மேலும், தமிழ்நாட்டில் அரசுப்பள்ளிகளில் பயிலும் சில குழந்தைகள் தற்போதும் வயதிற்கேற்ற உயரத்தினை அடையாமல் அவர்களின் வளர்ச்சி தடைபடுவது தெரிய வருகிறது எனவும். ஊட்டச்சத்து குறைபாட்டினால் அவர்கள் கல்வியில் கவனம் செலுத்த இயலாமல் போய்விடும் வாய்ப்பும் இருக்கிறது எனவும், எனவே, தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகளில் படிக்கும் ஏழைக் குழந்தைகளின் படிப்பினை ஊக்குவிக்கவும், ஊட்டச்சத்துக் குறைபாட்டினை போக்கவும், கற்றல் இடைநிற்றலைத் தவிர்க்கவும், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இனிமேல் காலைச் சிற்றுண்டி வழங்கப்படும் எனவும், நகரப் பகுதிகளிலும், கிராமப் பகுதிகளிலும், பள்ளிக்குச் செல்லக் கூடிய குழந்தைகள் காலையிலேயே புறப்பட்டு விடுகிறார்கள், இதனால் பெரும்பாலான குழந்தைகள் காலை உணவு சாப்பிடுவது இல்லை என்ற தகவல் அரசுக்குக் கிடைத்திருக்கிறது எனவும், பள்ளிகள் மிகத் தூரமாக இருப்பது மட்டுமல்ல, சிலருடைய குடும்பச் சூழலும் இதற்குக் காரணமாக இருக்கிறது எனவும், இதனை மனதில் வைத்துக் கொண்டு இந்தத் திட்டத்தை நாம் தீட்டி இருக்கிறோம் எனவும், முதற்கட்டமாக சில மாநகராட்சி, நகராட்சிகளிலும், தொலைதூரக் கிராமங்களிலும் இத்திட்டம் தொடங்கப்படவுள்ளது எனவும், ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலக்கூடிய தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு அனைத்துப் பள்ளி நாட்களிலும் காலை வேளையில் சத்தான சிற்றுண்டி வழங்கப்படும் எனவும், இதனை உள்ளாட்சி அமைப்புகள் மூலமாக வழங்குவோம் எனவும், படிப்படியாக அனைத்துப் பகுதிகளுக்கும் இந்தத் திட்டம் விரிவுபடுத்தப்படும் என்ற அறிவிப்பினை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் வெளியிட்டுள்ளார்கள்.
இதன்படி, "முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்" தருமபுரி மாவட்டத்தில் செயல்படுத்துவதற்கு முதற்கட்டமாக பாலக்கோடு ஊராட்சி ஒன்றியம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் 112 தொடக்கப் பள்ளிகளைச் சேர்ந்த சுமார் 6,500-க்கும் மேற்பட்ட பள்ளி மாணாக்கர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ள அரசுத் தொடக்கப் பள்ளிகளில் 1-ஆம் வகுப்பு முதல் முதல் 5-ஆம் வகுப்பு வரை பயின்று வரும் மாணவ, மாணவியர்களுக்கு சூடான சமைத்த, சத்தான மற்றும் சுவையான காலை உணவு வழங்கப்பட உள்ளது.
இத்திட்டத்தினை சிறப்பாக செயல்படுத்துவதற்கு அனைத்து ஊராட்சிகளிலும் அந்தந்த ஊராட்சி மன்றத்தலைவர்கள், அந்தந்த பள்ளி தலைமையாசிரியர்கள், அப்பள்ளியின் பள்ளி மேலாண்மைக்குழுத் தலைவர், பள்ளி மேலாண்மைக்குழு பிரதிநிதி மற்றும் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு ஆகியோரைக் கொண்ட நிர்வாக குழு அமைக்கப்பட்டுள்ளது.
தருமபுரி மாவட்டத்தில் இக்காலை சிற்றுண்டி திட்டம் செயல்படுத்தப்பட உள்ள பாலக்கோடு ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 112 தொடக்கப் பள்ளிகளிலும் திங்கட்கிழமை அன்று கோதுமைரவா உப்புமா மற்றும் காய்கறி சாம்பார், தருமபுரி மாவட்டத்தில் சிறுதானியங்கள் அதிகம் விளைகின்ற பகுதி ஆதலால் செவ்வாய்க்கிழமை அன்று ராகி புட்டு, தேங்காய் மற்றும் நாட்டுச்சர்க்கரை, புதன்கிழமை அன்று வெண்பொங்கல் மற்றும் காய்கறி சாம்பார், வியாழக்கிழமை அன்று அரிசி உப்புமா மற்றும் காய்கறி சாம்பார், வெள்ளிக்கிழமை அன்று ரவா காய்கறி கிச்சடி மற்றும் ரவா கேசரி ஆகிய உணவுகள் அனைத்து பள்ளி வேலைநாட்களுக்கும் காலை உணவாக வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
