தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில், உலக தாய்ப்பால் விழிப்புணர்வு வாரத்தையொட்டி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ச.திவ்யதர்சினி,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் அரசு அலுவலர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.
பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ச.திவ்யதர்சினி,இ.ஆ.ப., அவர்கள்
பேசியதாவது:
தாய்ப்பால் அளிப்பதின் முக்கியத்துவம் குறித்து, சர்வதேச அளவில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஆண்டுதோறும், உலகத் தாய்ப்பால் விழிப்புணர்வு வாரம் கடைபிடிக்கப்படுகிறது. அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலைங்களில், பிரசவித்த தாய்மார்கள் மற்றும் கர்ப்பிணிகள் இடையே, தாய்ப்பாலின் அவசியம் குறித்து தெரிவிக்கப்படுகிறது. தாய்ப்பால் உணவாக மட்டுமல்ல தேவைக்கு ஏற்ப மருந்தாகவும் குழந்தைக்குப்பயன்படுகிறது. தாய்மார்கள் தங்கள் குழந்தைக்கு தாய்ப்பாலை தொடர்ந்து வழங்க வேண்டும்.
தாய்ப்பால் அருந்துவதால், குழந்தை உடலின் வெப்பநிலை சரியான அளவில் வைக்கப்படும். குறைந்தது, 6 மாதம், அதிகப்பட்சம், ஒரு வயது வரை தங்கள் குழந்தைக்குப் பாலூட்ட தாய்மார்கள், முன்வர வேண்டும். தருமபுரி மாவட்டத்தில் குழந்தைகளுக்கு தாய்ப்பால் புகட்டும் தாய்மார்களின் சராசரி தமிழ்நாடு மாநில சராசரியை விட கூடுதலாக இருக்கும் வகையில் விழிப்புணர்வு பணிகளை அங்கன்வாடி பணியாளர்கள் மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ச.திவ்யதர்சினி,இ.ஆ.ப., அவர்கள் பேசினார்.
முன்னதாக உலக தாய்ப்பால் விழிப்புணர்வு வாரத்தையொட்டி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ச.திவ்யதர்சினி,இ.ஆ.ப., அவர்கள் விழிப்புணர்வு வாகனத்தினை கொடியசைத்து தொடக்கி வைத்தார். இந்நிகழ்வின் போது, இணை இயக்குநர் (மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் ) மரு.மலர்விழி, தருமபுரி மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் மரு.அமுதவல்லி, துணை இயக்குநர் (சுகாதார பணிகள்) மரு.ஜெமினி, உள்ளிருப்பு மருத்துவர் மரு.காந்தி, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திரு.மகாலிங்கம் ஆகியோர் உட்பட தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.