Type Here to Get Search Results !

தருமபுரி ரயில் நிலையத்தில் பயணிகள் ரயில் பெட்டியின் அடியில் திடீர் தீ; பெரும் விபத்து தவிர்ப்பு.


தருமபுரி, ஜூலை 27:


தருமபுரி ரயில் நிலையத்தில் பயணிகள் ரயிலின் ஒரு பெட்டியின் அடிப்பகுதியில் திடீரென தீப்பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. பயணிகள் உடனடியாக தகவல் தெரிவித்ததையடுத்து ரயில்வே பாதுகாப்புப் படையினர் விரைந்து செயல்பட்டு தீயை அணைத்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.


சேலத்தில் இருந்து தொப்பூர், தருமபுரி, ராயக்கோட்டை, ஓசூர் வழியாக பெங்களூரு செல்லும் பயணிகள் ரயில் தினமும் காலை மற்றும் மாலை நேரங்களில் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், பெங்களூருவில் இருந்து சேலம் நோக்கி வந்த பயணிகள் ரயில் திங்கள்கிழமை மாலை சுமார் 7.15 மணியளவில் தருமபுரி ரயில் நிலையத்தின் முதல் நடைமேடையை வந்தடைந்தது. அப்போது ரயிலின் ஐந்தாவது பெட்டியின் அடிப்பகுதியில் இருந்து புகையுடன் தீப்பொறிகள் பறப்பதை சில பயணிகள் கவனித்தனர்.


இதையடுத்து, பயணிகள் உடனடியாக ரயில்வே பாதுகாப்புப் படையினருக்கும் ரயில்வே ஊழியர்களுக்கும் தகவல் தெரிவித்தனர். தகவலறிந்த ரயில்வே பாதுகாப்புப் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை உடனடியாக கட்டுக்குள் கொண்டு வந்தனர். பின்னர் மேற்கொள்ளப்பட்ட முதற்கட்ட ஆய்வில், ரயிலின் சக்கரத்தில் பொருத்தப்பட்டிருந்த பிரேக் அமைப்பு சக்கரத்துடன் உராய்ந்ததால் ஏற்பட்ட அதிக வெப்பத்தின் காரணமாக ரப்பர் பகுதி தீப்பிடித்திருக்கலாம் என முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.


பயணிகளின் விழிப்புணர்வும், ரயில்வே பாதுகாப்புப் படையினரின் விரைவான நடவடிக்கையும் காரணமாக பெரும் தீ விபத்து தவிர்க்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்தச் சம்பவத்தால் ரயில் சுமார் 45 நிமிடங்களுக்கும் மேலாக தருமபுரி ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டது. பின்னர் தொழில்நுட்பக் கோளாறு சரிசெய்யப்பட்டதைத் தொடர்ந்து, ரயில் சேலம் நோக்கி புறப்பட்டுச் சென்றது.


இந்த திடீர் சம்பவத்தால் தருமபுரி ரயில் நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. சம்பவம் தொடர்பாக ரயில்வே அதிகாரிகள் தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies