தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் வனப்பகுதி தமிழக கர்நாடகா வனப் பகுதிகளை இணைக்கும் முக்கிய பகுதியாக உள்ளது. கோடை காலத்தில் தண்ணீர் உணவு தேடி ஒகேனக்கல் காவிரி ஆற்றிற்கு அவ்வப்போது யானைகள் வருவது வழக்கம். தற்போது கர்நாடக மாநில வனப்பகுதியில் வறட்சி நிலவுவதால் அங்கு உள்ள யானைகள் கூட்டம் கூட்டமாக உணவு, தண்ணீர் தேடி கர்நாடக- தமிழக எல்லைப் பகுதியான தேன்கனிக்கோட்டை, ஓசூர், சானமாவு வனப் பகுதியில் சுற்றித் திரிகின்றன.
இந்த நிலையில் கர்நாடக மாநிலம் காவிரியின் எதிர் கரையான மாறுக்கொட்டாய் வனப்பகுதியில் இருந்து பிரிந்த ஒற்றை யானை நேற்றிரவு காவிரி ஆற்றையை நீந்தி கடந்து ஊட்டமலை கிராமத்துக்குள் புகுந்தது. அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் ஒற்றை யானையை மீண்டும் கர்நாடக வனப்பகுதிக்கு விரட்டியடித்தனர்.
அப்போதுஒற்றை யானை மீண்டும் ஆற்றில் நீந்தியபடி ஆற்றை கடந்து கர்நாடக வனப் பகுதிக்குள் புகுந்தது. ஆற்றைக் கடந்து ஊருக்குள் புகுந்த ஒற்றை யானையால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.