தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அதனை சுற்றியுள்ள பகுதிகளான மாரண்டஹள்ளி, பஞ்சப்பள்ளி, பெல்ரம்பட்டி பகுதிகளில் அதிகப்படியான தக்காளி சாகுபடி நடைபெறுகிறது, இங்கு அறுவடை செய்யப்படும் தக்காளிகள் புகழ்பெற்ற பாலக்கோடு தக்காளி மார்க்கெட்டிற்கு விற்பனைக்காக கொண்டு வருவது இப்பகுதி விவசாயிகளின் வழக்கம், இங்கிருந்து வெளி மாநில மற்றும் வெளி மாவட்ட வியாபாரிகள் தக்காளியை மொத்தமாக கொள்முதல் செய்து செல்கின்றனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன் 1 கிலோ தக்காளியின் விலை ரூ.100 வரை விற்பனையானது, இதனால் வெளி மாநில வியாபாரிகள் வெளிமாநிலங்களில் மொத்தமாக தக்காளியை குறைந்து விலைக்கு வாங்கி வந்து, அதிக விலைக்கு இங்கு விற்பனை செய்தனர். மேலும் இங்கு விளைவிக்கப்படும் தக்காளியின் விலை தொடர்ந்து உயர்வில் இருந்ததால், உள்ளூர் மொத்த வியாபாரிகள் வெளி மாநில தக்காளியை வாங்கி உள்ளூர் சில்லறை வியாயபாரிகளுக்கு விற்பனை செய்தனர்.
இந்நிலையில் உள்ளூர் பகுதிகளில் தக்காளி வரத்து தொடர்ந்து அதிகரித்துவந்ததால், கடந்த சில தினங்களாக தக்காளியின் விலை கிலோ ரூ.15வரை மட்டுமே விற்பனையானது. மேலும் வெளிமாநில தக்காளியை அதிகளவில் மொத்த வியாபாரிகள் வாங்கி விற்பதால், உள்ளூர் தக்காளிகளின் வரத்து அதிகரித்து தற்போது 1 கிலோ தக்காளியின் விலை ரூ.3 முதல் ரூ.5 வரை விற்பனையாகிவருகிறது.


