கிராம நத்தம் என்றால் என்ன? - தகடூர் குரல் #1 மாவட்ட செய்தி இணையதளம்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

கிராம நத்தம் என்றால் என்ன?


1. நத்தம் என்று வகை படுத்தப்பட்ட நிலங்கள் எல்லாம் குடியிருப்புக்காக ஒதுக்கப்பட்டது. டிடிசிபி,  சிஎம்டிஏ, அங்கீகார குடியிருப்பு மனைகள் சமீபங்களில் வந்தது.அதற்கு முன் எல்லாம் நத்தம் நிலங்கள் தான் வீட்டு மனைகள்!


வெள்ளையர்கள் தமிழகத்தை ஒட்டு மொத்தமாக சர்வே செய்து நிலத்தை வகைபடுத்தும்போது பயிர் செய்யும் நிலங்கள் நஞ்சை,புஞ்சை,மானாவாரி,தரிசு என வகைப்படுத்தி விட்டு, அப்பொழுது அங்கு இருந்த பூர்வீக குடியிருப்புகளையும்,அதனை சுற்றி எதிர்காலத்தில் குடியிருப்பு தேவை அதிகரிக்கும் என்பதை கருத்தில் கொண்டு

காலியாக உள்ள இடங்களையும் சேர்ந்தது “நத்தம்” என்று வகைப்படுத்தி வைத்தனர்.


2.சிஎம்டிஏ,  டிடிசிபி உருவாகவில்லை என்றால் நத்தம்தான் இன்றுவரை வீட்டு மனை தேவைகளை நிறைவேற்றி கொண்டு இருக்கும்.ஒன்றே ஒன்று நினைவில் வைத்து கொள்ளுங்கள் நத்தம் என்றால் குடியிருப்புக்கான நிலம் ஆகும்.


3. நத்தத்தை பொதுவாக கிராம நத்தம் என்று சொல்வார்கள்.இன்னும் ஆழமாக கவனித்து பார்த்தால் ஊர் தெருவில் இருப்பது ஊர் நத்தம் என்றும் சேரியில் இருப்பதை சேரி நத்தம் என்றும் இன்றளவும் மக்களிடையே புழங்கி வருவதை காணலாம்.


4. கிராமத்தில் உள்ள நத்தம் இடம் அனைத்தையும் ஒரே புலபடமாக வரைந்து அதற்கு ஒரு சர்வே எண்ணை கொடுத்தோ அதிக பரப்பு இருந்தால் 2,3 சர்வே எண்களை கொடுத்து வகைப்படுத்தி இருப்பார்கள். பெரும்பாலும் 1ஹெக்டேர் இல் இருந்து 10 ஹெக்டர் பரப்புவரை நத்தம் நிலங்களை பிரித்து இருப்பர்.


5. உதாரணமாக திருப்பூர் மாவட்டம் அவினாசி வட்டம் சேவூர் கிராமம் என்று எடுத்துக்கொண்டால் அதில் இருக்கும் பழைய குடியிருப்புகள் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளும் நத்தமாக வகைபடுத்தி, சர்வேஎண் 625 என்றும் அதன் விஸ்தீரணம் 6ஏக்கர் என்றும் வைத்து கொள்வோம்.


6. மேற்படி 6ஏக்கர் பரப்பில் 50 குடும்பம் தனது வீடு , தோட்டம் வழி என 2.5ஏக்கரில் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். மீதி இருக்கிற இடங்கள் 3.5 ஏக்கர் காலியாக இருக்கும். இப்படி ஆட்கள் யாரும் இல்லாமல் இருக்கின்ற நிலங்களை “நத்தத்தில் புறம்போக்கு” என்று கூறுவார்கள்.


7. இப்படி நத்தத்தில் புறம்போக்காக இருக்கிற பகுதிகள் அரசினுடையது.  ஆகையால் ஆரம்ப பள்ளி , சுகாதார நிலையம், பஞ்சாயத்து அலுவலகம், நூலகம் ரேசன்கடை, பால் உற்பத்தியாளர் சங்கம் என்று அரசு உயர் பயன்பாட்டுக்கு எடுத்து கொள்ளும்.


இன்னும் மீதம் இருக்கிற இடங்கள் யார் கைபற்றிலும் இல்லாமல் காலியாகவே இருக்கும்.


8.மேற்படி 625 சர்வே எண்ணில் 2.5 ஏக்கரில் 50 குடும்பங்கள் இருப்பதாக சொன்னேன் அல்லவா, அந்த 50 குடும்பங்களும் 2.5 ஏக்கர் நத்தம் நிலத்தை சரிசமமாக பகிர்ந்து தலா 5 சென்ட் என்று கைப்பற்றுதலில் வைத்து இருக்க மாட்டார்கள். 


ஒருவர் 10 சென்டுக்கும் , ஒருவர் 8 சென்ட் மற்றொருவர் 4 சென்ட் இன்னொருவர் 1 சென்டுக்கு இன்னொருவர் 2 சென்ட் என்று ஆளுக்கு ஒரு விதமாய் கைப்பற்றுதலிலும் அனுபவித்தலிலும் இருப்பார்கள்.


9. மேற்படி 50 நபர்களும் ஆளுக்கொருவிதமாய் கிரய(விடுதலை/செட்டில்மெண்ட்

பாகபிரிவிணை) பத்திரங்கள்  வைத்திருப்பார்கள்.சில இடங்களில் கிரைய(விடுதலை/செட்டில்மெண்ட்/பாகபிரிவிணை) பத்திரங்களும் இல்லாமல் பூர்வீக அனுபவத்தில் இருப்பர்.


10. உங்க வீட்டுக்கு பத்திரம் இருக்கே பட்டா இல்லையா? என்று கேட்டால் இது கிராம நத்தம், பட்டா தேவையில்லை , பட்டா கிடையாது பத்திரம் மட்டும்தான் என்று எல்லாம் சொல்வார்கள்.


11. நத்தம் நிலத்தில ஆரம்ப காலம் முதல் தொட்டே கிரயம், தானம்,விடுதலை, செட்டில்மென்ட் உட்பட அனைத்து சொத்து பரிமாற்ற பத்திரங்களும் சார்பதிவகத்தில் பதியப்பட்டது.அப்பொழுது நத்தம் நிலத்திற்கு பட்டா இருந்தால் பத்திரம் பதிவார்கள் என்ற நிலை இல்லை.


இப்பொழுதும் நத்தம் சர்வே நடக்காத கிராமங்களிலும் பட்டா இல்லாமல் பத்திர பதிவு நடக்கிறது.


12.மேற்படி பத்திர பதிவுகள் எல்லாம் முழுபுலத்தின் சர்வே எண்ணை் வைத்துதான் நடக்கும். அதற்கு உட்பிரிவு சர்வே எணகள் இருக்காது.நான்கு மால் எல்லை (அ) ஜமாபந்தியில விவரிப்பதன் மூலமாக தான் ஒரு தனிப்பட்ட சொத்தை அடையாளம் கண்டு கொள்ள முடியும்.பிற சொத்துக்களில் உட்பிரிவு சர்வே எண்ணை வைத்து தெளிவாக அடையாள் கண்டு கொள்ள முடியும்.


13.கிராம நத்தத்தை பற்றி விவரம் தெரிந்தவர்கள் காலியாக இருக்கும் நத்தம் புறம்போக்கு இடங்களை மடக்கி அனுபவித்து கொண்டு இருக்கின்றனர்.சில ஊர்களில் அதனை வீட்டு மனைகளாக பிரித்து ஊரில் இருப்பவர்கள் எல்லாம் சரிசமமாக பங்கு போட்டு கொண்டனர். ஒரு சில இடங்களில் அரசே காலியாக இருக்கும் இடங்களை பிரித்து நிலமற்றவர்களுக்கு , அடித்தட்டு மக்களுக்கு வீட்டு மனை ஒப்படையாக வழங்கி உள்ளது.


14. மேற்படி அரசு கொடுத்த ஒப்படைகள் ஆவணங்கள் கிராம அ.பதிவேடுகளில் நத்தம் கணக்குகளில் இன்று வரை ஏற்றபடவே இல்லை. எல்லா ஒப்படைகளும் முன்பு சொன்னது போல்தான் ஒரே முழு புல சர்வே எண் தான்.ஒவ்வொரு நில ஒப்படைகளின் மனை உட்பிரிவு செய்து தனி எண்கள் கொடுக்கப்படவில்லை.புலபடத்தில் உட்பிரிவு (Fmb cut) வெட்டி வரையாமலே இருக்கின்றனர்.


15.சுதந்திரம் அடைந்த 1947ஆம் ஆண்டு முதல் 1990வரை கிராம நத்தம் என்றால் மேற்சொன்ன விஷயங்கள் தான் நடந்தது. 1990 to 1995 வரை தமிழக கிராமங்களில் உள்ள நத்த நிலத்திற்கு நத்தம் நிலவரித் திட்டம் கொண்டுவரப்பட்டது.


16.நத்தம் நிலவரி திட்டம் என்றால் இருக்கின்ற நத்தம் நிலங்களை துல்லியமாக அளந்து யார் யாரிடம் எவ்வளவு இடம் இருக்கிறது. என வரைப்படம் வரைந்து போது, இடங்களை தனியாக வகைப்படுத்தி வழிகளை ஒழுங்குபடுத்தி அளந்து அதனை எல்லாம் ஒரு படமாக வரைந்து ஒவ்வொன்றுக்கும் உட்பிரிவு எண் கொடுப்பார்கள்.


17. உதாரணமாக முன் குறிப்பிட்ட திருப்பூர் மாவட்டம், அவினாசி வட்டம், சேவூர் கிராமத்தில் சர்வேஎண் 625 க்கு 50வீடுகள் 2.5 ஏக்கர் பரப்பில் இருந்தது என்று சொல்லி இருந்தேன்.அவை நத்தம் நிலவரி திட்டத்திற்கு பிறகு 625/1, 625 /2, 625/3, 625/4…..625/49,625/50 வரை உட்பிரிவு செய்து நத்தம் புலப்படத்தில் மேற்க்கண்ட 50 உட்பிரிவுகளை குறிப்பிட்டு நத்தம் FMB தயாரிப்பர்.


18. சர்வே செய்ய வரும்போது யார் யார் நத்தத்தில் அனுபவத்தில் இருந்தார்களோ அல்லது யார் கிரயப்பத்திரங்கள் வைத்து இருக்கிறார்களோ அவர்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டு, நத்தம் பதிவேடு உருவாக்கப்பட்டு அந்த மக்களுக்கு நத்தம் பட்டாவும் வழங்கப்பட்டது.


19. மேலும் நத்தம் நிலவரி திட்ட தோராய பட்டா, நத்தம் நிலவரி திட்ட தூய பட்டா,  என இரண்டு படி நிலையான நடைமுறைகள் நத்தம் நிலவரி திட்ட சர்வேயில் பின்பற்றபடுகின்றன.


20. நத்தம் நிலவரி திட்ட தோராய பட்டாவில் , பிழைகள் ,தவறுகள் விஸ்தீரண அளவுகளில் சிக்கல்கள் இருந்தால் அதனை சரி செய்து கொள்ள மனு செய்வதற்கு கால அவகாசம் கொடுப்பார்கள்.


21.மேலும் ஒருவர் நத்ததில் 10 சென்ட் அனுபவத்தில் இருந்தால் 10 சென்ட்டுக்கும் நத்தம் பட்டா கொடுக்கமாட்டார்கள்.3 செண்டுக்கோ அல்லது 4 செண்டுக்கோ நத்தம் தோராய பட்டா தருவார்கள்.மீதி இடத்தை அரசு இடமாக அறிவித்துவிடுவர்.அதனை ஆசேபிப்பவர்கள் அரசிடம் குறிப்பிட்ட கால அவகாசத்திற்குள் மனு செய்யலாம்.இந்த பட்டா ஒரு தற்காலிக பட்டா ஆகும்.


22. தோராய பட்டாவில் முழுமையாக விவரங்கள் மக்களிடம் இருந்து வந்த பிறகு தவறுகள் எல்லாம் களைந்து இறுதியான பட்டாவாக கொடுப்பது நத்தம் நிலவரி திட்ட தூய பட்டா ஆகும். இந்த பட்டா தாயாராகும் போதே நத்தம் தூய அடங்கல் பதிவேடும் தயாராகிவிடும்.


23. 1990 க்கு பிறகு தான், கிராம நத்த நிலத்திற்கு, நத்தம் FMB,  நத்தம் தூய அடங்கல்,நத்தம் தோராய பட்டா, நத்தம் தூய பட்டா, போன்ற ஆவணங்கள் உருவாகின.


இதனால் தான் யார் யார் எந்த ஏந்த நிலத்தை வைத்து இருக்கிறார்கள் என துல்லியமாக கணக்கெடுக்கப்பட்டது. அதற்கென தனி சர்வே எண் உட்பிரிவுகளும் வந்ததால் புதிதாக பதியப்படும் கிரைய பத்திரங்கள் மற்றும் பிற பரிவர்த்தனைகளிலும் சர்வே எண்ணும் அதன் உட்பிரிவு எண்களும் ஆவணப்படுத்தபட்டன.


24. இதுவரை கிராம நத்தம் வரலாறு கோர்வை படுத்தி இருக்கிறேன். இனி கிராம நத்தம் நிலத்தில் என்னென்ன சிக்கல்கள் இருக்கிறது என்பதனை பார்க்கலாம்.


25. கிராம நத்த ஆவணங்களில் FMB தூய அடங்கல் தோராய பட்டா போன்றவை இன்று வரை கணினி மயமாக்கப்படவில்லை. அதனால் இன்னும் ஆன்லைன் ஆகவில்லை. இன்றைய தலைமுறையினர் கிராம நத்த பட்டாவை ஆன்லைனில் தேடுகின்றனர். இவையெல்லாம் தற்போது ஆன்லைனில் கிடைக்காது என்பதே உண்மை.


26. இன்னும் பல கிராமங்களில் ஆரம்ப கட்ட நத்தம் நிலவரி திட்ட சர்வேக்களே செய்யாமல் இருக்கின்றனர். அதனால் நத்தம் FMB, நத்தம் பட்டா, இல்லாமல் வீட்டுகடன் வங்கிகடனுக்கு வாய்ப்பில்லாமல் அவதி பட்டு கொண்டு இருக்கின்றனர்.


27. மேலும் தமிழகத்தின் பல கிராமங்களில் நத்தம் நிலவரி திட்ட தோராய பட்டா மட்டுமே கொடுக்கப்பட்டு இருக்கிறது. இறுதி பட்டாவான நத்தம் நிலவரிதிட்ட தூய பட்டா, நடைமுறை அப்படியே கிடப்பில் இருக்கிறது.


28. மேலும் பல கிராமங்களில் நத்தம் நிலவரி திட்ட தூய பட்டா வந்தாலும், அதில் பல தவறுகள் இருக்கிறது. உரிமையாளர் பெயர் தவறுதலாக உள்ளது. உரிமையாளர் கிரைய பத்திரம் வைத்து இருந்தும், வேறு நபர் மீது தூய பட்டா கொடுக்கப்பட்டு இருக்கிறது. தூய பட்டாவில் எங்கள் இடத்தை சேர்த்து பக்கத்து வீட்டுக்காரர் தூயபட்டாவில் ஏற்றிவிட்டார்கள். என் இடத்தை புறம்போக்கு என வகைப்படுத்தி விட்டனர். என பல குளறுபடிகள் நத்தம் நிலவரிதிட்ட தூய பட்டா கொடுத்த சர்வேயிலும் இருப்பதால் மக்கள் அவதிப்படுகின்றனர்.


29. தவறுதலாக நத்தம் பட்டாவில் பெயர் ஏறியவர் அல்லது பெயர் எறியவரின் வாரிசுகள் மேற்படி பட்டாவை வைத்து எங்களுடைய நிலம் என்று வழக்கு போடுகின்றனர். உண்மையான நில உரிமையாளர் மலங்க மலங்க முழித்துகொண்டு நீதிமன்ற வாயில் நின்று கொண்டு இருக்கிறார்கள்.


30. நத்தம் நிலவரி திட்ட சர்வே நடக்காத கிராமஙக்ளில் முழு புலத்தின் உட்பிரிவு செய்யபடாத ஒரே சர்வே எண்ணை வைத்து, ஒரே இடத்திற்கு வேறு வேறு நபர் பெயரில் இரண்டுக்கு மேற்பட்ட பத்திரங்கள் பதியப்பட்டு, ஓர் இடம் இரு பத்திரங்கள் என்ற பிரச்சனையாகி இரண்டு நபரும் நீதிமன்றத்தில் மல்லுகட்டி கொண்டு இருக்கிறார்கள்.


31.நத்தம் நிலவரி திட்ட சர்வேயில் நிலத்துக்கான பத்திரங்கள் நில உரிமையாளர் வைத்து இருந்தாலும், புறம்போக்கு என நிலவரிதிட்ட சர்வேயில் வகைப்படுத்திவிட்டால், பட்டா இடமாக மாற்ற வேண்டி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தவம் இருக்கிறார்கள்.


32.பல கிராம நத்த இடத்தை அரசு இலவசமாகவோ பணம் வாங்கி கொண்டோ ஒப்படையாக வழங்கி இருக்கும்.நத்தம் சர்வே இதுவரை நடக்காத கிராமங்களில் மற்றும் சர்வே நடந்த கிராமங்களின் கிராம கணக்கில் குறிப்புகளாக கூட ஒப்படை பற்றிய விவரங்கள் இருக்காது. 


அரசு புறம்போக்கு ஆக்கிரமிப்பு என்று 10,20 ஆண்டுகளுக்கு பிறகு யாராவது வழக்கு தொடுத்தால் ஒப்படை நிலம்தான் என்று நிரூபிக்க அரசிடம் இது சம்பந்தப்பட்ட தனது BACK END கோப்புகள் தேடி எடுக்க முடியாமல் தவித்து கொண்டு இருக்கின்றனர்.


33.நத்தம் இடங்களில் உங்களுக்கு சிக்கல்கள் இருந்தால் முதலில் அங்கு நத்தம் நிலவரிதிட்ட சர்வே நடந்ததா? என்று பார்க்க வேண்டும்.அப்படி நடந்தால் தோராய பட்டாவில் உள்ளதா, தூயபட்டாவில் உள்ளதா, என பார்க்க வேண்டும். 


நத்தத்தில் அரசு நில ஒப்படை கொடுத்து இருந்தால் அரசிடம் அது சம்மந்தபட்ட கோப்புகள் இருக்கிறதா என்று ஆராயவும்.அதன் பிறகு ஆவண நிலவரங்களுக்கு ஏற்றவாறு மாவட்ட ஆட்சியருக்கு மனுவோ நீதிமன்ற வழக்குககளுக்கோ செல்ல வேண்டும்.

No comments:

Post Top Ad