ஏரியூரில் அமைந்துள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 900க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.
இந்நிலையில் அப்பள்ளியில் அமைந்திருந்த குடிநீர் தொட்டிகள் அனைத்தும் பழுதடைந்து, பள்ளி மாணவர்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு வந்தது. அப்பள்ளிக்கு போதிய குடிநீர் வசதி இல்லை என நீண்ட நாட்களாக அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது, இருப்பினும் எவ்வித குடிநீர் வசதிகளும் புதிதாக ஏற்படுத்தி தரப்படவில்லை.
இந்நிலையை அறிந்த இப்பள்ளியில் 2002 முதல் 2007 வரை பயின்ற முன்னாள் மாணவர்கள் சிலர் ஒன்றிணைந்து பள்ளியில் குடிநீர் தேவையை தீர்க்க முடிவெடுத்தனர். அதன்படி ஏரியூர் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு 90 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் மினி டேங்க் அமைத்து குடிநீர் இணைப்பு கொடுத்தனர்.
மினி டேங்க், பள்ளி நிர்வாகத்திடம் ஒப்படைக்கும் நிகழ்வு நேற்று நடைபெற்றது, இதில் தலைமையாசிரியர் தமிழ்வேல், துணைத் தலைமையாசிரியர் சித்தன் உள்ளிட்ட ஆசிரியர்கள் அவர்கள் கலந்துகொண்டு குடி நீர் வழங்களை துவங்கி வைத்து, முன்னாள் மாணவர்களின் நற்பணிக்கு பாராட்டுகள் தெரிவித்தார்.