கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் அவர்களின் 150-வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கு இணங்க அன்னாரது சுதந்திர போராட்ட வரலாற்றினை விளக்கும் வகையில் அமைக்கப்பட்ட பேருந்தினை தர்மபுரி பேருந்து நிலையத்தில் பொதுமக்களுக்கு காட்சிபடுத்தும் நிகழ்வு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக சேலம் மண்டல மேலாண் இயக்குநர் திரு.ஆர்.மோகன், தர்மபுரி கோட்ட பொது மேலாளர் திரு.எஸ்.ஜீவரத்தினம், ஆகியோர் ஆலோசனைப்படி, நடைபெற்றது. தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக தர்மபுரி கோட்ட தொழில்நுட்ப மேலாளர் திரு. மோகன்குமார், தர்மபுரி கிளை மேலாளர் திரு.செல்வராஜ், உதவி பொறியாளர் திரு.சந்திரன் ஆகியோர் இப்பணிகளை மேற்கொண்டனர்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கடந்த 03.09.2021 அன்று சட்டப்பேரவையில் கப்பலோட்டிய தமிழன் வ.உசிதம்பரனார் அவர்களின் 150வது பிறந்த நாளை அரசு விழாவாக சிறப்பாக கொண்டாடும் வகையில் 14 அறிவிப்புகளை வெளியிட்டார்கள். அதன்படி, போக்குவரத்து துறையின் சார்பில் அன்னாரது வாழ்க்கையின் மேற்கொண்ட சுதந்திரப் போராட்ட நிகழ்வுகளை அறிந்து கொள்ளும் வகையில் அரிய புகைப்படங்கள் அடங்கிய கண்காட்சி மாணவ பேருந்தின் வாயிலாக பள்ளி கல்லூரி மாணவியர்கள் மற்றும் பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் காட்சிப்படுத்தப்படும் என்று மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் வெளியிட்டார்கள்.
அதன்படி, இன்று தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் மண்டலத்திற்குட்பட்ட தர்மபுரி பேருந்து நிறுத்தத்தில் இக்கண்காட்சி பேருந்து காட்சி படுத்தப்பட்டது. இப்பேருந்தில் வ.உ.சிதம்பரனார் அவர்களின் வாழ்க்கை வரலாறு, சுதந்திர போராட்டத்தில் பங்கேற்று சமுதாய புரட்சி மற்றும் தேச பக்தி குறித்த அரிய புகைப்படங்கள் உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்ட புகைப்படங்கள் காட்சிபடுத்தப்பட்டது. இப்பேருந்தினை ஏராளமான மக்கள் பார்வையிட்டு அன்னாரது வாழ்க்கை வரலாற்றினை அறிந்தனர்.