தருமபுரி, ஆக. 14:
முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் – 2026-ல் பொதுமக்கள் மற்றும் மாணவ, மாணவியர்கள் அதிகளவில் பங்கேற்கும் வகையில், தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள Selfie Stand மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக, தருமபுரி மாவட்ட ஆட்சியர் திரு. வே. சரவணன், இ.ஆ.ப., அவர்கள் 13.08.2026 அன்று Selfie Stand-ல் புகைப்படம் எடுத்துக்கொண்டு, முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்பதற்கான இணையவழிப் பதிவு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
45 வகையான விளையாட்டுப் போட்டிகள்
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் ஆண்டுதோறும் முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் மாவட்ட, மண்டல மற்றும் மாநில அளவுகளில் நடத்தப்பட்டு வருகின்றன.
விளையாட்டின் மீதான ஆர்வத்தை பொதுமக்களிடையே அதிகரிப்பது, அனைத்து தரப்பினரையும் போட்டிகளில் பங்கேற்கச் செய்வது மற்றும் திறமையான விளையாட்டு வீரர், வீராங்கனைகளை அடையாளம் கண்டு அவர்களுக்கு உரிய அங்கீகாரம் வழங்குவது இப்போட்டிகளின் முக்கிய நோக்கமாகும்.
தருமபுரி மாவட்டத்தில் மாவட்ட அளவிலான போட்டிகள் 04.09.2026 முதல் தொடங்க உள்ளன. கடந்த ஆண்டு நடைபெற்ற 38 வகையான விளையாட்டுகளுடன், இந்த ஆண்டு வில்வித்தை, வுஷூ, துப்பாக்கிச் சுடுதல், யோகா, மல்லர்கம்பம், ஸ்பீடு ஸ்கேட்டிங், கயாகிங் மற்றும் கேனோயிங் உள்ளிட்ட புதிய விளையாட்டுகள் சேர்க்கப்பட்டுள்ளன.
இதன் மூலம் செப்டம்பர் முதல் அக்டோபர் 2026 வரை மொத்தம் 45 வகையான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற உள்ளன.
யார் பங்கேற்கலாம்?
பள்ளிப் பிரிவு: 6 முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும், 19 வயதிற்குட்பட்ட மாணவ, மாணவியர்கள். (01.01.2008 அன்று அல்லது அதற்குப் பின்னர் பிறந்தவர்கள்).
கல்லூரிப் பிரிவு: இளங்கலை முதலாம் ஆண்டு முதல் முதுகலை இரண்டாம் ஆண்டு வரை மற்றும் பாலிடெக்னிக் பயிலும் மாணவ, மாணவியர்கள். (01.07.2001 அன்று அல்லது அதற்குப் பின்னர் பிறந்தவர்கள்).
பொதுப் பிரிவு: 15 முதல் 35 வயது வரை உள்ளவர்கள்.
மேலும், அனைத்து வயதினரையும் சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் மற்றும் அரசு ஊழியர்களும் போட்டிகளில் பங்கேற்கலாம்.
வெற்றி பெறுபவர்களுக்கு ரூ.1 லட்சம் வரை பரிசு
மாவட்ட மற்றும் மண்டல அளவிலான தனிநபர் போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு:
- முதல் பரிசு – ரூ.3,000
- இரண்டாம் பரிசு – ரூ.2,000
- மூன்றாம் பரிசு – ரூ.1,000
மாநில அளவிலான தனிநபர் போட்டிகளில்:
- முதல் பரிசு – ரூ.1,00,000
- இரண்டாம் பரிசு – ரூ.75,000
- மூன்றாம் பரிசு – ரூ.50,000
குழு போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு:
- முதல் பரிசு – தலா ரூ.75,000
- இரண்டாம் பரிசு – தலா ரூ.50,000
- மூன்றாம் பரிசு – தலா ரூ.25,000
ஆகஸ்ட் 31 வரை இணையவழிப் பதிவு
முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க விரும்புவோர் 06.08.2026 முதல் 31.08.2026 வரை இணையவழியாக பதிவு செய்ய வேண்டும். உரிய ஆவணங்களுடன் tncmtrophy.sdat.in இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். இணையதளம் மூலம் பதிவு செய்தவர்கள் மட்டுமே போட்டிகளில் பங்கேற்க அனுமதிக்கப்படுவார்கள்.
போட்டிகளில் இடம்பெறும் அனைத்து விளையாட்டுப் பிரிவுகள், போட்டி விதிமுறைகள், வயது வரம்பு, தகுதிகள் மற்றும் இதர விவரங்கள் இணையதளத்தில் விரிவாக குறிப்பிடப்பட்டுள்ளன.
Selfie Stand மூலம் விழிப்புணர்வு
போட்டிகளில் பங்கேற்க விரும்புவோர் இணையதளத்தில் முன்பதிவு செய்வது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் Selfie Stand அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வில் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் திரு. எஸ். சிவரஞ்சன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் திரு. வெ. லோகநாதன் உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க விரும்பும் மாணவர்கள், இளைஞர்கள், விளையாட்டு ஆர்வலர்கள் மற்றும் தகுதியுடையவர்கள் கடைசி தேதிக்காக காத்திருக்காமல் முன்கூட்டியே இணையவழிப் பதிவை மேற்கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் திரு. வே. சரவணன், இ.ஆ.ப., தெரிவித்துள்ளார்.
.gif)

.jpg)