கற்போம் எழுதுவோம் விழிப்புணர்வு-கலைநிகழ்ச்சி சின்னப்பள்ளத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் தொடங்கியது.
பென்னாகரத்தை அடுத்துள்ள சின்னப் பள்ளத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மாநில பள்ளி சாரா மற்றும் வயதுவந்தோர் கல்வி இயக்ககம், கற்போம் எழுதுவோம் இயக்கம் சார்பாக விழிப்புணர்வு கலைப்பயணம் பாடல்கள் மற்றும் நாடகங்கள் தொடக்க விழா நடைபெற்றது. தலைமை ஆசிரியர் மா. பழனி வரவேற்புரையாற்றினார்.
இந்த நிகழ்ச்சி மாவட்ட கல்வி அலுவலர் D சண்முகவேல் தலைமை வகித்து தொடங்கி வைத்தார். உதவி திட்ட அலுவலர் வெங்கடேசன் முன்னிலையில் நடைப்பெற்றது. நிகழ்ச்சியின் தொடக்கமாக கிராமத்தில் விழிப்புணர்வு ஊர்வலம் செங்கனூர் ஊராட்சி மன்ற தலைவர் மணி தலைமையில் நடைபெற்றது.
கலை நிகழ்ச்சி பாரதி கிராமிய கலை வளர்ச்சி மையம் சார்பாக மாவட்ட, மாநில அளவில் பயிற்சி பெற்ற கலைஞர்கள் மூலம் தப்பாட்டம் வாசகங்கள் ஊர் கூடுதே, தந்தனா தாளம், கும்மி பாடல், குறுஞ்செய்தி, சிலேட்டு, நாடகங்கள் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
இந்தக் கலை நிகழ்ச்சியில் முக்கியமான நோக்கம் எழுதப் படிக்கத் தெரியாதவர்களுக்கு எழுத்தறிவு கற்றுக் கொடுக்கவும் தன்னார்வலர்களையும் கற்போரையும் கண்டுபிடித்து எண்ணறிவும் எழுத்தறிவும் பெறுவதை உறுதிப்படுத்துவதாகும்.
இந்த சமுதாய விழிப்புணர்வு நிகழ்ச்சி மாவட்டம் முழுவதும் 22.9.21 முதல் 29.9.21 வரை நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. விழிப்புணர்வு நிகழ்ச்சியில் வட்டார கல்வி அலுவலர்கள் பழனி, அன்பு வளவன், மேற்பார்வையாளர் சரவணன் பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள், ஊர் பொதுமக்கள் கரோனா விதிமுறைகளை கடைப்பிடித்து திரளாக கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியை மாவட்டம் முழுவதும் மாநில கருத்தாளர் மற்றும் சின்னப்பள்ளத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் மா பழனி முதன்மைக் கல்வி அலுவலரின் உத்தரவுபடி மாவட்டம் முழுவதும் கலைநிகழ்ச்சி நடத்தி வருகிறார். இதனைத் தொடர்ந்து ஏரியூர், பாப்பாரப்பட்டி மேல்நிலைப்பள்ளிகளில் கலை நிகழ்ச்சி நடைபெற்றது.