தருமபுரி மாவட்டம், பாலக்கோடு ஊராட்சி ஒன்றியம், பாடி ஊராட்சியில் கால்நடை பராமரிப்புத்துறையின் சார்பில் கால்நடைகளுக்கு 2-வது சுற்று கோமாரி நோய் தடுப்பூசி செலுத்தும் முகாமினையும், மேய்ச்சல் தரை மேம்படுத்திட தீவன மரக்கன்றுகள் நடும் பணியினையும் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ச.திவ்யதர்சினி இஆப., அவர்கள் இன்று தொடங்கி வைத்து தகவல்.
தருமபுரி மாவட்டம், பாலக்கோடு ஊராட்சி ஒன்றியம், பாடி ஊராட்சி மன்ற அலுவலகம் அருகில் கால்நடை பராமரிப்புத்துறையின் சார்பில் கால்நடைகளுக்கு 2-வது சுற்று கோமாரி நோய் தடுப்பூசி செலுத்தும் முகாமினையும், பாடி ஊராட்சி மாதிரி பள்ளியின் அருகில் மேய்ச்சல் தரை மேம்படுத்திட தீவன மரக்கன்றுகள் நடும் பணியினையும் தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி இன்று (08.11.2021) நடைபெற்றது. இம்முகாமிற்கு பென்னாகரம் சட்டமன்ற உறுப்பினர் திரு.ஜி.கே.மணி முன்னிலை வகித்தார். இம்முகாமினை தொடங்கி வைத்து மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ச.திவ்யதர்சினி இஆப., அவர்கள் பேசும் போது தெரிவித்தாவது:
தருமபுரி மாவட்டத்தில் 3,84,871 பசு மாடுகள் மற்றும் எருமை மாடுகள் உள்ளன. இவற்றில் 4 மாத வயதிற்கு மேற்பட்ட கால்நடைகளுக்கு தேசிய கால்நடை நோய் தடுப்பு திட்டத்தின் கீழ் 2-வது சுற்று கோமாரி நோய் தடுப்பூசி செலுத்த மொத்தம் 3,46,000 டோஸ்கள் கோமாரி நோய் தடுப்பூசி மருந்துகள் இருப்பு தயார் நிலையில் உள்ளது. தருமபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் இன்று (8.11.2021) முதல் 28.11.2021 முடிய 3 வார காலத்திற்கு சிறப்பு முகாம்கள் மூலமாக கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி இலவசமாக போடப்படுகின்றது.
இம்முகாம்கள் மூலமாக மாவட்டத்திலுள்ள 4 மாத வயதிற்கு மேற்ப்பட்ட அனைத்து பசு மாடுகள் மற்றும் எருமை மாடுகளுக்கும் தடுப்பூசி போடப்படுகிறது. விடுபட்ட கால்நடைகளுக்கு தடுப்பூசி பணி வருகின்ற 29.11.2021 முதல் 8.12.2021 முடிய கோமாரி நோய் தடுப்பூசி இலவசமாக போடும் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.
மேலும் விவரங்களுக்கு அருகிலுள்ள கால்நடை மருந்தகம், கால்நடை கிளை நிலையம் மற்றும் கால்நடை மருத்துவமனையை அணுகி பயன்பெறலாம். தருமபுரி மாவட்டத்தில் உள்ள கால்நடை வளர்போர் இவ்வாய்ப்பினை தவறாமல் பயன்படுத்திக் கொண்டு 100 சதவீதம் தங்களுடைய கால்நடைகளை இக்கோமாரி நோய் தடுப்பூசி முகாம்களுக்கு அழைத்துச் சென்று கட்டாயம் கோமாரி நோய் தடுப்பூசி போட்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
மேலும் கால்நடை பராமரிப்புத்துறையின் மாநில தீவன அபிவிருத்தித்திட்டம் 2021ன் கீழ் மேய்ச்சல் தரை மேம்பாட்டுத்திட்டத்தில் மேய்ச்சல் தரை மேம்படுத்திட தீவன மரக்கன்றுகள் நடும் பணியினையும் இன்று (8.11.2021) தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இதன்படி பாலக்கோடு ஊராட்சி ஒன்றியம், பாடி ஊராட்சி, செக்கோடி வருவாய் கிராமத்தில் 40 ஏக்கர் பரப்பளவில் உள்ள மேய்ச்சல் நிலத்தினை கால்நடைகள் மேய்வதற்கு உகந்த நிலமாக புதுப்பித்து அவற்றில் ரூ.6.68 இலட்சம் செலவினத்தில் தீவன மரக்கன்றுகள் மற்றும் தீவனப்பயிர்கள் பயிரிடும் பணிகள் இன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ளன.
மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டப் பணியாளர்கள் மூலம் வரப்பு அமைத்தல், பண்ணைக்குட்டை அமைத்தல், மரக்கன்றுகள் நட குழிகள் எடுத்தல் மற்றும் தொடர் பராமரிப்புப் பணிகள் மேற்கொண்டு வருதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இத்திட்டத்தில் சூபாபுல், வேம்பு, கல்யாண முருங்கை, சீமை அகத்தி, முருங்கை, வெல்வேல், அகத்தி, கொடுக்காப்புளி, பூவரசு , இலவம்பஞ்சு, புங்கன் உள்ளிட்ட மரவகைகள் 3,200 எண்ணிக்கையில் தகுந்த இடைவெளியில் நடப்படுகின்றன. முயல் மசால் மற்றும் கொழுக்கட்டைப்புல் ஆகியவையும் வளர்க்கப்பட்டு கால்நடைகளின் மேய்ச்சலுக்கு உபயோகப்படுத்தப்பட உள்ளது.