கர்நாடக காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் மீண்டும் மழை பெய்ய தொடங்கியதன் காரணமாக கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் ஆகிய இரு அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் நேற்று காலை நேரத்தில் இரு அணைகளில் இருந்தும் வினாடிக்கு 25 ஆயிரம் கன அடி நீர் காவிரி ஆற்றில் உபரிநீராக வெளியேற்றப்பட்டது. அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பால் மேலும் கூடுதலாக நீர் வெளியேற்றப்பட்டு வினாடிக்கு 50 ஆயிரம் கனஅடியாக வெளியேற்றப்பட்டன.
இதன் காரணமாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நேற்று காலை நேரத்தில் வினாடிக்கு 14 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து, படிப்படியாக அதிகரித்து தற்போது வினாடிக்கு 50 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து நீடித்து வருகிறது. நீர்வரத்தால் பிரதான அருவி, சினி ஃபால்ஸ் மெயின் அருவி ஐந்தருவி பகுதிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கின்றன. காவிரி வனப் பகுதிகளிலும் தொடர்ந்து மழை பெய்து வருவதால் தண்ணீர் வரத்து மேலும் அதிகரிக்க கூடும் என சுற்றுலா பயணிகளுக்கு முற்றிலும் தடை விதிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் சாந்தி அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.
குறிப்பாக பரிசலில் செல்லவும், அருவி மற்றும் ஆற்றுப்பகுதிகளில் குளிக்கவும், கால்நடைகளை ஆற்றின் குறுக்கே அழைத்துச் செல்லவும், செல்பி எடுக்கவோ கூடாது எனவும் மறு உத்தரவு வரும் வரை முற்றிலும் தடை விதிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் சாந்தி அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.


