தருமபுரி, ஆகஸ்ட் 09:
தருமபுரி மாவட்டம் பாலக்கோட்டில், மக்கள் பணியாளன் தொண்டு நிறுவனம் மற்றும் திம்மம்பட்டி செயின்ட் லூசிஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி இணைந்து நடத்திய போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதில் ஏராளமான பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு போதைப்பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
பாலக்கோடு தக்காளி மார்க்கெட் அருகே நடைபெற்ற நிகழ்ச்சிக்கு காவல் துணை கண்காணிப்பாளர் மருத்துவர் மாலதி தலைமை வகித்தார். இன்ஸ்பெக்டர் சுப்ரமணியம், வட்டாட்சியர் அசோக்குமார், வட்டார வளர்ச்சி அலுவலர் லோகநாதன், மக்கள் பணியாளன் தொண்டு நிறுவனத் தலைவர் சசிகுமார் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். பள்ளி முதல்வர் லூசி ஜோஸ்வின் வரவேற்புரை வழங்கினார்.
மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள்
நிகழ்ச்சியில் போதைப்பொருள் பழக்கத்தால் ஏற்படும் உடல்நலம், கல்வி மற்றும் சமூக பாதிப்புகள் குறித்து மாணவர்கள் பங்கேற்ற கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. மேலும், போதைப்பொருள் பயன்பாட்டிற்கு எதிரான பல்வேறு விழிப்புணர்வு கருத்துகளும் முன்வைக்கப்பட்டன.
நிகழ்ச்சியில் பேசிய காவல் துணை கண்காணிப்பாளர் மருத்துவர் மாலதி, போதைப்பொருள் பழக்கம் இளைஞர்களின் கல்வி, உடல்நலம் மற்றும் எதிர்கால வாழ்க்கையை கடுமையாக பாதிக்கும் என தெரிவித்தார். மாணவர்கள் போதைப்பொருட்களுக்கு எதிராக விழிப்புணர்வுடன் இருப்பதுடன், தங்களது நண்பர்கள் மற்றும் பொதுமக்களிடையேயும் போதைப்பொருள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார். போதைப்பொருள் விற்பனை அல்லது பயன்பாடு தொடர்பான தகவல்கள் தெரியவந்தால் உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
விழிப்புணர்வு பதாகைகளுடன் பேரணி
இதனைத் தொடர்ந்து நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியை காவல் துணை கண்காணிப்பாளர் மருத்துவர் மாலதி கொடியசைத்து தொடங்கி வைத்தார். தக்காளி மார்க்கெட் அருகே தொடங்கிய பேரணி, கடைவீதி, பேருந்து நிலையம், ஸ்தூபி மைதானம் வழியாகச் சென்று பாலக்கோடு காவல் நிலையத்தில் நிறைவடைந்தது.
பேரணியில் மாணவர்கள் “போதையில்லா தமிழகம் உருவாக்குவோம்”, “இளைஞர்களின் எதிர்காலத்தை காப்போம்”, “போதைப்பொருளை ஒழிப்போம்” உள்ளிட்ட விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியபடி சென்றனர். மேலும், போதை இல்லாத பாதுகாப்பான சமூகத்தை உருவாக்க அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என உறுதிமொழி ஏற்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் மக்கள் பணியாளன் தொண்டு நிறுவனத்தினர், பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள், காவல்துறையினர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
.gif)

.jpg)