இம்முகாமில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் அவர்கள் பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி, பேசும்போது தெரிவித்ததாவது: மக்கள் தொடர்பு திட்டம் முகாம் என்பது ஆண்டுதோறும் ஒவ்வொரு மாதங்களிலும் ஒவ்வொரு உயர் அலுவலரும் ஒரு கிராமத்தை தேர்வு செய்து, அக்கிராமத்தில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடத்திட நிர்ணயிக்கப்பட்டு, அதன்படி துறை அலுவலர்கள், அறிவிக்கப்பட்டுள்ள நாளில் அக்கிராமத்திற்கு நேரில் சென்று மக்களை சந்தித்து, அவர்களின் குறைகளை கேட்டறிந்து, கோரிக்கை மனுக்களை பெற்று, தகுதியான பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் முகாமாக நடத்தப்பட்டு வருகின்றது.
அரசின் திட்டங்கள் கடைக்கோடி மக்களுக்கும் கிடைக்கச் செய்வது இம்முகாமின் முக்கிய நோக்கம். இதன்படி, மாவட்ட ஆட்சித்தலைவரின் மக்கள் தொடர்பு திட்ட முகாம் இன்றைய தினம் காரிமங்கலம் வட்டம், கதிர்நாயக்கனஅள்ளி ஊராட்சி, பத்தலஅள்ளி கிராமத்தில் நடைபெறுகின்றது. இம்முகாமில் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டு உரிய பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வாகவும், இன்றைய தினம் பொதுமக்கள் அளிக்கின்ற கோரிக்கை மனுக்களை பெறுகின்ற நிகழ்வாகவும் நடைபெறுகின்றது.
ஏற்கனவே கதிர்நாயக்கனஅள்ளி ஊராட்சி, பத்தலஅள்ளி கிராமத்தில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடைபெற உள்ளதை முன்னிட்டு இதுகுறித்து பொதுமக்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு தகுதியான பயனாளிகளுக்கு இன்றைய தினம் நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன. மக்கள் தொடர்பு திட்ட முகாம்களில் துறை அலுவலர்கள் எடுத்துரைக்கின்ற அரசின் திட்டங்களை பொதுமக்கள் முழுமையாக கேட்டு அறிந்து கொள்ள வேண்டும்.
அரசின் சார்பில் எந்தெந்த துறைகளில் என்னென்ன திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன, அத்திட்டங்களை பெறுவதற்கான தகுதிகள் என்ன, அத்திட்டங்களை பெறுவதற்கு எவ்வாறு விண்ணப்பிக்க வேண்டும் போன்ற அனைத்து கருத்துகளையும், பொதுமக்கள் நன்கு கேட்டு, அறிந்து, தங்களுக்குரிய தகுதியான திட்டங்களுக்கு விண்ணப்பித்து பயன்பெற வேண்டும்.
தமிழக அரசு பல்வேறு துறைகளில் எண்ணற்ற திட்டங்கள் செயல்படுத்தி வருகின்றது. அந்தவகையில் வேளாண்மை துறை, கால்நடை பராமரிப்புத்துறை, பட்டு வளர்ச்சித்துறை, தோட்டக்கலைத்துறை, சமூக நலத்துறை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை என அனைத்து துறைகளிலும் செயல்படுத்தக் கூடிய திட்டங்களை பொதுமக்கள் முழுமையாக அறிந்து கொண்டு, அத்தகைய திட்டங்களை விழிப்புணர்வோடு, மனமுவந்து, கூர்மையாக கவனித்து அரசின் திட்டங்கள் பற்றி பொதுமக்கள் நன்கு அறிந்து கொண்டு அரசின் திட்டங்களை பெற்று பயன்பெற வேண்டும்.
அதுமட்டுமல்லாமல் அரசு துறைகளில் செயல்படுத்தப்பட்டுள்ள திட்டங்கள் குறித்து கடைநிலையில் பணியாற்றுகின்ற அரசு பணியாளர்கள் தங்கள் துறையில் செயல்படுத்துகின்ற திட்டங்கள் மட்டுமல்லாது, ஏனைய பிற துறைகளிலும் செயல்படுத்துகின்ற திட்டங்கள் பற்றி முழுமையாக அறிந்து கொண்டு, அத்தகைய திட்டங்கள் குறித்து தாங்கள் பணியாற்றும் பகுதிகளில் உள்ள பொதுமக்களுக்கு எடுத்துக்கூறி, விழிப்புணர்வு ஏற்படுத்தி அரசின் திட்டங்களை மக்கள் பயன்பெறுவதற்கு உறுதுணையாக நீங்கள் பணியாற்றிட வேண்டும்.
இம்மக்கள் தொடர்புத்திட்ட முகாமினை முன்னிட்டு ஏற்கனவே பொதுமக்களிடமிருந்து 110-க்கும் மேற்பட்ட கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு அம்மனுக்கள் மீது உரிய தீர்வு காணப்பட்டு தகுதியான பயனாளிகளுக்கு இன்றைய தினம் நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன. மேலும், இன்றைய தினம் பொதுமக்கள் அளிக்கின்ற அனைத்து கோரிக்கை மனுக்கள் மீதும் துறை வாரியாக உரிய ஆய்வு மேற்கொள்ளப்பட்டு தகுதியான மனுக்கள் மீது உரிய தீர்வு விரைந்து காணப்படும்.
தமிழ்நாடு அரசு மக்களின் வாழ்க்கைத்தர மேம்பாட்டிற்கும், வாழ்வாதார உயர்விற்கும் எண்ணற்ற பல மக்கள் நலத்திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகின்றது. அத்தகைய திட்டங்களை மக்களுக்கு முழுமையாக கொண்டு சேர்க்கும் பணியினை மாவட்ட நிர்வாகம் முனைப்போடு செயலாற்றி வருகின்றது. அத்தகைய திட்டங்களில் மக்கள் தங்களுக்கு தகுதியான திட்டங்களை அறிந்து, அத்தகைய திட்டங்களுக்கு விண்ணப்பித்து, பயன்பெற்று தங்கள் வாழ்வை வளமாக்கி கொள்ள வேண்டும். இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் தெரிவித்தார்.
இன்றைய தினம் இம்மக்கள் தொடர்பு திட்ட முகாமில் வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையின் சார்பில் 7 பயனாளிகளுக்கு ரூ.2.10 இலட்சம் மதிப்பிலான இலவச வீட்டுமனை பட்டாக்களையும், 18 பயனாளிகளுக்கு இருளர் சாதி சான்றிதழ்களையும், 12 மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.14.40 இலட்சம் செலவில் மாதாந்திர உதவித்தொகை பெறுவதற்கான உத்தரவு ஆணைகளையும், 21 பயனாளிகளுக்கு ரூ.25.20 இலட்சம் செலவில் முதியோர் உதவித்தொகை பெறுவதற்கான உத்தரவு ஆணைகளையும், 10 பயனாளிகளுக்கு ரூ.12.00 இலட்சம் செலவில் விதவை உதவித்தொகை பெறுவதற்கான உத்தரவு ஆணைகளையும், 9 பயனாளிகளுக்கு ரூ.10.80 இலட்சம் செலவில் ஆதரவற்ற விதவை உதவித்தொகை பெறுவதற்கான உத்தரவு ஆணைகளையும், 8 பயனாளிகளுக்கு ரூ.64,000/- திருமண நிதி உதவியும், 26 பயனாளிகளுக்கு ரூ.5.85 இலட்சம் இயற்கை மரண நிதி உதவியும், 5 பயனாளிகளுக்கு வாரிசு சான்றிதழ்களையும், 4 பயனாளிகளுக்கு சிறு, குறு விவசாயிக்கான சான்றிதழ்களையும், 22 பயனாளிகளுக்கு பட்டா மாறுதல் உத்தரவுகளையும், 23 பயனாளிகளுக்கு உட்பிரிவு பட்டா மாறுதல் உத்தரவுகளையும், வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறையின் சார்பில் 87 பயனாளிகளுக்கு ரூ.4.79 இலட்சம் மதிப்பீட்டில் நியாய விலைக்கடை பொருட்கள் வாங்குவதற்கான புதிய மின்னணு குடும்ப அட்டைகளையும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 4 மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.26,800/- மதிப்பிலான சிறப்பு சக்கர நாற்காலி மற்றும் காதொலி கருவிகளையும், பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பில் 8 பயனாளிகளுக்கு ரூ.40,792/- மதிப்பிலான இலவச தையல் இயந்திரங்கள் மற்றும் இலவச சலவை பெட்டிகளையும், தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் சார்பில் 3 பயனாளிகளுக்கு தேசிய தோட்டக்கலை இயக்கத்தின் சார்பில் ரூ.94,291/- மதிப்பிலான தக்காளி நாற்றுகள், மா ஒட்டுச்செடிகள் மற்றும் நுண்ணீர் பாசன திட்ட கருவிகளையும், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் சார்பில் 7 விவசாயிகளுக்கு ரூ.16,916/- மதிப்பீட்டிலான விதை மற்றும் உயிர் உரங்களையும், தமிழ்நாடு மாநில ஊரக / நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் (மகளிர் திட்டம்) சார்பில் 31 மகளிருக்கு ரூ.9.30 இலட்சம் வங்கி கடன் உதவிக்கான காசோலைகளையும், ஆதிதிராவிடர் நலத்துறையின் சார்பில் பயனாளிகளுக்கு ரூ.8.10 இலட்சம் மதிப்பீட்டிலான இலவச இணைய வழி பட்டாக்களையும் என மொத்தம் 332 பயனாளிகளுக்கு ரூ.94,96,299/- மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் வழங்கினார்கள்.
முன்னதாக, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் மக்கள் தொடர்புத்திட்ட முகாமினை முன்னிட்டு பல்வேறு துறைகளின் சார்பில் அமைக்கப்பட்டிருந்த கண்காட்சி அரங்குகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் பார்வையிட்டார்கள். இதனை தொடர்ந்து, கால்நடை பராமரிப்புத்துறை, தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப்பணிகள் திட்டம், பிற்படுத்தப்பட்டோர் மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, பழங்குடியினர் நலத்துறை, கூட்டுறவுத்துறை, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம், மாவட்ட தொழில் மையம், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகள் சார்ந்த அலுவலர்கள் அரசின் திட்டங்கள் மற்றும் அதனை பெறுவதற்கான வழிமுறைகள் குறித்து பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் திட்ட விளக்க உரையாற்றினார்கள்.
இம்மக்கள் தொடர்புத்திட்ட முகாமில் தருமபுரி சார் ஆட்சியர் திருமதி.சித்ரா விஜயன் இஆப., அவர்கள் வரவேற்புரை ஆற்றினார். மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவர் திருமதி.ம.யசோதா, மொரப்பூர் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் திருமதி.சுமதி, கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர் மரு.சி.இளங்கோவன், தனித்துணை ஆட்சியர் சமூக பாதுகாப்புத்திட்டம் திருமதி.வி.கே.சாந்தி, தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை துணை இயக்குநர் திருமதி.கே.மாலினி, பழங்குடியினர் நல மாவட்ட திட்ட அலுவலர் திரு.க.கதிர்சங்கர், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் திரு.ஐயப்பன், காரிமங்கலம் வருவாய் வட்டாட்சியர் திரு.ஜெ.சுகுமார், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் திரு.கா.தனபால், மொரப்பூர் ஊராட்சி ஒன்றியக் குழு துணைத்தலைவர் திரு.சி.பெருமாள், கதிர்நாயக்கன அள்ளி ஊராட்சி மன்றத் தலைவர் திருமதி.எஸ்.கவிதா உட்பட உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசுத்துறை அலுவலர்கள், பயனாளிகள், பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

