வாகன இன்சூரன்ஸ். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வாகன இன்சூரன்ஸ்.

 வாகன இன்சூரன்ஸ் - கவனிக்க வேண்டிய அம்சங்கள்.

நாம் எல்லோரும் ஆண்டிற்கு ஒருமுறை நமது வாகனத்தின் இன்சுரன்சை புதிப்பித்து வருவோம். ஆனால் எவ்வளவு பேருக்கு அதனுடைய முழு விவரமும் தெரியும் என்பது கேள்விக்குறி தான். காப்பீட்டு ஆவணத்தை எவ்வளவு பேர் படித்துப் புரிந்துகொண்டிருப்பார்கள் என்பதும் கேள்விக்குறி தான்.

ஆனால் அனைவரும் அதை படித்து புரிந்துகொண்டால் நமது பிரிமியத் தொகையில் நன்கு சேமிக்கலாம். வாகன இன்சுரன்ஸ் பற்றி மக்களுக்கு இருக்கும் ஐயங்களைப் போக்கத்தான் இந்தக் கட்டுரை.

மோட்டார் வாகன இன்சூரன்ஸ் என்பது மோட்டார் வாகனச் சட்டம் (1988) கீழ் இந்தியாவில் அனைத்து வாகன உரிமையாளர்களும் தங்கள் வாகனங்களுக்கு எடுத்திட வேண்டும் என்பது சட்டம். வாகனச் சோதனை செய்யும்போது ஒருவருடைய லைசன்ஸ், வாகனப் பத்திரப் புத்தகம் மற்றும் வண்டியின் இன்சுரன்ஸ் ஆகிய மூன்றும் சோதனை செய்யப்படும் என்பது அனைவரும் அறிந்ததே.

மோட்டார் வாகன இன்சுரன்ஸ் நோக்கம் என்ன?

மோட்டார் இன்சூரன்ஸ் என்பது ஒருவருடைய வாகனத்திற்கு பல்வேறு வகைகளில் ஏற்படும் சேதங்களிலிருந்தோ அல்லது வாகனம் திருடு போனாலோ அதன்மீது கிடைக்கபெறும் காப்பீடேயாகும்.

அதைவிட முக்கியமான நோக்கம் ஒன்றுள்ளது. அதுதான் மூன்றாம் தரப்புக் காப்பீடு.

மூன்றாம் தரப்புக் காப்பீடு (Third Party Cover) என்றால் என்ன?

மோட்டார் வாகனச் சட்டம் (1988) முக்கியமாக வலியுறுத்துவது இந்த மூன்றாம் தரப்புக் காப்பீடைப் பற்றியேயாகும். வாகனச் சோதனையின்போது போக்குவரத்துக் காவல்துறையினர்  நமது ஆயுள் காப்பீடைப் பற்றியோ அல்லது நமது விபத்துக் காப்பீடுபற்றியோ கேட்காமல் நமது வாகனக் காப்பீடு பற்றி கேட்பதன் நோக்கம் என்ன? வாகனக் காப்பீட்டின் முக்கிய நோக்கம்,

அடுத்தவருக்கு நம்மால் ஏற்படும் விபத்தினால் ஏற்படும் சேதத்திற்கு,  முக்கியமாக விபத்தில் பாதிக்கப்படும் வேறு வாகன ஓட்டிகளுக்கு வழங்கப்படும் காப்பீடு தான் மூன்றாம் தரப்புக் காப்பீடு.

சரி, மோட்டார் இன்சூரன்ஸ் வகைகள் என்னென்ன?


1. லயபிலிட்டி ஒன்லி பாலிஸி (Liability only policy) -

மேலே குறிப்பிட்ட மூன்றாம் தரப்புக் காப்பீடை குறிப்பது தான் இந்த லயபிலிட்டி ஒன்லி பாலிஸி. அடுத்தவருக்கு நம்மால் ஏற்படும் விபத்தினால் ஏற்படும் உடல் மற்றும் பொருள் சேதத்திற்கு வழங்கப்படும் காப்பீடு தான் மூன்றாம் தரப்புக் காப்பீடு. மோட்டார் வாகனச் சட்டம் (1988) கீழ் இந்த வகையான காப்பீட்டுத் திட்டங்கள் காட்டாயம் எல்லோரும் எடுத்திருக்கவேண்டும்.

பேக்கேஜ் பாலிசி (Package policy):

வழக்கமாக எல்லோரும் எடுக்கும் பாலிசி இந்த வகையைச் சேர்ந்தது தான். இந்தப் பாலிசி மூன்றாம் தரப்புப் காப்பீடும் சொந்த வாகனக் காப்பீடும் இணைந்தது. காப்பீடு ஆவணத்தில் இரண்டிற்குமுண்டான பிரிமியம் தொகை தனித்தனியே குறிப்பிடப்பட்டிருக்கும்.

காப்பீட்டுத் தொகை(Sum Insured)

ஒரு வாகனத்தின் காப்பீட்டுத் தொகை என்பது அந்த வாகனத்திற்கான ஐ டி வி (Insured’s Declared Value) என வழங்கப்படும் வாகனத்தின் தற்போதைய கணக்கீடு தான் வாகனக் காப்பீடாக எடுத்துகொள்ளப்படும். வாகனம் முழுவதும் சேதமடைந்தாலோ அல்லது திருடு போனாலோ கிடைக்கபெறும் காப்பீட்டுத் தொகைதான் தான் ஐ டி வி. சுருக்கமாகச் சொன்னால், வாகனத்தின் தற்போதைய மதிப்பு தான் ஐ டி வி என்பதன் பொருள்.

பிரிமியம் எவ்வாறு கணக்கிடப்படுகிறது?

பிரிமியம் இரண்டுவகையாகக் கணக்கிடப்படுகிறது. சொந்தச் சேதாரம் மற்றும் மூன்றாம் தரப்புக் காப்பீடு ஆகும். இன்சுரன்ஸ் துறையை வழி நடத்தும் ஐ ஆர் டி ஏ (I R D A) தான் மூன்றாம் தரப்புக் காப்பீடுக்குண்டான பிரிமியம் தொகையை நிர்ணயம் செய்கிறது. ஆனால் சொந்தச் சேதாரப் பிரிமியத் தொகையை நிர்ணயிப்பது காப்பீட்டு நிறுவனங்கள் தான். போட்டி கருதி வெவ்வேறு நிறுவனங்கள் பிரிமியத்தில் தள்ளுபடி அதிமாகக் கொடுத்து வருவதால் இன்சுரன்ஸ் எடுப்பவர்கள் சில நிறுவனங்களின் பிரிமியத் தொகையை ஒப்பிட்டு பார்த்தல் அவசியம். 

பிரிமியத் தொகை கணக்கீடு செய்யும்போது ஐ டி வி யிலும் மாறுதல்கள் ஏற்படும். குறைவான பிரிமியம் வேண்டும் என்பதற்காக ஐ டி வியை குறைத்தால் அது வாகனத்தின் இழப்பீட்டில் பிரதிபலிக்கும் என்பதை நினைவில் கொள்ளவேண்டும். பிரிமியம் ஒப்பிட்டு பார்க்கும்போது எல்லா நிறுவனங்களின் பிரிமியம் கணக்கீடும் ஒரே மாதரியாக எடுத்திருக்கிறார்களா என்று பார்த்தால் தான் எந்த நிறுவனத்தின் பிரிமியம் குறைவு என்று முடிவு செய்யமுடியும்.

மோட்டார் இன்சுரன்ஸ் பிரிமியம் கணக்கீட்டில் கழிவுகளும் முக்கிய பங்கு வகிக்கின்றன. கழிவுகள் இரண்டு வகைப்படும்: கட்டாயக் கழிவு மற்றும் விருப்பக் கழிவு. (Compulsory and Voluntary Deductibles)

சுருக்கமாகச் சொன்னால், நமது வாகனத்துக்கு ரூபாய் 1000 கழிவு என்று வைத்துக்கொள்வோம். இழப்பீடு வாங்கும்போது நமது பங்காக ரூபாய் 1000 செலுத்தவேண்டும். மீதியை காப்பீட்டு நிறுவனம் செலுத்தும் என்பது தான் அதன் பொருள். நாம் சுய விருப்பமாக கழிவுகளை உயர்த்தினால் பிரிமியத் தொகை குறையும். ஆனால் இழப்பீடு காலத்தில் நாம் அதிகமாச் செலுத்தவேண்டிவரும். ஆகவே பிரிமியம் தொகை கணக்கீடு செய்யும்முன் கழிவுகளையும் கவனத்தில் கொள்ளவேண்டும்.

நோக்ளைம் போனஸ்: (No Claim Bonus)

வாகன உரிமையாளர்கள் வாகன இழப்பீடு கோரவில்லை என்றால் நோக்ளைம் போனஸ் என்று உரிமையாளருக்கு வழங்கப்படும். இழப்பீடு இல்லாத ஆண்டிற்குப் பிறகு வரும் ஆண்டில் பிரிமியத் தொகையில் அதற்கு ஏற்றார்போல தள்ளுபடி கிடைக்கும். ஒரு ஆண்டில் இழப்பீடு கோரப்பட்டால் நோக்ளைம் போனஸ் என்பது ரத்தாகிவிடும்.

அடுத்தமுறை உங்களது வாகன இன்சுரன்ஸ் எடுக்கும்போதோ புதுப்பிக்கும்போதோ மேற்கூறிய அனைத்தையும் மனதில் கொண்டு பல நிறுவனங்களின் பிரிமியத் தொகையை ஒப்பிட்டுப் பார்த்தால் நிச்சயம் உங்கள் பணத்தை சேமிக்க முடியும்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad

நமது தகடூர் குரல் தளத்தில் உங்கள் விளம்பரங்களை குறைந்த செலவில் விளம்பரம் செய்து பயனடையுங்கள், தொடர்புக்கு: 9843 663 662 / 95 66 53 73 91.