வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் சார்பில் மாநில வேளாண்மை வளர்ச்சி திட்டம் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் 2022-23 உள்ளடக்கிய கிராமங்களில் இளநிலை வேளாண்மை, தோட்டக்கலை மற்றும் வேளாண் பொறியியல் பட்டப்படிப்பு படித்த இளைஞர்களை தொழில் முனைவோராக்குதல் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
தருமபுரி மாவட்டத்தில் 2022-2023-ம் ஆண்டில் மாநில வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் கீழ் அரசு மானியமாக 1.00 இலட்சம் வீதம் 6 பட்டதாரிகளுக்கு ரூ.6.00 இலட்சம் நிதி உதவி வழங்கப்படும். அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் செயல்படுத்தப்படும் 52 கிராம பஞ்சாயத்துகளில் வேளாண்மை பட்டப்படிப்பு முடித்த இளைஞர்கள் வேளாண் தொழில் முனைவோராக்குதல் திட்டத்தின் மூலம் தருமபுரி மாவட்டத்தில் உள்ள கிராம பஞ்சாயத்துக்களில் வேளாண்மை, தோட்டக்கலை மற்றும் வேளாண்மை பொறியியல் பட்டம் பெற்ற 21 முதல் 40 வயதுக்குட்பட்ட அரசு மற்றும் தனியார் நிறுவனத்தில் பணியில் இல்லாத சிறந்த கணினி புலமையுள்ள வேளாண்மை தொடர்புடைய செயலிகளை பயன்படுத்தும் திறனுள்ள பட்டதாரிகள் 6 பேர் வேளாண் தொழில் முனைவோராக செயல்பட அரசாணை பெறப்பட்டுள்ளது.
இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் தொழில் முனைவோர்கள் தனது மூலதனத்தில் வேளாண் மற்றும் வேளாண் சார்ந்த பிரதம மந்திரியின் உணவு பதப்படுத்தும் குறு நிறுவனங்களை முறைப்படுத்தும் திட்டம் / வேளாண்மை உள்கட்டமைப்பு நிதியின் கீழ் அனுமதிக்கக் கூடிய திட்டங்களின் அடிப்படையில் சுய தொழில்கள் நிறுவ வேண்டும்.
இதற்கு உட்கட்டமைப்பு நீங்கலாக அதிகபட்சமாக 25% அல்லது ரூ.1.00 லட்சம் பின்னேற்பு மூலதன மானியமாக வழங்கப்படும். எனவே. வேளாண்மை தொழில் முனைவோராக செயல்பட தகுதியான பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம். இதற்கு 10 மற்றும் 12 ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ். வேளாண்மை / தோட்டக்கலை / வேளாண் பொறியியல் பிரிவில் இளநிலைப் பட்டப்படிப்பிற்கான சான்றிதழ், துவங்க உத்தேசித்துள்ள தொழில் தொடர்பான விரிவான திட்ட அறிக்கை. ஆதார் நகல், குடும்ப அட்டை நகல், வங்கிகணக்கு நகல் மற்றும் வங்கியில் கடனுதவி பெற்று திட்டம் தொடங்குபவர் எனில் அதற்கான ஆவணங்களுடன் கூடிய விண்ணப்பங்களையும், விரிவான திட்ட அறிக்கையையும் அக்ரிஸ் நெட் (Agrisnet) வலைதளத்தில் 19.09.2022-க்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் இத்திட்டம் தொடர்பாக விவரங்களுக்கு தங்களது பகுதி வட்டார வேளாண்மை உதவி உதவி இயக்குநர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது.
இளைஞர்கள் தொழில் முனைவோராக்கும் திட்டத்தின் கீழ் தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த வேளாண்மை, தோட்டக்கலை மற்றும் வேளாண் பொறியியல் பட்டப்படிப்பு படித்த இளைஞர்கள் தொழில் முனைவோராக்கும் திட்டத்தில் உடன் விண்ணப்பிக்கலாம், என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தனது செய்தியறிக்கையில் தெரிவித்துள்ளார்.
