தமிழ்நாட்டில் எங்கும் இல்லாத எம தேவனுக்கென்று ஒரு தீர்த்தம் அரூர் அருகே உள்ளது. மரண பயத்தை நீக்கும் என்பதால் தமிழகத்தில் உள்ள மாவட்டங்களில் மட்டும் அல்லாமல் வெளிமாநிலத்தில் இருந்து ஏராளமான பக்தர்கள் அன்பினால் வந்து வணங்கி செல்கின்றனர். தினமும் ஒரு கால பூஜை நடைபெற்று வருகிறது. அமாவாசை பவுர்ணமி நாட்களில் ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர்.
அரூர் அருகே தீர்த்தமலை கிராம மலை மீது அமைந்துள்ள தீர்த்தகிரீஸ்வரர் கோயிலுக்கு தொடர்புடைய 11 தீர்த்தங்கள் அமைந்துள்ளது. இதில் மிக முக்கியமான தீர்த்தம் மொன்டுகுழி கிராம இந்திரன் தீர்த்தம். இத்தீர்த்தம் தற்பொழுது காணாமல் போய்விட்டது. இதை தேடி பக்தர்கள் அலைந்து வருகின்றனர். இதையடுத்து மிகமுக்கியமான தீர்த்தம் அனுமன் தீர்த்தம் இங்கு ஏராளமான பக்தர்கள் சென்று வணங்கி வருகின்றனர்.இதேபோல் மிக முக்கியமான தீர்த்தமாக கருதப்படும் தமிழ் நாட்டில் எங்கும் இல்லாத எமன் தீர்த்தத்திற்கு அமாவாசை, பவுர்ணமி நாட்களில் வெளி மாநிலங்களிலிருந்து வந்து இரவு நேரங்களில் தங்கிச் செல்வது வழக்கமாக உள்ளது.
அரூர் அருகே வேப்பம்பட்டி கிராமத்தில் இருந்து 6 கிலோமீட்டர் தொலைவில் அடர்ந்த காட்டுப் பகுதியில் சுமார் 5 கிலோமீட்டர் தொலைவில் இருசக்கர வாகனம் செல்லும் வரை மண் சாலையும் அதற்கு மேல் 2 கிலோமீட்டர் மலைகளை கடந்து நடந்து சென்றால் அங்கு ஏமதீர்த்தம் கோயில் அமைந்துள்ளது.இந்த இடத்தில் ஒரு பழங்காலத்து கோயில் அமைந்துள்ளது. அந்தக் கோயில் மூலஸ்தானத்தில் லிங்கம் காட்சியளிக்கிறது சிவன் கோயில்களில் லிங்கத்தின் முன்பு இரண்டு நந்திகள் அமைந்துள்ளது இங்குதான் காணப்படுகிறது. அதன் அருகில் ஒரு மலையில் பிளவில் மரத்தின் கீழ் ஒரு தீர்த்தம் கோடை காலங்களிலும் வற்றாமல் நீர் ஊற்று வந்த வண்ணம் இன்றும் இருந்து வருகிறது. இத்தீர்த்தத்தை பழங்காலத்திலிருந்து எம தீர்த்தம் என்று அப்பகுதி மக்கள் கூறி வருகின்றனர். இந்த தீர்த்தத்தில் நீராடினால் மனிதனுக்கு ஏற்படும் பயம் நீங்கும் என்பது ஐதீகம். இந்த தீர்த்தத்தை அறிந்து தேவலோகத்திலிருந்து 9 தேவகன்னிகள் வந்து நீராடியதாக வும், பின்னர் அவர்கள் நீராடி அந்த மகிமையை அறிந்து இங்கேயே தங்கி வரும் பக்தர்களுக்கு காட்சி அளித்து வருகின்றனர் என்று கூறப்படுகிறது.
மேலும் இந்த பகுதியில் இரவு நேரங்களில் சித்தர்கள் வந்து எம லிங்கத்தை வணங்கி செல்வதாகவும், ஒரு காலத்தில் எமதர்மன், மார்க்கண்டேயன் மீது பாசக்கயிற்றை வீசும்போது இங்கு மார்கண்டேயன் லிங்கத்தை கட்டி அணைத்து கொண்டதாகவும் அந்த பாசக் கயிறு லிங்கத்தின் மீது விழுந்ததால் ஆத்திரமடைந்த ஈஸ்வரர், எமனை தாக்கியதில் பாதிப்படைந்து. நலம் பெற இங்கு நீராடி லிங்கத்தை வணங்கி நலம் பெற்றதாகவும் இதனால் இந்த லிங்கத்திற்கு எம லிங்கம் என்றும் அவர் நீராடியதால் அந்த தீர்த்தம் எமன் தீர்த்தம் என்று பெயர் வந்ததாக கூறப்படுகிறது.
மார்கண்டேயன் லிங்கத்தை கட்டி அனைத்து கொண்டதாக சொல்லப்படும் சிலைகள் இங்கு அமைந்திருந்தாம். நாளடைவில் அந்த சிலைகளின் பாதுகாப்பு கருதி அருகே உள்ள கிராமமான பையர்நாயக்கன்பட்டியில் உள்ள துரோபதி அம்மன் ஆலயத்தில் தற்போது பாதுகாப்பாக உள்ளதாகவும் அப்பகுதியினர் தெரிவித்து வருகின்றனர்.
வரலாற்று சிறப்பு மிக்க இந்த கோயிலுக்கு செல்லும் பாதைகள் வழிகளில் மின் விளக்குகள் அமைத்து கோவில் பகுதியிலும் மின்சார வசதி அரசு ஏற்படுத்தி கொடுத்தால் வரும் பக்தர்களுக்கு நன்மையாக இருக்கும் என்று அப்பகுதியினர் கூறுகின்றனர். இந்தக் கோவிலுக்கு கர்நாடகா மற்றும் தமிழகத்தில் உள்ள அனைத்து பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் பவுர்ணமி, அமாவாசை நாட்களில் வந்து இரவில் தங்கி சமைத்து வரும் பக்தர்களுக்கு இலவசமாக உணவு வினியோகம் செய்து வருகின்றனர்.