Type Here to Get Search Results !

மாணவ, மாணவியர்கள் கல்வி கற்பதில் மட்டுமே தங்கள் முழு கவனத்தை செலுத்தி, சிறந்த கல்வியை பெற்று ஒவ்வொருவரும் உயர்ந்த நிலையை பெற்றிட வேண்டும்.

தருமபுரி மாவட்டம், தருமபுரி வட்டம், சோலைக்கொட்டாய் அரசு மேல்நிலைப் பள்ளியில் பள்ளிக்கல்வித்துறையின் தருமபுரி மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி திட்டத்தின் சார்பில் மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சி இன்று 06.04.2022 புதன்கிழமை மற்றும் நாளை 07.04.2022 வியாழக்கிழமை ஆகிய 2 நாட்கள் நடைபெறவுள்ளதை முன்னிட்டு, இக்கண்காட்சியினை மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.ச.திவ்யதர்சினி இஆப., அவர்கள் இன்று தொடங்கி வைத்து, பார்வையிட்டு தகவல்.

தருமபுரி மாவட்டம், தருமபுரி வட்டம், சோலைக்கொட்டாய் அரசு மேல்நிலைப் பள்ளியில் பள்ளிக்கல்வித்துறையின் தருமபுரி மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி திட்டத்தின் சார்பில் மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சி இன்று 06.04.2022 புதன்கிழமை மற்றும் நாளை 07.04.2022 வியாழக்கிழமை ஆகிய 2 நாட்கள் நடைபெறவுள்ளதை முன்னிட்டு, இக்கண்காட்சியினை மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.ச.திவ்யதர்சினி இஆப., அவர்கள் இன்று (06.04.2022) தொடங்கி வைத்து, பார்வையிட்டு பேசும்போது தெரிவித்ததாவது:

தருமபுரி மாவட்டத்தில் பள்ளிக்கல்வித்துறையின் தருமபுரி மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி திட்டத்தின் சார்பில் பள்ளி மாணவ, மாணவியர்கள் பங்கேற்கும் மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சி இன்று (06.04.2022) தொடங்கி நாளை (07.04.2022) ஆகிய 2 நாட்கள் நடைபெறுகின்றது. தருமபுரி மாவட்டத்தில் உள்ள 225 அரசு உயர்நிலைப்பள்ளிகள் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 9 முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு பள்ளி அளவிலான அறிவியல் கண்காட்சி 23.03.2022 முதல் 25.03.2022 வரை நடைபெற்றது. 

இதனை தொடர்ந்து, இன்று நடைபெறும் மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சியில் தருமபுரி மாவட்டத்தில் உள்ள 225 அரசு உயர்நிலைப்பள்ளிகள் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 9 முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் 1. உணவு, 2. பொருள்கள், 3. நம்மைச் சுற்றியுள்ள உயிருள்ளவைகளின் உலகம், 4. இயங்கும் பொருள்கள் மனிதர்கள் மற்றும் கருதுகோள்கள், 5. பொருள்கள் எப்படி இயங்குகின்றன?, 6. இயற்கை நிகழ்வுகள், 7. இயற்கை வளங்கள் என்ற 7 தலைப்புகளின் கீழ் 93 அறிவியல் படைப்புகளை காட்சிபடுத்தியுள்ளனர். 

அறிவியல் கண்காட்சி நடத்துவதன் உயரிய நோக்கம் மாணவர்களிடையே அறிவியல் ஆர்வத்தினை ஊக்குவித்தல், திறன்களை வெளிக்கொணர ஒரு வாய்ப்பை ஏற்படுத்தித் தருதல், தலைமைப் பண்பு, குழு மனப்பான்மை, ஆரோக்கியமான கலந்துரையாடல் மற்றும் விழிப்புணர்வையும் ஏற்படுத்துதல், செய்துணர் கற்றலை வளப்படுத்துதல், ஆராய்ச்சி மனப்பான்மையை ஏற்படுத்துதல் மற்றும் எதிர்கால விஞ்ஞானிகளை உருவாக்குவதற்கான வாய்ப்பை ஏற்படுத்துதல் போன்றவைகள் ஆகும். இத்தகைய அறிவியல் படைப்புகளை உருவாக்கியுள்ள மாணவ. மாணவியர்களுக்கு எனது பாராட்டுகள் மற்றும் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். 

மாணவ, மாணவியர்கள் கல்வி கற்கும் வயதில் கல்வி கற்பதை மட்டுமே முக்கிய குறிக்கோளாக கொண்டு பாடங்களை கற்க வேண்டும். நீங்கள் எதிர்காலத்தில் என்னவாக உருவாக போகிறீர்கள் என்பதை இப்பொழுதே மனதில் பதிய வைத்து, அதற்கான முயற்சியை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும். மாணவ, மாணவியர்களாகிய நீங்கள் உங்கள் எதிர்கால இலக்கை அடைவதற்கு பயிற்சியும், அதற்கான முழு முயற்சியும் முக்கியம் என்பதை உணர்ந்து நீங்கள் செயல்பட வேண்டும். பயிற்சியோடு முயற்சியும் இருந்தால் வெற்றி இலக்கை எளிதில் எட்ட முடியும். பயிற்றுவிக்கும் ஆசிரிய, ஆசிரியைகளிடம் பாடத்தில் ஏற்படும் சந்தேகங்களை உடனுக்குடன் கேட்டு நிவர்த்தி செய்துகொள்ள வேண்டும். அதேபோல், ஒவ்வொரு மாணவ, மாணவியரும் ஏன்? எப்படி? எதற்கு? என்பதை உணர்ந்து படித்தால் உங்கள் வாழ்வில் உயர்ந்த நிலையை நிச்சயம் அடையலாம். அதேபோல் அறிவியல் பாடம், கணிதப்பாடம், ஆங்கிலப் பாடம் போன்ற பாடங்களை படிப்பது கடினம் என்று நீங்கள் எண்ணிக்கொண்டிருக்கலாம். ஆனால், அப்பாடங்கள் அவ்வாறு கடினமானது அல்ல. ஏனெனில் உங்களுக்கு அப்பாடங்களை பயிற்றுவிக்கும் ஆசிரிய, ஆசிரியைகளும் அப்பாடங்களை எளிதில் கற்றவர்கள் தான். இத்தகைய சூழ்நிலையில் எல்லா பாடங்களும் எளிமையானது தான் என்பதை ஒவ்வொருவரும் மனதில் பதிய வைத்துக்கொள்வதோடு, அப்பாடங்களை ஏன்? எப்படி? எதற்கு? என்ற கேள்விகளை தங்கள் ஆசிரியர்களிடம் கேட்டு அப்பொழுதே அதை உணர்ந்து, அறிந்து படித்து வந்தால் அப்பாடங்கள் மிகமிக எளிமையானதாக மாறிவிடும் என்பதை நீங்கள் அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டும்.

பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர்கள் படிக்கும் இக்காலத்தில் கைப்பேசி பயன்படுத்த கூடாது. பெண்களின் திருமண வயது 18 ஆக இருந்தாலும், 21 வயதிற்கு மேல் தான் உடலாலும் உள்ளத்தாலும் பெண்கள் வளர்ச்சி அடைகின்றனர். எனவே தருமபுரி மாவட்டத்தில் குழந்தை திருமணம் என்பதே முற்றிலும் இல்லாத நிலையை உருவாக்கிட நீங்கள் உங்களின் பெற்றோர்களுக்கும், உற்றார் உறவினர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். குழந்தை திருமணம் கூடாது என்பதை எடுத்துக்கூற வேண்டும். அவ்வாறு உங்கள் பகுதியில் குழந்தை திருமணம் ஏதேனும் நடப்பது கண்டறியப்பட்டால் உடனடியாக 1091 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணிற்கு தகவல் தெரிவிக்க வேண்டும். பெண்கள் வாழ்வின் உயர்ந்த நிலையை எட்டிட மாணவியர்களாகிய நீங்கள் உங்களின் கல்வியை மேம்படுத்திக்கொள்வதோடு, சிறந்த கல்வியை கற்றிட வேண்டும். கல்வி ஒன்றே நம் இறுதி வரை நம்முடன் இருக்கும் என்பதை அனைவரும் உணர்ந்து கொள்ள வேண்டும், இவ்வாறு மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.ச.திவ்யதர்சினி இஆப., அவர்கள் தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து, மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.ச.திவ்யதர்சினி இஆப., அவர்கள் பள்ளிக்கல்வித்துறையின் தருமபுரி மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி திட்டத்தின் சார்பில் மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சியினை குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்து, இக்கண்காட்சியில் மாணவ, மாணவியர்களால் காட்சிப்படுத்தப்பட்டிருந்த அறிவியல் படைப்புகளை பார்வையிட்டு அதுகுறித்த விபரங்கள் மற்றும் விளக்கங்களை கேட்டறிந்தார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திரு.து.கணேஷ் மூர்த்தி, தருமபுரி வட்டாட்சியர் திரு.இராஜராஜன், தருமபுரி கல்வி மாவட்ட அலுவலர் திரு.டி.சண்முகவேல், பாலக்கோடு கல்வி மாவட்ட அலுவலர் திரு.ஆர்.பாலசுப்பிரமணியம், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி திட்டத்தின் தருமபுரி உதவி மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் திரு.பொ.இரவிக்குமார், சோலைக்கொட்டாய் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் திரு.எஸ்.ராஜா அண்ணாமலை உட்பட ஆசிரியர், ஆசிரியைகள் மற்றும் அறிவியல் கண்காட்சியில் பல்வேறு பள்ளிகளை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட ஆசிரியர், ஆசிரியைகள், மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies