சிட்லிங் ஊராட்சியில் 248 பயனாளிகளுக்கு ரூ.87.56 இலட்சம் மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார் மாவட்ட ஆட்சியர். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 17 ஆகஸ்ட், 2022

சிட்லிங் ஊராட்சியில் 248 பயனாளிகளுக்கு ரூ.87.56 இலட்சம் மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார் மாவட்ட ஆட்சியர்.

தருமபுரி மாவட்டம், அரூர் வட்டம், சிட்லிங் ஊராட்சி, வேலனூர் கிராமத்தில் இன்று நடைபெற்ற  மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் மக்கள் தொடர்புத்திட்ட முகாமில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் 248 பயனாளிகளுக்கு ரூ.87.56 இலட்சம் மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேச்சு.

தருமபுரி மாவட்டம், அரூர் வட்டம், தீர்த்தமலை உள்வட்டம், சிட்லிங் ஊராட்சி, வேலனூர் கிராமத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் மக்கள் தொடர்புத்திட்ட முகாம் இன்று (17.08.2022) நடைபெற்றது. இம்மக்கள் தொடர்புத்திட்ட முகாமிற்கு  மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் தலைமை வகித்தார். இம்மக்கள் தொடர்புத்திட்ட முகாமில் அரூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.வே.சம்பத்குமார் அவர்கள் முன்னிலை உரையாற்றினர். இம்முகாமில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் அவர்கள் பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி, பேசும்போது தெரிவித்ததாவது:

மக்கள் தொடர்பு திட்டம் முகாம் என்பது ஆண்டுதோறும் ஒவ்வொரு மாதங்களிலும் ஒவ்வொரு உயர் அலுவலரும் ஒரு கிராமத்தை தேர்வு செய்து, அக்கிராமத்தில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடத்திட நிர்ணயிக்கப்பட்டு, அதன்படி துறை அலுவலர்கள், அறிவிக்கப்பட்டுள்ள நாளில் அக்கிராமத்திற்கு நேரில் சென்று மக்களை சந்தித்து, அவர்களின் குறைகளை கேட்டறிந்து, கோரிக்கை மனுக்களை பெற்று, தகுதியான பயனாளிகளுக்கு  நலத்திட்ட உதவிகள் வழங்கும் முகாமாக நடத்தப்பட்டு வருகின்றது. அரசின் திட்டங்கள் கடைக்கோடி மக்களுக்கும் கிடைக்கச் செய்வது இம்முகாமின் முக்கிய நோக்கம். 

தருமபுரி மாவட்டத்தில் கடைகோடி பகுதியான சிட்லிங் ஊராட்சி தேர்வு செய்யப்பட்டு மாவட்ட ஆட்சித்தலைவரின் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடைபெறுவது சிறப்பான ஒன்றாகும். இந்த கடைக்கோடி கிராமத்தில் நடைபெறுகின்ற இம்மக்கள் தொடர்பு திட்ட முகாம் மூலமாக உங்களை நேரில் சந்திப்பதில் பெருமகிழ்ச்சி அடைகின்றேன். இது மிகவும் பின்தங்கிய பகுதியாகவும்,  நமது மாவட்டத்தின் எல்லையிலும் அமைந்துள்ளது. பசுமை நிறைந்த இயற்கை எழில் கொஞ்சும் அடர்ந்த மரங்கள் கொண்ட பகுதியாக இப்பகுதி உள்ளது. அப்படிப்பட்ட கடைக்கோடியில் உள்ள இந்த அழகிய கிராமத்திற்கு வரும் வழியில் நான் பார்த்தபொழுது, மிகவும் வேதனையாக இருக்கின்றது. காரணம், வயதானவர்கள் கூட வயல்களில் வேலை செய்வதையும், ஆடு, மாடுகள் மேய்த்து கொண்டு இருப்பதையும் பார்த்துகொண்டே வந்த போது, இளைஞர்கள் சிலர் வேலை ஏதும் செய்யாமல் மரத்தடிகளில் கூட்டமாக பேசி கொண்டிருப்பதை பார்த்து மிகவும் வேதனையாக இருக்கின்றது. இளைஞர்கள் தங்களுடைய இளம் வயதில் நல்ல படிப்பையும், கடின உழைப்பையும் ஏற்படுத்தி கொண்டால்  சிறந்த எதிர்காலத்தை அமைத்து கொள்ள முடியும். அதைவிடுத்து, இதுபோன்று வேலை ஏதும் செய்யாமல் பொழுதை வீணாக கழிப்பது, உங்களது எதிர்காலத்திற்கான மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தும். எனவே, இளைஞர்கள் நன்றாக படிக்க வேண்டும். பெண் குழந்தைகளையும் நன்றாக படிக்க வைக்க வேண்டும். படித்த இளைஞர்கள் தங்களுக்கென சுய வேலைவாய்ப்பை உருவாக்கி கொள்ள வேண்டும். இளைஞர்கள் தொழில் தொடங்குவதற்கு அரசு எண்ணற்ற உதவிகளை செய்து வருகின்றது. சும்மா இருந்தால், சோம்பேறித்தனம் ஏற்படும். அதனால் சோர்வுற்று எதிர்காலத்திலும் நீங்கள் சிறப்பாக செயல்பட முடியாக நிலை ஏற்படக்கூடும். எனவே இளைஞர்கள் ஒன்றுகூடி அரசு நடத்தக்கூடிய பல்வேறு போட்டித்தேர்வுகளுக்கு தங்களை தயார்படுத்திக் கொள்ளலாம். இளைஞர்கள் ஒன்று, சேர்ந்து ஒரு தொழிலையும் உருவாக்கலாம். இதனால் உங்களின் பொருளாதாரமும், வாழ்க்கைதரமும் உயர்வதோடு உங்களை சார்ந்திருக்க கூடிய குடும்பமும், உங்கள் கிராமமும் வளர்ச்சி அடையும். 

மலைவாழ் பகுதிகளில் இருக்கக்கூடிய மக்களுக்கு ஏராளமான திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகின்றது. அத்தகைய திட்டங்களை பற்றி நீங்கள் அறிந்து கொண்டு, அதை பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்பதற்காக தான் கடைக்கோடி கிராமமான இந்த மலைக்கிராமத்தில் மாவட்ட ஆட்சித்தலைவரின் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடத்தப்படுகின்றது.  இந்த அரிய வாய்ப்பினை பொதுமக்கள் முழுமையாக பயன்படுத்தி கொண்டு அரசின் திட்டங்களை பற்றி நன்கு அறிந்து கொள்ள வேண்டும். இங்கு பல்வேறு துறை அலுவலர்கள் அரசின் திட்டங்களையும், அதை பெறுவதற்கான வழிமுறைகளையும் திட்ட விளக்க உரையாக ஆற்றியுள்ளார்கள். அதை நீங்கள் முழுமையாக கேட்டறிந்தால் அரசின் திட்டங்கள் அனைத்தையும் நீங்கள் தெரிந்து கொண்டு, தங்களுக்கு தகுதியான திட்டங்களுக்கு விண்ணப்பித்து பயன்பெற முடியும். அனைத்து துறை அலுவலர்களையும் ஒருங்கே பார்த்து அரசின் திட்டங்களை அறிந்துகொள்வது என்பது சிரமம்.  அதற்காக தான் மாதந்தோறும் இதுபோன்ற மக்கள் தொடர்பு திட்ட முகாம்கள் நடத்தப்பட்டு அதன் முக்கிய நோக்கமாக அரசின் திட்டங்களை பற்றி மக்களுக்கு எடுத்துக்கூறுவதும், விண்ணப்பித்த தகுதியான மக்களுக்கு அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்குவதும், அரசின் திட்டங்கள் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதும் ஆகும். மக்கள் விழிப்புணர்வோடு இருந்தால் அரசின் திட்டங்களை நீங்கள் அறிந்து, எளிதில் பயன்பெற முடியும். 

வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையை எடுத்துகொண்டால் நீண்ட பசுமை போர்வை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. அதில் பல்வேறு வகையான மரக்கன்றுகள் மக்களுக்கு இலவசமாகவும், மானியமாகவும் வழங்கப்படுகின்றது.  அதேபோல் நீர் சேமிப்பை ஏற்படுத்துவதற்கு நீரை வீணாக்காமல் சேமிக்க கூடிய சொட்டுநீர் பாசனமுறை செயல்படுத்தப்பட்டு வருகின்றது. மானியத்தில் சொட்டுநீர் பாசனம் அமைத்துகொள்ள விவசாயிகள் முன்வர வேண்டும். இப்பகுதி விவசாயமும், தொழிலும் நிறைந்த பகுதியாக உள்ளது. இங்கு தறித்தொழிலும் நடைபெற்று வருவதாக தெரிவித்தார்கள். இதில் சுமார் 200-க்கும் மேற்பட்டோர் நெசவு தொழிலில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்தார்கள். விரைவில் இந்தபகுதிக்கு கைத்தறி மற்றும் துணிநூல் துறை உதவி இயக்குநர் அவர்களை இப்பகுதிக்கு அனுப்பிவைத்து, இந்த பகுதியினை ஆய்வுசெய்து, இங்கு நெசவுதொழில் ஈடுபட்டு வருபவர்களுக்கு தேவையான பயிற்சிகளையும், உதவிகளையும் வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், சிறிய நெசவு பூங்கா அமைப்பதற்கு உகந்த இடமாக இப்பகுதி இருக்குமா என்பதையும் ஆராய்ந்து சிறு நெசவு பூங்கா அமைப்பதற்கான நடவடிக்கையும் மேற்கொள்ள உரிய சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்திட உதவி இயக்குநருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

கிராமங்களில் பெண் குழந்தைகள் பருவம் அடைந்த உடனேயே அவர்களை படிக்க வைப்பதை நிறுத்தி விடுவதாக தகவல்கள் வரப்பெறுகின்றன. அவ்வாறு செய்வது மிகவும் தவறானது. ஆண் என்ன, பெண் என்ன அனைவரும் சமம் என்பதை நீங்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.  ஆண் பிள்ளைகள், பெண் பிள்ளைகள் அனைவரையும் கட்டாயம் படிக்க வைக்க வேண்டும். கல்வி ஒன்றே அழியாத செல்வம். அதை கற்று கொடுப்பது அனைவரின் கடமையாகும். இப்பகுதியில் உயர்நிலைப்பள்ளி மட்டுமே உள்ளதாகவும், மேல்நிலைப்பள்ளி இல்லாத காரணத்தால் பெண் குழந்தைகளை அனுப்பவதில்லை எனவும், அதனால் அவர்களது பள்ளி கல்வி இடைநிற்றல் ஏற்படும் நிலை உள்ளதாக தெரிவித்தார்கள். இது தவறானது. இந்த பகுதிக்கு அருகாமையில் உள்ள எஸ்.தாதம்பட்டியில் சுமார் 200-க்கும் மேற்பட்டோர் தங்கி, உணவு, உடை உள்ளிட்ட அனைத்து வசதிகளுடன் படிக்க கூடிய வகையில் உண்டி, உறைவிடப் பள்ளி செயல்பட்டு வருகின்றது. அப்பள்ளிகளில் உங்கள் குழந்தைகளை சேர்த்து கட்டாயம் படிக்க வேண்டும்.  

எனவே, மக்களின் வளர்ச்சிக்கு எண்ணற்ற பல மக்கள் நலத்திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகின்றது. கடைக்கோடி மக்களுக்கு அரசின் திட்டங்களை முழுமையாக கொண்டு சேர்க்கும் பணியினை மாவட்ட நிர்வாகம் முனைப்போடு செயலாற்றி வருகின்றது. அத்தகைய திட்டங்களை  மக்கள் முழுமையாக பயன்படுத்தி கொள்ள வேண்டும்.

இம்மக்கள் தொடர்புத்திட்ட முகாமினை முன்னிட்டு ஏற்கனவே பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு அம்மனுக்கள் மீது உரிய தீர்வு காணப்பட்டு தகுதியான பயனாளிகளுக்கு இன்றைய தினம் நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன. மேலும், இன்றைய தினம் பொதுமக்கள் அளிக்கின்ற அனைத்து கோரிக்கை மனுக்கள் மீதும் துறை வாரியாக உரிய ஆய்வு மேற்கொள்ளப்பட்டு தகுதியான மனுக்கள் மீது உரிய தீர்வு விரைந்து காணப்படும், இவ்வாறு  மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப.,  அவர்கள் தெரிவித்தார்.

இன்றைய தினம் இம்மக்கள் தொடர்பு திட்ட முகாமில் வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையின் சார்பில் 21 பயனாளிகளுக்கு ரூ.7.56 இலட்சம் மதிப்பிலான 21 இலவச வீட்டுமனை பட்டாக்களையும், ஆதிதிராவிடர் நலத்துறையின் சார்பில் 28 பயனாளிகளுக்கு ரூ.10.08 இலட்சம் மதிப்பிலான 28 இணைய வழி பட்டாக்களையும், 31 பயனாளிகளுக்கு இருளர் சாதி சான்றிதழ்களையும், 28 பயனாளிகளுக்கு உட்பிரிவு பட்டா மாற்றம் மற்றும் பட்டா மாறுதல் உத்தரவுகளையும், 38 நபர்களுக்கு ரூ.82,500/- செலவில் பொதுவிநியோக திட்ட பொருட்கள் பெறும் வகையில் 38 மின்னணு குடும்ப அட்டைகளையும், சமூக பாதுகாப்பு திட்டத்தின்கீழ் 65 பயனாளிகளுக்கு ரூ.50.13 இலட்சம் மதிப்பீட்டில் பல்வேறு உதவித்தொகை பெறுவதற்கான ஆணைகளையும், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் சார்பில் 11 பயனாளிகளுக்கு ரூ.48500/- மதிப்பீட்டில் வேளாண் இடுபொருட்கள் மற்றும் விசைதெளிப்பான் கருவிகளையும், ஊரக வளர்ச்சி துறையின் சார்பில் 22 பயனாளிகளுக்கு ரூ.16.12 இலட்சம் செலவில் பல்வேறு நிதி உதவிகளையும், தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் சார்பில் 4 பயனாளிகளுக்கு ரூ.2.36 இலட்சம் மதிப்பீட்டில் சொட்டு நீர் பாசன மானியம் மற்றும் தக்காளி நாற்றுகளையும் என மொத்தம் 248 பயனாளிகளுக்கு ரூ.87,55,538 /- மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் வழங்கினார்கள்.

முன்னதாக, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் மக்கள் தொடர்புத்திட்ட முகாமினை முன்னிட்டு பல்வேறு துறைகளின் சார்பில் அமைக்கப்பட்டிருந்த கண்காட்சி அரங்குகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் பார்வையிட்டார்கள். பின்னர், கால்நடை பராமரிப்புத்துறை, தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப்பணிகள் திட்டம், பிற்படுத்தப்பட்டோர் மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, பழங்குடியினர் நலத்துறை, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, மீன்வளத்துறை, வேளாண் பொறியியல்துறை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகள் சார்ந்த அலுவலர்கள் அரசின் திட்டங்கள் மற்றும் அதனை பெறுவதற்கான வழிமுறைகள் குறித்து பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் திட்ட விளக்க உரையாற்றினார்கள்.

இம்மக்கள் தொடர்புத்திட்ட முகாமில் அரூர் வருவாய் கோட்டாட்சியர் திரு.இரா.இரா.விஸ்வநாதன் அவர்கள் வரவேற்புரை ஆற்றினார். மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவர் திருமதி.ம.யசோதா, அரூர் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் திருமதி.ப.பொன்மலர், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் திருமதி.எஸ்.சரளா சண்முகம், அரூர் ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர் திரு.கே.ராஜாமணி, சிட்லிங் ஊராட்சி மன்றத் தலைவர் திருமதி.எம்.மாதேஸ்வரி உட்பட உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள்,  மாவட்ட வழங்கல் அலுவலர் திரு.ஜெ.ஜெயக்குமார், தனித்துணை ஆட்சியர் சமூக பாதுகாப்புத்திட்டம் திருமதி.வி.கே.சாந்தி, மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் திருமதி.கவிதா, தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை துணை இயக்குநர் திருமதி.கே.மாலினி, பழங்குடியினர் நல மாவட்ட திட்ட அலுவலர் திரு.க.கதிர்சங்கர், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் திரு.ஐயப்பன், அரூர் வருவாய் வட்டாட்சியர் திரு.சி.கனிமொழி அரசுத்துறை அலுவலர்கள், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலக்குழு உறுப்பினர் திரு.வி.சிவராஜ் மற்றும் பயனாளிகள், பொதுமக்கள்  உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர். 

கருத்துகள் இல்லை:

Post Top Ad

நமது தகடூர் குரல் தளத்தில் உங்கள் விளம்பரங்களை குறைந்த செலவில் விளம்பரம் செய்து பயனடையுங்கள், தொடர்புக்கு: 9843 663 662 / 95 66 53 73 91.