Type Here to Get Search Results !

தடை செய்யப்பட்ட ஆப்பிரிக்க கெளுத்தி மீன்களை வளர்க்க வேண்டாம் - மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை.

தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் உத்தரவுப்படி தேசிய பசுமை ஆணையம் தீர்ப்பாயத்தின் எண்: 0.A.435/2018 நாள்:22.01.2019 ன் ஆணையின்படி வெளிநாட்டிலிருந்து அறிமுகப்படுத்தப்பட்ட ஆப்பிரிக்க கெளுத்தி மீன்களை (Clarias gariepinus) வளர்க்க மத்திய மற்றும் மாநில அரசுகள் தடை விதித்துள்ளது.

ஆப்பிரிக்க கெளுத்தி என்பவை ஒரு வெளிநாட்டு மீன் வகையாகும் இம்மீன் இந்தியாவில் அனுமதியில்லாமல் கொண்டு வரப்பட்டுள்ளது. இவை மனிதர்களுக்கு மட்டுமல்லாது மற்ற நீர்வாழ் உயிரினங்களுக்கும் ஆபத்தை விளைவிக்க கூடியவையாகும். இந்த மீன்கள் தன்னுடன் வாழும் மற்ற வகை மீன்களை ஒட்டுமொத்தமாக அழித்துவிடும் திறன் கொண்டவை. 

இந்த மீன்கள் நீர்நிலைகளில் நுழைந்து விட்டால் அவைகளை அழிப்பது சாத்தியமில்லாத ஒன்று. மேலும் இம்மீன்கள் மிகக்குறைந்த அளவு தண்ணீரிலும் இனப்பெருக்கம் செய்யும் திறன் கொண்ட மீன்களாகும். இம்மீன்கள் நமது நாட்டின் பாரம்பரிய நன்னீர் மீன் இனங்களையும் அதன் முட்டைகளையும் உணவாக்கி கொள்வதால் நமது பாரம்பரிய மீன் இனங்கள் அழியும் அபாயநிலை உருவாகும். இந்த மீன்களை பண்ணைக் குட்டைகளிலோ, அல்லது மீன்வளர்ப்பு குளங்களிலோ இருப்பு செய்து வளர்த்தால், இவை மழை மற்றும் வெள்ளப் பெருக்கு காலங்களில் குளங்களிலிருந்து தப்பித்துவிட வாய்ப்பு உள்ளது. 

அங்ஙனம் தப்பிச் செல்லும் ஆப்பிரிக்க கெளுத்தி மீன்கள் ஏரி மற்றும் ஆறுகளில் சென்று பிற மீன் இனங்களை அழிப்பதால் ஒரு குறிப்பிட்ட காலத்தில் ஆப்பிரிக்க கெளுத்தி மீன்களை தவிர வேறு எந்த மீன்களும் பிழைக்க வாய்ப்பில்லாத நிலை உருவாகும். இதன் பொருட்டு, குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு நமது உள்நாட்டு மீனவர்கள் மீன்பிடிப்பதற்கும் அவர்களுடைய வாழ்வாதாரத்திற்கும் வழி இல்லாமல் போய்விடும்.

எனவே தருமபுரி மாவட்டத்தில் மீன் விவசாயிகள் அரசால் தடைசெய்யப்பட்ட ஆப்பிரிக்க கெளுத்தி மீன்களை இருப்பு செய்து வளர்க்க வேண்டாம் எனவும், ஏற்கனவே மீன்பண்ணைகளில் இவ்வின மீன்களை வளர்த்து வரும் மீன்வளர்போர்கள் மீன்பண்ணையில் வளர்ந்து வரும் மீன்களை அழிக்கவும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

மாவட்ட ஆட்சியர் அவர்களின் ஆணையை மீறி ஆப்பிரிக்க கெளுத்தி மீன்வளர்ப்பு செய்தால் அவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் இதன் மூலம் எச்சரிக்கை விடப்படுகிறது. மீன்வளர்ப்பில் ஆர்வமுள்ள மீன் பண்ணையாளர்கள் அரசால் அனுமதிக்கப்பட்ட மீன்களை மீன்வளத்துறையின் ஆலோசனை பெற்று வளர்க்கவும், புதிதாக மீன்பண்ணை அமைக்கும் மீன்விவசாயிகள் தருமபுரி மாவட்ட மீன்வளர்ப்போர் மேம்பாட்டு முகமை முதன்மை நிர்வாக அலுவலரை தொடர்பு கொண்டு தங்கள் மீன்பண்ணையை பதிவு செய்து அரசு வழங்கும் மானியத்தினை பெற்று பயனடையவும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

தொடர்பு கொள்ளவேண்டிய முகவரி: மீன்வள உதவி இயக்குநர் அலுவலகம், கதவுஎண் 1/165ஏ, இராமசாமி கவுண்டர் தெரு, ஒட்டப்பட்டி, தருமபுரி -636705 தொலைபேசி எண்: 04342 296623, என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் தனது செய்தியறிக்கையில் தெரிவித்துள்ளார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies