நல்லம்பள்ளி அடுத்த கம்மம்பட்டி ஊராட்சியில் கம்மம்பட்டி காட்டுவளவு விநாயகபுரம் பகுதியில் சுமார் 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்தப் பகுதி மக்கள் அங்கு பாயும் தொப்பையாறு ஆற்றை கடந்து தருமபுரி மாவட்ட எல்லை பகுதியில் இருந்து சேலம் மாவட்டத்திற்கு அனைத்து தேவைகளுக்கும் செல்ல வேண்டிய நிலை.
மழைக்காலங்களில் இந்த ஆற்றில் அதிகப்படியான மழைநீர் பாய்வதால் ஓடை வழியாக யாரும் செல்ல முடியாத நிலை, இதனால் கடந்த காலங்களில் இப்பகுதி பாலம் கட்ட பொதுமக்கள் பலமுறை கோரிக்கை விடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை, எனவே அப்பகுதி பொதுமக்கள் தொப்பையாற்றின் ஆற்றின் குறுக்கே சிறிய பாலம் மற்றும் மண் சாலை அமைத்து பயன்படுத்தினர்.
தற்பொழுது மாவட்டம் முழுவதும் மழை பெய்வதால் தொப்பூர் சுற்று வட்டார பகுதிகளில் தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் ஆற்றில் அதிகப்படியான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த ஆற்றில் மழைக்காலங்களில் திடீரென வெள்ளம் வரும் பொழுது எந்த ஒரு நேரத்திலும் ஆற்றின் நீரின் அளவு அதிகரிப்பதால் ஆற்றை கடப்பது சிரமமாக இருந்தது.
மேலும் இந்த பகுதியில் ஆற்றின் இரு கரையும் தருமபுரி மாவட்டம் மட்டும் சேலம் மாவட்டமாக இருப்பதினால் இரண்டு மாவட்ட நிர்வாகமும் இங்கு பாலம் கட்டுவதற்காக நடவடிக்கை எடுக்க வேண்டும், என கோரி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

