Type Here to Get Search Results !

தருமபுரி அரசு கலைக் கல்லூரியில் பெண்கள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.


தருமபுரி, ஆகஸ்ட் 09:


தருமபுரி அரசு கலைக் கல்லூரியில் உள்ளக புகார் குழு (Internal Committee – IC) மற்றும் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை, தருமபுரி ஆகியவை இணைந்து, பணிபுரியும் இடங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தலைத் தடுப்பது தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தின.


கல்லூரி கலையரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் முனைவர் கோ. கண்ணன் தலைமை வகித்தார். உள்ளக புகார் குழு ஒருங்கிணைப்பாளரும், ஆங்கிலத் துறை இணைப் பேராசிரியருமான முனைவர் கி. சத்யா வரவேற்புரை வழங்கினார். உள்ளக புகார் குழுத் தலைவர் முனைவர் விஜயா தாமோதரன், உறுப்பினர்கள் முனைவர் க. விஜெயதேவன் மற்றும் திரு. அ. சரவணன் (NGO – SEEDS) ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.


பாலியல் துன்புறுத்தல் தடுப்புச் சட்டம் குறித்து விளக்கம்

நிகழ்ச்சியில் மாவட்ட சமூக நல அலுவலகத்தின் பாலின வல்லுநர் Dr. M. ஆனந்த செல்வம் சிறப்புரையாற்றினார். பணிபுரியும் இடங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் (தடுப்பு, தடை மற்றும் தீர்வு) சட்டம், 2013 குறித்தும், பணியிடங்களில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதில் உள்ளக புகார் குழுவின் முக்கியத்துவம் குறித்தும் விளக்கினார்.


மேலும், பாலியல் துன்புறுத்தல் தொடர்பாக புகார் அளிக்கும் நடைமுறை, பெண்களின் சட்ட உரிமைகள் மற்றும் பணியிடங்களில் பாலியல் துன்புறுத்தலைத் தடுக்கும் வழிமுறைகள் குறித்தும் விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.


181 அவசர உதவி எண் குறித்து விழிப்புணர்வு

தருமபுரி ஒரு நிறுத்த மையத்தின் (One Stop Centre) மைய நிர்வாகி திருமதி அ. சங்கீதா, பெண்களுக்கான இலவச அவசர உதவி எண் 181 குறித்தும், அதன் மூலம் வழங்கப்படும் சேவைகள் குறித்தும் விளக்கினார். பெண்களுக்கு வழங்கப்படும் அவசர உதவி, சட்ட மற்றும் உளவியல் ஆலோசனை, பாதுகாப்பு மற்றும் மறுவாழ்வு சேவைகள் குறித்து மாணவிகள் மற்றும் பங்கேற்பாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.


நிகழ்ச்சியை கல்லூரி உடற்கல்வி இயக்குநர் முனைவர் கு. பாலமுருகன் நெறியாளராக இருந்து தொகுத்து வழங்கினார். நிறைவில் உள்ளக புகார் குழு உறுப்பினரும், ஆங்கிலத் துறை இணைப் பேராசிரியருமான முனைவர் தேன்மொழி நன்றி கூறினார். இந்நிகழ்ச்சியில் கல்லூரி பேராசிரியர்கள், பணியாளர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டு பெண்களின் பாதுகாப்பு, சட்ட உரிமைகள் மற்றும் புகார் அளிக்கும் நடைமுறைகள் குறித்து விழிப்புணர்வு பெற்றனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies