த காட்சி மிகுந்த மகிழ்ச்சியாக இருந்தது. வத்தல்மலை பகுதி மலைவாழ் மக்கள் எந்த அளவுக்கு நமக்கு ஆக்கப்பூர்வமாக, நம்மளுடைய வாழ்வின் முன்னேற்றத்திற்கு, எப்படி எல்லாம் இந்த பேருந்து வசதிகளை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதையும் நீங்கள் பார்க்க வேண்டும். 

மக்கள் 75-வது சுதந்திர திருநாள் அமுதப்பெருவிழாவை கொண்டாடி கொண்டிருந்த சூழ்நிலையில்  75 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த 13.08.2022 அன்று வத்தல்மலைக்கு பேருந்து வசதியினை ஏற்படுத்தி கொடுக்கப்பட்டள்ளது கூடுதல் சிறப்பை பெற்றுள்ளது. தற்போது வத்தல்மலைக்கு கூடுதல் பேருந்து சேவை வேண்டுமென வைக்கப்பட்டுள்ள கோரிக்கை குறித்து உரிய அலுவலர்களுடன் கலந்தாலோசித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இம்மக்கள் தொடர்புத்திட்ட முகாமினை முன்னிட்டு ஏற்கனவே பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு அம்மனுக்கள் மீது உரிய தீர்வு காணப்பட்டு தகுதியான பயனாளிகளுக்கு இன்றைய தினம் நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன. மேலும், இன்றைய தினம் பொதுமக்கள் அளிக்கின்ற அனைத்து கோரிக்கை மனுக்கள் மீதும் துறை வாரியாக உரிய ஆய்வு மேற்கொள்ளப்பட்டு தகுதியான மனுக்கள் மீது உரிய தீர்வு விரைந்து காணப்படும்.

எனவே, மலைகிராமங்களில் வசிக்கும் மலைவாழ் மக்களின் மேம்பாட்டிற்காகவும், அவர்களின் வாழ்க்கைத்தர உயர்விற்காகவும் அரசு எண்ணற்ற திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகின்றது. அத்தகைய திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்கும் பணியினை   மாவட்ட நிர்வாகம் முனைப்போடு செயலாற்றி வருகிறது. மக்கள் அத்தகைய திட்டங்களை பெற்று, பயன்படுத்தி கொண்டு தங்களின் வாழ்க்கைத்தரத்தையும், பொருளாதாரத்தையும் மேம்படுத்திக்கொள்ள முன்வர வேண்டும்.  இவ்வாறு  மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப.அவர்கள் தெரிவித்தார்.

இன்றைய தினம் நடைபெற்ற இம்மக்கள் தொடர்பு திட்ட முகாமில் வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையின் சார்பில் 93 பயனாளிகளுக்கு ரூ.18.80 இலட்சம் மதிப்பிலான இலவச வீட்டுமனை பட்டாக்கள், பட்டா மாற்றம் மற்றும் உட்பிரிவு தனிபட்டாக்களையும், சமூக பாதுகாப்பு திட்டத்தின்கீழ் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 31 பயனாளிகளுக்கு ரூ.17.41 இலட்சம் மதிப்பிலான பல்வேறு வகையான உதவித்தொகைகளையும், உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறையின் சார்பில் ரூ.55,000/- செலவில் பொதுவிநியோக திட்ட பொருட்கள் பெறும் வகையில் 11 புதிய மின்னணு குடும்ப அட்டைகளையும், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில் 22 பயனாளிக்கு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட அடையாள அட்டைகளையும், ரூ.1.21 கோடி மதிப்பீட்டில் 10 திட்டப்பணிகளுக்கான ஆணைகளையும், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் (மகளிர் திட்டம்) சார்பில்  2 மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு  ரூ.2.50 இலட்சம் மதிப்பீட்டில் சுய உதவிக்குழு கடன் உதவிகளையும், தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் சார்பில் 8 பயனாளிகளுக்கு ரூ.11,250/- மதிப்பீட்டில் வேளாண் இடுபொருட்களையும், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் சார்பில் 5 பயனாளிகளுக்கு ரூ.4,747/- மதிப்பீட்டில் தென்னங்கன்றுகள் மற்றும் விதைகளையும், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறையின் சமூக பாதுகாப்புத்திட்டம் சார்பில் 15 தொழிலாளர்களுக்கு ரூ.10.98 இலட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளையும் கூட்டுறவுத்துறையின் சார்பில் 30 பயனாளிகளுக்கு ரூ.18.33 இலட்சம் மதிப்பிலான பல்வேறு வகையான கடன் உதவிகளையும், தாட்கோ சார்பில் 10 பயனாளிகளுக்கு தலா 5 கறவை மாடுகள் வாங்குவதற்கு ரூ.25.00 இலட்சம் மானிய நிதி உதவியினையும் என மொத்தம் 247 பயனாளிகளுக்கு ரூ.2,14,85,997/- (ரூ.2.15 கோடி) மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் பயனாளிகளுக்கு வழங்கினார்கள்.

முன்னதாக, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் மக்கள் தொடர்புத்திட்ட முகாமினை முன்னிட்டு பல்வேறு துறைகளின் சார்பில் அமைக்கப்பட்டிருந்த கண்காட்சி அரங்குகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் பார்வையிட்டார்கள். பின்னர், தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப்பணிகள் திட்டம், பழங்குடியினர் நலத்துறை, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, கூட்டுறவுத்துறை, மீன்வளத்துறை, பட்டு வளர்ச்சித்துறை, தொழிலாளர் நலத்துறை, மருத்துவத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகள் சார்ந்த அலுவலர்கள் அரசின் திட்டங்கள், சாதனைகள் மற்றும் அதனை பெறுவதற்கான வழிமுறைகள் குறித்து பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் திட்ட விளக்க உரையாற்றினார்கள்.

இம்மக்கள் தொடர்புத்திட்ட முகாமில் தருமபுரி சார் ஆட்சியர் திருமதி.சித்ரா விஜயன் இஆப., அவர்கள் வரவேற்புரை ஆற்றினார். மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவர் திருமதி. ம. யசோதா, தருமபுரி ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் திரு. எம்.செல்வம், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர் திருமதி. சே.பூங்கொடி, கொண்டகரஅள்ளி ஊராட்சி மன்றத் தலைவர் திரு. சி.தங்கராஜ் உட்பட உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள்,  கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் திரு.இராமதாஸ், கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர் மரு.சுவாமிநாதன், தனித்துணை ஆட்சியர் சமூக பாதுகாப்புத்திட்டம் திருமதி.வி.கே.சாந்தி, மாவட்ட வழங்கல் அலுவலர் திரு.ஜெ.ஜெயக்குமார், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் திருமதி.கவிதா, தருமபுரி வேளாண்மை இணை இயக்குநர் (பொ) திரு.முகமது அஸ்லாம், தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை துணை இயக்குநர் திருமதி.கே.மாலினி, பழங்குடியினர் நல மாவட்ட திட்ட அலுவலர் திரு..கதிர்சங்கர், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் திரு.வி.ராஜசேகரன், ஒருங்கிணைந்த குழந்தை வளரச்சி பணிகள் திட்டம் / மாவட்ட சமூக நல அலுவலர் (பொ) திருமதி.ஜான்சிராணி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் திருமதி.செண்பகவள்ளி, தருமபுரி வருவாய் வட்டாட்சியர் திரு.தன.ராஜராஜன், தருமபுரி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் திரு.இரா.கணேசன், திரு.கா.தனபால்  உட்பட பல்வேறு அரசுத்துறை அலுவலர்கள், பயனாளிகள், பொதுமக்கள்  உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies