அரூரில் போக்குவரத்துக்கு இடையூறான பெயர் பலகைகள் பறிமுதல்.
அரூரில் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த பெயர் பலகைகள் பறிமுதல் செய்யப்பட்டன. அரூர் கடைவீதி சாலை, அரூர் சேலம் பிரதான சாலை, மஜீத்தெரு, திரு.வி.க நகர் உள்ளிட்ட நகரின் பல்வேறு இடங்களில் வணிக நிறுவனங்கள், மளிகை கடைகள், உணவகங்கள், பேக்கரிகள், ஜெராக்ஸ் கடைகள், துணிக் கடைகள் உள்ளிட்ட கடைகளின் எதிரே போக்குவரத்து இடையூறாக பெயர் பலகைகள் வைக்கப்பட்டிருப்பதாகவும், வாகன ஓட்டிகளுக்கு இடையூறாக கடைகளின் எதிரே விற்பனைக்காக பொருள்கள் வைக்கப்பட்டிருந்ததாக புகார் எழுந்தது. இதையடுத்து, அரூரில் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள பெயர் பலகைகள் உள்ளிட்ட பொருள்களை அகற்ற வேண்டும் கோட்டாட்சியர் வே.முத்தையன் உத்தரவிட்டார். அவரது உத்தரவின்படி, அரூர் பேரூராட்சியின் தூய்மைப் பணியாளர்கள் சாலையோரங்களில் போக்குவரத்து இடையூறாக இருந்த பொருள்களை பறிமுதல் செய்தனர். இதில், செயல் அலுவலர் ஆர்.கலைராணி, துப்புரவு ஆய்வாளர் கோ.சிவக்குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.