தருமபுரி: தருமபுரி மாவட்டம் பாலக்கோடு நகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதியில் செயல்பட்டு வரும் விஏஓ அலுவலகத்தில் பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும் என வலியுறுத்தி, சமூக ஆர்வலர் பி.கே. சிவா மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளார்.
பாலக்கோடு விஏஓ அலுவலகத்திற்கு தினமும் ஏராளமான பொதுமக்கள் பட்டா, வருவாய் சான்றிதழ், குடியிருப்பு சான்றிதழ் உள்ளிட்ட பல்வேறு அரசு சேவைகள் தொடர்பாக மனு அளிக்க வந்து செல்கின்றனர். இதில் முதியவர்கள், பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோர் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படுவதாகவும், அவர்களின் பயன்பாட்டிற்காக அலுவலகத்தில் போதுமான கழிப்பிட வசதி மற்றும் அமர்வதற்கான இருக்கைகள் இல்லாததால் சிரமம் ஏற்படுவதாகவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, பொதுமக்களின் நலன் கருதி விஏஓ அலுவலகத்தில் போதுமான கழிப்பிட வசதி மற்றும் அமர்வதற்கான இருக்கைகள் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், அலுவலகத்தை பொதுமக்கள் எளிதில் அடையாளம் காணும் வகையில் தெளிவான பெயர் பலகை மற்றும் வழிகாட்டிப் பலகை அமைக்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர் பி.கே. சிவா மாவட்ட ஆட்சியரிடம் அளித்துள்ள மனுவில் வலியுறுத்தியுள்ளார்.
பொதுமக்களின் நீண்டகால சிரமத்தை கருத்தில் கொண்டு, மனுவின் மீது உரிய நடவடிக்கை எடுத்து அடிப்படை வசதிகளை விரைந்து ஏற்படுத்தித் தர வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
.gif)

