தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கூட்டரங்கில் தருமபுரி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து துறை அலுவலர்களுக்கான மாவட்ட கண்கணிப்பு அலுவலர் அவர்களின் ஆய்வுக்கூட்டம் இன்று (23.08.2022) நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் முன்னிலை வகித்தார்.
இக்கூட்டத்திற்கு அரசு முதன்மை செயலாளர் / தொழிலாளர் நல ஆணையர் / தருமபுரி மாவட்ட கண்கணிப்பு அலுவலர் முனைவர். அதுல் ஆனந்த் இஆப., அவர்கள் தலைமையேற்று, தருமபுரி மாவட்ட வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு, துறை அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கி பேசும்போது தெரிவித்ததாவது:
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும், மக்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்கும், வாழ்க்கைத்தர உயர்விற்கும் எண்ணற்ற பல திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகின்றார்கள். அந்த வகையில் தருமபுரி மாவட்டத்தின் வளர்ச்சிக்கும் எண்ணற்ற பல திட்டங்கள், அடிப்படை வசதி மேம்பாட்டு பணிகள், பல்வேறு வகையான நலத்திட்டங்கள் அறிவித்து செயல்படுத்தப்பட்டு வருகின்றது. அந்தந்த துறை அலுவலர்கள் தங்கள் துறையில் செயல்படுத்தப்பட்டு வரும் அரசின் திட்டங்களை முழுமையாக நிறைவேற்றிட வேண்டும்.
அரசுத்துறைகளின் மூலம் அளிக்கப்பட்டு வருகின்ற சேவைகள் அனைத்தும் உடனுக்குடன் மக்களுக்கு கிடைப்பதை உறுதி செய்திட வேண்டும். இ-சேவை மையங்களில் வழங்கப்படுகின்ற அனைத்து சேவைகளும் அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டு காலதாமதமின்றி உடனுக்குடன் மக்களுக்கு வழங்கிட வேண்டும். ஒவ்வொரு துறை அலுவலர்களும் தங்கள் துறையில் உள்ள திட்டங்கள், அதன் செயல்பாடுகள் குறித்து தொடர்ந்து ஆய்வு செய்து அப்பணிகள் விரைந்து செயல்படுத்தப்பட்டு வருவதை கண்காணித்திட வேண்டும்.
அரசின் திட்டங்களை உடனுக்குடன் நிறைவேற்றுவதற்கு உரிய நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்வதோடு அரசின் விதிமுறைகளை முழுமையாக பின்பற்றி, ஒவ்வொரு அலுவலரும் விழிப்புடன் பணியாற்றிட வேண்டும். இவ்வாறு அரசு முதன்மை செயலாளர் / தொழிலாளர் நல ஆணையர் / தருமபுரி மாவட்ட கண்கணிப்பு அலுவலர் முனைவர். அதுல் ஆனந்த் இஆப., அவர்கள் தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், ஜல் சக்தி அபியான் குடிநீர் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களும், தருமபுரி நகராட்சியின் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் நமக்கு நாமே திட்டம், கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களும், பள்ளிக்கல்வித்துறை, மாவட்ட தொழில்மையம், இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம், தேசிய நெடுஞ்சாலைத்துறை, நில அளவைத்துறை, நெடுஞ்சாலைகள் நிலம் எடுப்பு பிரிவு, ஆதிதிராவிடர் நலத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித்திட்டப்பணிகள் குறித்து அரசு முதன்மை செயலாளர் / தொழிலாளர் நல ஆணையர் தருமபுரி மாவட்ட கண்கணிப்பு அலுவலர் முனைவர். அதுல் ஆனந்த் இஆப., அவர்கள் ஒவ்வொரு துறை அலுவலர்களுடன் விரிவாக ஆய்வு மேற்கொண்டார்கள்.
இக்கூட்டத்தில் தருமபுரி சார் ஆட்சியர் திருமதி.சித்ரா விஜயன் இஆப., மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, திட்ட இயக்குநர் (பொ) / திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) திரு.பாபு, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் திரு.முத்துசாமி உட்பட தொடர்புடைய அலுவலர்கள் கலந்துகொண்டனர்.


