Type Here to Get Search Results !

ஜனநாயகப் போராட்டங்களுக்கு அனுமதி மறுப்பதா? காவல்துறைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட குழுக் கூட்டம் (22.06.2022) இன்று தருமபுரியில் நடைபெற்றது, மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.கிரைசாமேரி தலைமை தாங்கினார். மாநில குழு உறுப்பினர் டி.ரவீந்திரன் சிறப்புரையாற்றினார். மாவட்ட செயலாளர் அ.குமார் அறிக்கை சமர்ப்பித்தார். கூட்டத்தில் பின்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன:

தருமபுரி மாவட்டத்தில் சமீப காலமாக ஜனநாயக முறைப்படி நடைபெறும் ஆர்ப்பாட்டங்களுக்கு காவல்துறை அனுமதி மறுப்பது வாடிக்கையாக உள்ளது. பாலக்கோடு அருகிலுள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆர்எஸ்எஸ் பயிற்சி முகாம் நடைபெற்றது. மாநில அரசின் வழிகாட்டுதலுக்குப் புறம்பான இச்செயலைக் கண்டித்து சமூக நல்லிணக்க மேடை சார்பில் தருமபுரி பிஎஸ்என்எல் அலுவலகம் எதிரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம், தொப்பூர் பகுதியில் தலித் இளைஞர்கள் மீது நடைபெற்ற தாக்குதலைக் கண்டித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கட்சி சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம், ஒன்றிய அரசின் அக்னி பாத் திட்டத்தை எதிர்த்து கட்சி நடத்திய ஆர்ப்பாட்டம் ஆகியவற்றுக்கு அனுமதி மறுத்து கட்சியின் மாவட்டக்குழு அலுவலகத்தில் காவல்துறை நோட்டீஸ் ஒட்டப்பட்டது.

ஆர்ப்பாட்டத்தால் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படும் என்று  அனுமதி மறுக்கப்படுகிறது என காவல் துறை நோட்டீஸ் குறிப்பிடுகிறது, கடந்த ஆட்சியில் கொரோனாவைக் காரணம் காட்டி அனுமதி மறுக்கப்பட்டது. தற்போது பொருத்தமற்ற காரணங்களைக் கூறி அனுமதி மறுக்கப்படுகிறது. ஆட்சி மாறினாலும் காவல்துறையின் காட்சி மாறவில்லை என்பதையே இது காட்டுகிறது. ஜனநாயக ரீதியாக நடைபெறும் போராட்டங்களைத் தடை செய்வது அரசியல் சாசனம் வழங்கியுள்ள அடிப்படை உரிமையைப் பறிப்பதாகும். இதனை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாக கண்டிக்கிறது. இத்தகைய போக்கைக் காவல்துறை கைவிட வேண்டுமென மாவட்டக்குழு வலியுறுத்துகிறது.

 மேகேதாட்டில் அணை  கட்டுவதைக் கைவிட வேண்டும், காவிரியின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் அணை கட்ட கர்நாடக அரசு தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த அணைக்கட்டு திட்டத்தினால் காவிரி டெல்டா விவசாயம் முற்றிலும் அழிந்து போகும், காவிரி நீரைக் குடிநீருக்காக நம்பி இருக்கும் 28 மாவட்டங்கள் பெருமளவுக்கு பாதிக்கப்படும். எனவே காவிரியின் குறுக்கே மேகேதாட்டுவில் அணை கட்டும் முயற்சியைக் கர்நாடக அரசு கைவிடவேண்டும், ஒன்றிய அரசு இதனைத் தடுத்து நிறுத்த வேண்டுமென இக்கூட்டம் வலியுறுத்துகிறது.

மக்கள் கோரிக்கை மாநாடு ஜூலை 22 அன்று தருமபுரியில் மக்கள் கோரிக்கைகளை முன்வைத்து மாநாடு நடைபெறுகிறது. நீராதார மேம்பாட்டுத் திட்டங்களை நிறைவேற்றிட, மாவட்டத்தை தொழில் மயமாக்கிட வலியுறுத்தி நடைபெறும்  இம்மாநாட்டில் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்கிறார்கள்.  மாநாட்டை வெற்றிகரமாக நடத்துவது என இக்கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies