எர்ரப்பட்டியில் கால்நடை சுகாதார முகாம் தொடக்கம்! 515 கால்நடைகளுக்கு சிகிச்சை – விவசாயிகளுக்கு நலத்திட்ட உதவிகள், சிறந்த கால்நடை வளர்ப்போருக்கு பரிசுகள்.
தருமபுரி, ஆகஸ்ட் 25:
தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டம், ஏ.ஜெட்டிஅள்ளி ஊராட்சி, எர்ரப்பட்டி கிராமத்தில் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் நடைபெற்ற சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாமை மாவட்ட ஆட்சியர் திரு.வே. சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்தார். முகாமில் மாவட்ட ஆட்சியர் பயனாளிகளுக்கு தீவன விதைகளை வழங்கியதுடன், சிறப்பாக கறவை மாடுகளை வளர்த்து வரும் விவசாயிகளுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் மற்றும் பரிசுகளை வழங்கினார்.
515 கால்நடைகளுக்கு சிகிச்சை
முகாமில் 180 பசுக்கள், 30 எருமைகள், 150 செம்மறியாடுகள், 100 வெள்ளாடுகள், 60 கோழிகள் மற்றும் 15 நாய்கள் என மொத்தம் 515 கால்நடைகளுக்கு மருத்துவப் பரிசோதனை மற்றும் சிகிச்சை அளிக்கப்பட்டது.
மேலும், 110 விவசாயிகளுக்கு கால்நடை சார்ந்த நலத்திட்ட உதவிகள், 3 விவசாயிகளுக்கு சிறந்த கன்றுக்கான பரிசுகள், 3 விவசாயிகளுக்கு சிறந்த கால்நடை மேலாண்மைக்கான விருது மற்றும் பரிசுகள், 50 பயனாளிகளுக்கு தாது உப்புகள் ஆகியவற்றை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.
180 சிறப்பு முகாம்கள்
தருமபுரி மாவட்டத்தில் 10 ஊராட்சி ஒன்றியங்களிலும், ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியத்திற்கும் 18 முகாம்கள் வீதம் மொத்தம் 180 சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம்கள் நடைபெற உள்ளன. இம்முகாம்களில் கால்நடைகளுக்கு மருத்துவ சிகிச்சை அளித்தல், வெறிநோய் மற்றும் கோமாரி நோய் தடுப்பூசி செலுத்துதல், சினை ஆய்வு, குடற்புழு நீக்கம், மலடுநீக்க சிகிச்சை, அல்ட்ரா சவுண்டு ஸ்கேன், கருப்பை மருத்துவ உதவி உள்ளிட்ட பல்வேறு நோய்த்தடுப்பு மற்றும் நோய்தீர்க்கும் சுகாதார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
மேலும், கால்நடைகளில் நோய் புலனாய்வு செய்வதற்காக தருமபுரி நோய் புலனாய்வு பிரிவு மூலம் இரத்தம், சாணம், பால் மற்றும் தோல் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட உள்ளன. நடமாடும் கால்நடை மருத்துவ சேவைகளும் முகாம்கள் மூலம் வழங்கப்படுகின்றன.
விவசாயிகள் பயன்படுத்திக்கொள்ள ஆட்சியர் வேண்டுகோள்
கால்நடை வளர்ப்போர், தங்கள் கிராமங்களில் நடைபெறும் இம்முகாம்களை பயன்படுத்தி கால்நடைகளை அழைத்து வந்து தேவையான மருத்துவப் பரிசோதனை மற்றும் சிகிச்சைகளை பெற்றுக்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் திரு.வே. சரவணன் தெரிவித்தார். மேலும், விவசாயிகள் பயன்பெறும் வகையில் அசோலா பாசி, பல்வேறு வகையான தீவனப் புல்கள் மற்றும் தீவன விதைகள் உள்ளிட்டவை காட்சிப்படுத்தப்பட்ட கண்காட்சி அரங்கையும் மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டார்.
நிகழ்ச்சியில் தருமபுரி கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர் மரு.த. முருகலட்சுமி, உதவி இயக்குநர்கள் மரு.கே. சரவணன், மரு.பி. கனகசபை, கால்நடை நோய் புலனாய்வு பிரிவு உதவி இயக்குநர் மரு.கே. பிரகாஷ், 1962 கால்நடை மருத்துவ அவசர ஊர்தி மருத்துவர்கள், கால்நடை உதவி மருத்துவர்கள், கால்நடை ஆய்வாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

.jpg)
கருத்துகள் இல்லை
கருத்துரையிடுக