தர்மபுரி மாவட்டம், அரூர் தாலுகா ஆபீசில் இன்று வீட்டுமனை பட்டா வேண்டி திருநங்கைகள் தாசில்தார் கனிமொழியிடம் புகார் மனு கொடுத்தனர். இதுகுறித்து அரூர் பகுதி திருநங்கைகளின் தலைவர் அருணா கூறுகையில் அரூர் பகுதியில் 25 திருநங்கைகள் உள்ளோம். எங்களுக்கு வீட்டுமனை பட்டா வேண்டுமென தாசில்தார், ஆர்டிஓ, கலெக்டர் ஆகியோரிடம் பலமுறை புகார் மனு கொடுத்துள்ளோம். ஆனால் எந்த ஒரு நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை.
சொந்த வீடு இல்லாததால் வாடகை வீட்டில் இருந்து வருகிறோம். மூன்று மாதத்தில் வீட்டை காலி செய்யச் சொல்லி வீட்டின் உரிமையாளர்கள் விரட்டுகின்றனர். தமிழக அரசு எங்களுக்கு தனி நல வாரியம், ரேஷன் கார்டும், ஆதார் அட்டையில் திருநங்கைகள் என திருத்தம் செய்து வழங்கி வழங்கியுள்ளது.
நாங்கள் சொந்த வீட்டில் குடியேற ஒரே இடத்தில் தொகுப்பாக வீட்டு மனை பட்டா வழங்கி அரசு உதவ வேண்டும் என அவர் தெரிவித்தார். இதுகுறித்து அரூர் தாசில்தாரிடம் கேட்டபோது விரைவில் திருநங்கைகளுக்கு வீட்டுமனைப்பட்டா வழங்கப்படும் என அவர் தெரிவித்தார்.