அரூர் அருகே வேப்பநத்தம் கீழானூர்
வாணியாற்றில் உயர்மட்டப் பாலம் அமைக்க கோரிக்கை
அரூரை அடுத்த வேப்பநத்தம் வாணியாற்றில் உயர்மட்டப் பாலம் அமைக்க வேண்டும் என தருமபுரி மாவட்ட ஆட்சியர் ச.திவ்யதர்சனியிடம், ஒன்றியக்குழு உறுப்பினர் கோ.முருகன் அண்மையில் கோரிக்கை மனு வழங்கியுள்ளார்.
இது குறித்த மனு விவரம் : அரூர் வட்டம், வேப்பநத்தம் கீழானூர் சாலையின் குறுக்கே வாணியாறு செல்கிறது. இந்த சாலையை கே.வேட்ரப்பட்டி, வேப்பநத்தம், கருப்பிலைப்பட்டி, எச்.ஈச்சம்பாடி உள்ளிட்ட 30 க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். மழைக் காலங்களில் வாணியாற்றில் தண்ணீர் ஓடினால் வேப்பநத்தம் கீழானூர் சாலையை கிராம மக்கள் பயன்படுத்த முடியாத நிலையுள்ளது. உயர்மட்டப் பாலம் இல்லததால் இப் பகுதி மக்கள் அரூர் திருவண்ணாமலை நெடுஞ்சாலை, அரூர்}திருப்பத்தூர் தேசிய நெடுஞ்சாலையை பயன்படுத்துவதற்கு சுமார் 15 கிலோ மீட்டர் தூரம் சுற்றிச் செல்லும் நிலையுள்ளது. இதனால், கரும்பு பாரம் ஏற்றிச் செல்லும் டிராக்டர் மற்றும் லாரி ஓட்டுநர்கள், வேளாண் விளை பொருள்களை எடுத்துச் செல்லும் விவசாயிகள் பல்வேறு இடையூறுகளை சந்திக்கின்றனர். எனவே, வேப்பநத்தம், கீழானூர் சாலையில் வாணியாற்றில் உயர்மட்டப் பாலம் அமைக்க வேண்டும் எனவும் அவரது கோரிக்கை மனுவில் குறிப்பிட்டுள்ளார்.