Type Here to Get Search Results !

மாவட்ட ஆட்சியர் செய்தி

தருமபுரி மாவட்ட அனைத்து வங்கிகள் சார்பில் நடைபெற்ற வங்கி கடன் வழங்கும் விழா.

தருமபுரி மாவட்டத்தின் வளர்ச்சிக்கு அனைத்து வங்கிகளும் உறுதுணையாக இருந்து விவசாயிகள், புதிய தொழில் முனைவோர்கள், மகளிர் சுய உதவிக்குழுக்கள், பொது மக்கள் உள்ளிட்ட அனைவருக்கும் அதிகளவில் வங்கி கடன் உதவிகளை வழங்க வேண்டும். 

75-வது சுதந்திர தின விழா "சுதந்திர திருநாள் அமுதப்பெருவிழாவை"  முன்னிட்டு, தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டம், அதியமான் கோட்டை ஊராட்சியில் உள்ள வள்ளல் அதியமான் கோட்டத்தில் தருமபுரி மாவட்ட அனைத்து வங்கிகள் சார்பில் இன்று நடைபெற்ற வங்கி கடன் வழங்கும் விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ச.திவ்யதர்சினி இ.ஆ.ப., அவர்கள் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ச.திவ்யதர்சினி இஆப., அவர்கள் பயனாளிகளுக்கு வங்கிகடன் உதவிகளை வழங்கி பேசினார்கள்.

75-வது சுதந்திர தின விழா "சுதந்திர திருநாள் அமுதப்பெருவிழாவை" முன்னிட்டு, தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டம், அதியமான் கோட்டை ஊராட்சியில் உள்ள வள்ளல் அதியமான் கோட்டத்தில் தருமபுரி மாவட்ட அனைத்து வங்கிகள் சார்பில் வங்கி கடன் வழங்கும் விழா இன்று (08.06.2022) நடைபெற்றது. இவ்விழாவிற்கு தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் மரு.டி.என்.வி.எஸ்.செந்தில்குமார் அவர்கள், தருமபுரி சட்ட மன்ற உறுப்பினர் திரு.எஸ்.பி.வெங்கடேஷ்வரன் அவர்கள் ஆகியோர் முன்னிலை உரையாற்றினர்.

இவ்விழாவிற்கு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ச.திவ்யதர்சினி இ.ஆ.ப., அவர்கள் தலைமையேற்று, பயனாளிகளுக்கு வங்கிகடன் உதவிகளை வழங்கி,
பேசும்போது தெரிவித்ததாவது: மக்களிடமோ, தொழில் பணியாளர்களிடமோ,
சுதந்திர இந்திய திருநாட்டின், 75-வது சுதந்திர தின விழா "சுதந்திர திருநாள் அமுதப்பெருவிழாவை" இந்த வருடம் கொண்டாடப்பட்டு வருவதை முன்னிட்டு, இந்தியா முழுவதும் உள்ள அனைத்து மாநிலங்களிலும் உள்ள அனைத்து மாவட்டங்களில் இன்றைய தினம் வங்கி கடன் வழங்கும் விழா நடைபெற்று வருகின்றது. 

இதனை தொடர்ந்து, தருமபுரி மாவட்டத்தின் அனைத்து வங்கிகள் சார்பில் வங்கி கடன் வழங்கும் விழா இன்று நடைபெறுகிறது. வங்கிகளின் சேவை இன்றைய காலக்கட்டத்தில் மிக முக்கியமான ஒன்றாகும். அத்தகைய வங்கிகள் நிறுவனங்களிடமோ, வியாபாரிகளிடமோ, ஓய்வூதியதாரர்களிடமோ எங்களுடைய வங்கியில் உங்களுடைய பணத்தை நிரந்தர வைப்புத்தொகையாக (Fixed Deposit) சேமியுங்கள் என்று கூறுகின்ற வங்கியாளர்கள் அதேபோல் தங்கள் வங்கிகளுக்கு கடன் உதவிகள் வேண்டி வருகின்ற வாடிக்கையாளர்களுக்கும் முறையாக கடன் உதவிகளையும் வழங்க வேண்டும். 

வங்கிகளுக்கு வாடிக்கைதாரர்களிடம் வங்கியாளர்கள் இன்முகத்தோடு அவர்களை வரவேற்று அவர்களின் கோரிக்கைகள் என்ன என்பதை கேட்டறிந்து அதனையும் நிறைவேற்றிட முன்வர வேண்டும். வங்கி தொழில் என்பது வைப்புத்தொகையை (deposits) பெறுவதற்காக மட்டுமே இயங்க முடியாது.

பெறுகின்ற வைப்புத்தொகைகளை கொண்டு ஒவ்வொரு வங்கியின் விதிமுறைகளுக்கு ஏற்றவாறு வாடிக்கையாளர்களுக்கு கடனுதவிகளை வழங்குவதையும் முழுமையாக செயல்படுத்தினால் தான் அவ்வங்கி சிறப்பாக
இயங்கும், நல்ல வளர்ச்சி அடையும். அவ்வாறு வங்கிகள் வளர்ச்சி அடைந்தால்
தான் கூடுதலாக வைப்புத்தொகைகளையும் பெற முடியும், அதற்கேற்றார்போல் அதிக கடனுதவிகளையும் வழங்க முடியும்.

தருமபுரி மாவட்டத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமை அன்று நடைபெறுகின்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், மாதந்தோறும் நடைபெறுகின்ற விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் உள்ளிட்ட பல்வேறு கூட்டங்களுக்கு வருகின்ற பொதுமக்கள், விவசாயிகள், வியாபாபரிகள், புதிய தொழில் முனைவோர்கள் உள்ளிட்ட அனைவரும் நாங்கள் வங்கிக்கு செல்லும் பொழுது எங்களது கோரிக்கைகளை வங்கியாளர்கள் முழுமையாக கேட்கவில்லை என்ற குறைகளை தெரிவித்து வருகின்றார்கள். 

இதனை வங்கியாளர்கள் முற்றிலும் தவிர்த்து வாடிக்கையாளர்களை நம்பி வங்கிகள் செயல்படுகின்றன என்பதை உணர்ந்து வாடிக்கையாளர்களின் குறைகளை, கோரிக்கைகளை கனிவுடன் கேட்டு, மனநிறைவுடன் அவற்றை நிறைவேற்றிட வேண்டும். தருமபுரி மாவட்டத்தில் தொழில் வளர்ச்சி மிக மிக குறைவாக உள்ளது. 

அப்படிப்பட்ட தொழில் வளர்ச்சியில் பின்தங்கிய மாவட்டமான தருமபுரி மாவட்டத்தில் புதிய தொழில்களை தொடங்க உள்ள தொழில் முனைவோர்களுக்கும், படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கும் தொழில் தொடங்குவதற்கான கடனுதவிகளை அதிகளவில் வழங்க வேண்டும். இது தருமபுரி மாவட்டத்தின் தொழில் வளர்ச்சிக்கு மிக மிக முக்கியமான ஒன்றாகும்.

ஆண்டுதோறும் வழங்க வேண்டிய கடன் அளவு குறித்து கடன் திட்ட அறிக்கையை வெளியிட்டு வருகின்றோம். கடந்த ஆண்டு (2021-2022) தருமபுரி மாவட்டத்தில் ரூ.6,305.11 கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டதில் ரூ.7,457.58 கோடி கடனுதவிகள் வழங்கி 118.27 சதவிகிதம் கடனுதவிகள் வழங்கப்பட்டு இலக்கினை மிஞ்சி சாதனை படைக்கப்பட்டுள்ளது. இதில் வேளாண்மை மற்றும் வேளாண் சார்ந்த கடனுதவிகள் கடந்த ஆண்டு (2021-2022) ரூ.4,496.95 கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டதில் ரூ.5,247.65 கோடி கடனுதவிகள் வழங்கப்பட்டு 116.69 சதவிகதிதம் கடனுதவிகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு ரூ.792 கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டதில் ரூ.636.14 கோடி கடனுதவிகள் வழங்கப்பட்டு 80.32 சதவிகதிதம் கடனுதவிகள் வழங்கப்பட்டுள்ளன. இதர முன்னுரிமை உள்ள கடனுதவிகள், இதர முன்னுரிமையற்ற கடன் உதவிகள் வழங்க கடந்த ஆண்டு ரூ.1,016.16 கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டதில் ரூ.1,573.79 கோடி கடனுதவிகள் வழங்கப்பட்டு 154.87 சதவிகதிதம் கடனுதவிகள் வழங்கப்பட்டுள்ளன. 

இந்த ஆண்டு ரூ.7,500 கோடி அளவிற்கு தருமபுரி மாவட்டத்தில் அனைத்து வங்கிகளின் சார்பில் கடனுதவிகள் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தருமபுரி மாவட்டத்தில் 77 பொதுத்துறை வங்கி கிளைகளும், 36 பொதுத்துறை வங்கிகளின் ஊரக கிளைகளும், 40 தனியார் வங்கி கிளைகளும், 16 தனியார் வங்கிகளின் ஊரக கிளைகளும், 25 மண்டல ஊரக வங்கி கிளைகளும், 17 மண்டல ஊரக வங்கியின் ஊரக கிளைகளும் என மொத்தம் 142 வணிக வங்கிகளும், 69 ஊரக கிளை வங்கிகளும் மற்றும் தருமபுரி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் சார்பில் 21 மத்திய கூட்டுறவு வங்கி கிளைகளும், 9 மத்திய கூட்டுறவு வங்கியின் ஊரக கிளைகளும், தமிழ்நாடு தொழில் முதலீட்டுக்கழகமும் என் மொத்தம் 164 பொதுத்துறை, தனியார் வங்கி கிளைகளும், 78 பொதுத்துறை, தனியார் வங்கிகளின் ஊரக கிளைகளும் செயல்பட்டு வருகின்றன.

நமது தருமபுரி மாவட்டத்திற்கு மிக, மிக முக்கியமான விஷயம் தற்போது ஏராளமான இளைஞர்கள், படித்து முடித்துவிட்டு வெளியில் வருகின்றார்கள். தருமபுரி மாவட்டத்தை பொறுத்தவரையில் பிற மாவட்டங்களை காட்டிலும் அதிகம் படித்த இளைஞர்கள் உள்ள மாவட்டம் என்ற நிலையை பெற்றம் படிப்பவர்களின் சதவிகிதம் உயர்ந்துள்ளது. கல்வியில் சிறந்த மாவட்டமாக தருமபுரி மாவட்டம் விளங்கி வருகின்றது. 

எனவே படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் அதிகளவில் தொழில் தொடங்க வங்கியாளர்கள் அவர்களுக்கு தேவையான கடனுதவிகளை வழங்க முன்வர வேண்டும். தொழில் முனைவோரை ஊக்குவிக்கும் வகையில் அரசு அறிவித்து செயல்படுத்தி வருகின்ற மானியத்துடன் கூடிய கடனுதவிகள் வழங்கம் பல்வேறு திட்டங்கள், புதிய தொழில் முனைவோர் மேம்பாட்டிற்காக மாவட்ட தொழில் மையம் மூலம் பாரத பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் (PMEGP), படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு உருவாக்கும் (UYEGP) திட்டம் போன்ற பல்வேறு திட்டங்களின் கீழ் தேவையான கடன் உதவிகளை வங்கிகள் முறையாக வழங்கி, தொழில் முனைவோரை ஊக்குவித்து தருமபுரி மாவட்டம் தொழில் வளம் நிறைந்த மாவட்டமாக உருவாகுவதற்கு வங்கியாளர்கள் உதவிட வேண்டும். 

கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்து உயர்கல்வி பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு தேவையான கல்விக்கடன் வழங்குவதற்கு அனைத்து வங்கிகளும் முன்னுரிமை அளித்திட வேண்டும். குறைந்த முதலீட்டில் சிறு தொழில் செய்து வருகின்ற தொழில் நிறுவனங்கள், வியாபாரிகள் அவர்களின்
தேவைக்கேற்றவாறு வங்கிகள் கடனுதவிகள் வழங்கினால் அவர்களின் தொழில் மற்றும் வியாபாரங்கள் மேம்படுவதோடு, பொருளாதார வளர்ச்சியும் மேம்படும், வங்கிகளில் பெற்ற கடனை முறையாக திருப்பி செலுத்துவதற்கும் நல்ல வாய்ப்பாக இது அமையும். அதேபோல நமது தருமபுரி மாவட்ட ட்டத்தை
பொறுத்தவரையில் ஆதிதிராவிடர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர், விளிம்பு நிலையில் உள்ள மக்களுக்கும் வங்கிகள் அதிகளவில் கடனுதவிகள் வழங்க முன்வர வேண்டும். 


பொதுமக்கள் வங்கிகளில் உள்ள காப்பீட்டு திட்டங்கள் குறித்து அறிந்து கொள்ள வேண்டும். அதேபோல வங்கியாளர்களும் வருகின்ற வாடிக்கையாளர்களுக்கு வங்கியின் காப்பீட்டு திட்டங்கள் குறித்து எடுத்துரைத்து அவர்களை அத்தகைய காப்பீட்டுத்திட்டத்தில் இணைத்துக்கொள்ள செய்ய வேண்டும். காப்பீட்டுத்தொகை சந்தா தொகை மிக மிக குறைவு. ஆனால், நமக்கு எதிர்பாராதவிதமாக ஏதேனும் பாதிப்புகள் ஏற்பட்டால் இதுபோன்ற காப்பீட்டு திட்டங்களின் மூலம் கிடைக்கின்ற பலன்கள் மிக அதிகமாக இருக்கும்.

எனவே, தருமபுரி மாவட்டத்தின் வளர்ச்சிக்கு அனைத்து வங்கிகளும் உறுதுணையாக இருந்து விவசாயிகள், புதிய தொழில் முனைவோர்கள், மகளிர் சுய உதவிக்குழுக்கள், பொது மக்கள் உள்ளிட்ட அனைவருக்கும் அதிகளவில் வங்கி கடன் உதவிகளை வழங்க முன்வர வேண்டும் என இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ச.திவ்யதர்சினி இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்.

இவ்விழாவில் தருமபுரி மாவட்டத்தில் உள்ள பொதுத்துறை வங்கிகள் மற்றும் தனியார் வங்கிகள் என மொத்தம் 18 பல்வேறு வங்கிகளின் சார்பில் 1,278 பயனாளிகளுக்கு ரூ.40.96 கோடி வேளாண் சார்ந்த கடன் உதவிகளும், 461 பயனாளிகளுக்கு ரூ.21.15 கோடி சிறு குறு தொழில் நிறுவனங்கள் கடன் உதவிகளும், 58 பயனாளிகளுக்கு ரூ.17.80 கோடி வீட்டு கடன்கள், வாகன கடன்கள் மற்றும் இதர தனி நபர் கடன் உதவிகளும் என மொத்தம் 1,797 பயனாளிகளுக்கு ரூ.79.91 கோடி மதிப்பீட்டிலான பல்வேறு வகையான கடன் உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ச.திவ்யதர்சினி இ.ஆ.ப., அவர்கள் இன்று வழங்கினார்கள்.

மேலும், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ச.திவ்யதர்சினி இ.ஆ.ப., அவர்கள் தருமபுரி மாவட்டத்தில் கடந்த ஆண்டு மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு அதிகளவில் கடன் உதவிகள் வழங்கி சிறப்பிடம் பெற்றமைக்காக இந்தியன் வங்கிக்கு கேடயம் பரிசாகவும், இந்தியன் வங்கியின் ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனத்தின் தருமபுரி பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்று பல்வேறு தொழில்களை சிறப்பாக மேற்கொண்டு வரும் 7 நபர்களுக்கு பரிசுகளையும் வழங்கினார்கள்.

இவ்விழாவில் மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் திருமதி.ம.யசோதா, நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் திருமதி. பெ.மகேஸ்வரி, ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர் திரு. முருகன், அதியமான்கோட்டை ஊராட்சி மன்றத் தலைவர் திருமதி. பெ.மாரியம்மாள், இந்தியன் வங்கியின் மண்டல மேலாளர் திருமதி.பத்மாவதி ஸ்ரீகாந்த், பாரத ஸ்டேட் வங்கியின் மண்டல மேலாளர் திரு.ராஜா, இந்தியன் வங்கியின் தருமபுரி மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் திரு.கே.கண்ணன், மாவட்ட தொழில் மையம் பொது மேலாளர் திரு.அசோகன், நபார்டு வங்கியின் மாவட்ட வளர்ச்சி மேலாளர் திரு. பிரவீன் பாபு, நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றிய வட்டார திருமதி.மு.ஷகிலா, திருமதி.கௌரி உட்பட பயனாளிகள் கலந்துகொண்டனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

🌟 வேள்பாரி சர்வதேச விருதுகள் 2025 | இன்றே விண்ணப்பிக்கவும், கடைசி நாள் 15 ஆகஸ்ட் 2025 மேலும் விவரங்களுக்கு அழைக்கவும் : 9843 663 662 / 882 5531 884