இக்கூட்டத்திற்கு மாவட்ட வளர்ச்சி, ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழுத்தலைவர் / தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் மரு.டி.என்.வி.எஸ்.செந்தில்குமார் அவர்கள் தலைமையேற்று பேசும்போது தெரிவித்ததாவது:-
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தருமபுரி மாவட்டத்தின் வளர்ச்சிக்கும், மக்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்கும் எண்ணற்ற பல திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகின்றார்கள். மேலும் தருமபுரி மாவட்டத்தின் வளர்ச்சிக்காகவும், மேம்பாட்டிற்காகவும் ஒன்றிய, மாநில அரசுகளின் நிதி ஒதுக்கீடுகளின் மூலம் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
இத்தகைய அரசின் திட்டங்களை விரைந்து செயல்படுத்தி, மாவட்டத்தின் வளர்ச்சிக்கும், மக்களுக்கான வளர்ச்சிக்கும் அடித்தளமிட்டு, அத்தகைய திட்டங்களை அரசுத்துறை அலுவலர்கள் முழுமையாக நிறைவேற்றிட வேண்டும். அரசின் திட்டங்களை துறை அலுவலர்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளையும், விதிமுறைகளையும் முழுமையாக பின்பற்றி அப்பணிகளை சிறப்பாக மேற்கொள்ள வேண்டும். அரசின் திட்டங்களை செயல்படுத்துவதில் ஏதேனும் சிரமங்கள் இருப்பின் அதுகுறித்து உடனடியாக தகவல் தெரிவித்தால் அதற்குரிய தீர்வையும் கண்டறிந்து அத்திட்டத்தினை காலதாமதமின்றி விரைவாக நிறைவேற்றுவதற்கு ஏதுவாக இருக்கும். அனைத்து பள்ளிகளிளும் கழிப்பறை வசதிகளை முழுமையாக ஏற்படுத்தி, தருமபுரி மாவட்டத்தில் கழிப்பறை இல்லாத பள்ளிகளே இல்லை என்ற நிலையினை ஏற்படுத்திட வேண்டும்.
தருமபுரி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை மூலம் ஒன்றிய அரசுத் திட்டங்களை செயல்படுத்துவதை கண்காணித்திடும் பொருட்டு மாவட்ட வளர்ச்சி, ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் காலாண்டிற்கு ஒருமுறை நடத்தப்படுகிறது. அதன்படி இக்கூட்டம் இன்று நடத்தப்பட்டுள்ளது. தருமபுரி மாவட்டத்தில் தருமபுரி - மொரப்பூர் புதிய இரயில்வே இணைப்பு பாதை அமைப்பதற்கு நிலம் அளவீடு செய்யும் பணி நடைபெற்று வருகின்றது. இன்று கூட இப்பணியினை நான் நேரில் சென்று ஆய்வு செய்தேன்.
இப்பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றது. துறை அலுவலர்கள் அரசின் திட்டங்களை விரைந்து நிறைவேற்றிட உரிய நடவடிக்கைகளை விரைவாக மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு மாவட்ட வளர்ச்சி, ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழுத்தலைவர் / தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் மரு.டி.என்.வி.எஸ்.செந்தில்குமார் அவர்கள் தெரிவித்தார்.
தருமபுரி மாவட்டத்தில் ஒன்றிய அரசின் திட்டங்களை செயல்படுத்தும் தொடர்புடைய மாவட்ட அளவிலான அலுவலர்களுடன் திட்ட செயல்பாடுகளின் முன்னேற்றம் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் சார்பில் பாராளுமன்ற உறுப்பினர் உள்ளூர் வளர்ச்சித் திட்டம், பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா (கிராமின்), பிரதான் மந்திரி கிராம சாலைகள் திட்டம், தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்), மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டம், ஜல்ஜீவன் மிஷன் திட்டம், பிரதம மந்திரி கிராம முன்னோடி வளர்ச்சித் திட்டம், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டம், தன்னிறைவுத் திட்டம், ஆதிதிராவிடர் குக்கிராமங்களில் அடிப்படை வசதிகள், மறுசீரமைக்கப்பட்ட ஒருங்கிணைந்த பள்ளி உட்கட்டமைப்பு, தமிழ்நாடு ஊரக சாலைகள் மேம்பாடு திட்டம், கல்வித்துறையின் சார்பில் அனைவருக்கும் கல்வி இயக்கம், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்திட்டம், தேசிய நில அளவை ஆவணங்கள் நவீன மயமாக்கள் திட்டம், பேரூராட்சிகள் துறை, அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டப்பணிகள், தேசிய மதிய உணவுத்திட்டம், ஒருங்கிணைந்த நீர்வடிப்பகுதி மேலாண்மைத்திட்டம், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மருத்துவ நலப்பணிகள், சுகாதார நலப்பணிகள், வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, கால்நடை பராமரிப்புத்துறை, சமூக பாதுகாப்புத் திட்டம், ஜல்ஜீவன் மிஷன் திட்டம் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் மத்திய, மாநில அரசின் பல்வேறு திட்டங்களின் செயலாக்கம், முன்னேற்றம் மற்றும் செயல்பாடுகள் குறித்து துறை அலுவலர்கள் எடுத்துரைக்கப்பட்ட விவரங்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.
இக்கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, திட்ட இயக்குநர் (பொ) / திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) திரு.பாபு, மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் திரு.அண்ணாமலை, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் திரு.முத்துசாமி, கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளர் திரு.இராமதாஸ், துணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்) மரு.சவுண்டம்மாள், தருமபுரி நகராட்சி ஆணையாளர் திருமதி.சித்ரா சுகுமார், மாவட்ட வளர்ச்சி, ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு தன்னார்வ தொண்டு நிறுவனம் சார்ந்த உறுப்பினர் திரு.வி.சக்திவேல், இக்குழுவின் மலைவாழ் வகுப்பு சார்ந்த உறுப்பினர் திரு.ஆர்.குணசேகரன் உட்பட குழு உறுப்பினர்கள் மற்றும் தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


