நடமாடும் தக்காளி கூழாக்கும் இயந்திரத்தின் செயல்பாட்டினை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 15 மே, 2022

நடமாடும் தக்காளி கூழாக்கும் இயந்திரத்தின் செயல்பாட்டினை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள்.

தருமபுரி மாவட்டம், தருமபுரி வட்டம், பச்சினம்பட்டி, கடகத்தூர் கூட்ரோட்டில் கடந்த 13.05.2022 அன்று மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ச.திவ்யதர்சினி இஆப., அவர்கள் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை - வேளாண்மை விற்பனை மற்றும் வணிகத்துறையின் நடமாடும் தக்காளி கூழாக்கும் இயந்திரத்தின் செயல்பாட்டினை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள். 

பின்னர் இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது:-

தருமபுரி மாவட்டத்தில்  ஆண்டிற்கு சராசரியாக 2460 ஹெக்டர் பரப்பளவில் தக்காளி சாகுபடி செய்யப்பட்டு 58,400 மெட்ரிக் டன் தக்காளி உற்பத்தி செய்யப்படுகின்றது.  தக்காளி விலை வீழ்ச்சி ஏற்படும் காலங்களில் விவசாயிகளை விலை வீழ்ச்சியிலிருந்து பாதுகாக்கும் நோக்கில் வயல்களுக்கு நேரடியாக சென்று தக்காளி மதிப்புக் கூட்டும் பொருட்களான தக்காளி ஜாம், கூழ், சாறு போன்றவை தயாரிப்பு செய்திட வேளாண்மை  மற்றும் உழவர் நலத்துறையின் வேளாண்மை  விற்பனை மற்றும் வணிகத்துறை மூலம் தேசிய வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தின் கீழ்  ரூ.80.00 இலட்சம் மதிப்பீட்டில் தருமபுரி மாவட்டத்திற்கு இரண்டு நடமாடும் தக்காளி கூழாக்கும் இயந்திரம் வழங்கப்பட்டது. அவற்றில் ஒரு நடமாடும் தக்காளி கூழாக்கும் இயந்திரம் தருமபுரி மாவட்டம், பாலக்கோடு மருதம் உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்திற்கு பிப்ரவரி 2022 முதல் மூன்று வருடங்களுக்கு ஒப்பந்த வாடகைக்கு வழங்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளது. மற்றொரு நடமாடும் தக்காளி கூழாக்கும் இயந்திரம் தருமபுரி மாவட்டத்தின் அருகமையில் உள்ள கிருஷ்ணகிரி மாவட்டத்திலும் அதிக அளவில் தக்காளி உற்பத்தியாவதை முன்னிட்டு கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு அனுப்பப்பட்டு பயன்பாட்டில் உள்ளது.  

தருமபுரி மாவட்டத்தில் தக்காளி சகுபடி செய்யும் விவசாயிகளின் வருவாயை அதிகரித்திடவும், தக்காளி அதிக அளவில் உற்பத்தியாகும்போது அவ்விவசாயிகளுக்கு தக்காளிக்கான உரிய விலை கிடைத்திடவும், வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறையின் நடமாடும் தக்காளி கூழாக்கும் இயந்திரத்தினை பயன்படுத்தி தக்காளிகளை மதிப்பு கூட்டுப் பொருட்களாக மாற்றி விற்பனை செய்தால் அதிக இலாபம் கிடைக்கும். இதனால் தக்காளி வினாகுவதை தடுத்து அதிக விலைக்கு விற்பனை செய்து அதிக இலாபம் ஈட்டிடலாம். இதன் மூலம் விவசாயிகளுக்கு அதிக வருவாய் கிடைக்கும். தருமபுரி மாவட்டத்தில் தக்காளி சகுபடி செய்யும் விவசாயிகள் நடமாடும் தக்காளி கூழாக்கும் இயந்திரத்தினை பயன்படுத்தி தக்காளி பழங்களை மதிப்பு கூட்டுப் பொருட்களாக மாற்றி விற்பனை செய்து அதிக வருவாய் ஈட்டலாம்.

இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ச.திவ்யதர்சினி, இஆப., அவர்கள் தெரிவித்தார்கள்.

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டம், தண்டுகாரனஹள்ளி ஊராட்சி, கொண்டசாமனஹள்ளி பகுதியில் உள்ள மருதம் உழவர் உற்பத்தி நிறுவனம் தருமபுரி சுற்று வட்டார பகுதிகளில் உள்ள படித்த சமூக ஆர்வமுள்ள இளைஞர்களால் கடந்த 17.10.2021 இல் பதிவு செய்யப்பட்ட ஒரு இந்திய அரசு சாரா நிறுவனமாகும். இந்நிறுவனம் தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.40.00 இலட்சம் திட்ட மதிப்பீட்டில் செயல்பட்டு வருகின்றது. இந்த மருதம் உழவர் உற்பத்தி நிறுவனத்தில் 450 விவசாயிகள் உறுப்பினர்களாக உள்ளனர். இது ஒரு உணவு பதப்படுத்தும் நிறுவனமாகும், இந்நிறுவனம் இயற்கை மற்றும் சுவையான பழங்களின் ப்யூரி, சாஸ், ஜாம் மற்றும் ஜூஸ் ஆகியவற்றை உற்பத்தி செய்து வருகின்றது. 

இந்த மருதம் உழவர் உற்பத்தி நிறுவனம் வேளாண்மை விற்பனை மற்றம் வணிகத்துறையின் நடமாடும் தக்காளி கூழாக்கும் இயந்திரத்திம் கடந்த பிப்ரவரி 2022 ஆம் மாதம் முதல் மூன்று வருடங்களுக்கு ஒப்பந்த வாடகைக்கு வழங்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளது. ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த தக்காளி கூழாக்கும் இயந்திரத்தின் மூலம் தக்காளி ஜாம், சோயா சாஸ், பச்சை மிளகாய் சாஸ், மிக்ஸ்டு ஃப்ரூட் ஜாம் போன்ற மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களை உற்பத்தி செய்து விற்பனை செய்து வருகின்றது.

இந்த ஆய்வின்போது வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை துணை இயக்குநர் திரு.எஸ்.கணேசன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) திரு.மோகான்தாஸ் சௌமியன், தருமபுரி வருவாய் வட்டாட்சியர் திரு.தன. இராஜ ராஜன், தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் திருமதி.கோ.மாலினி, வேளாண்மை விற்பனைக்குழு செயலாலர் திரு.எம்.ராவி, தோட்டக்கலைத்துறை உதவி இயக்குநர் செல்வி.சி.சசிகலா, வேளாண்மை அலுவலர் திரு.அர்ச்சுணன், தோட்டக்கலை அலுவலர் திரு.அசோக்குமார் உட்பட தொடர்புடைய அலுவலர்கள், மருதம் உழவர் உற்பத்தி நிறுவன பிரதிநிதிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர். 

கருத்துகள் இல்லை:

Post Top Ad

நமது தகடூர் குரல் தளத்தில் உங்கள் விளம்பரங்களை குறைந்த செலவில் விளம்பரம் செய்து பயனடையுங்கள், தொடர்புக்கு: 9843 663 662 / 95 66 53 73 91.