தருமபுரி, ஜூன் 19:
தருமபுரி மாவட்டத்தில் நடப்பு 2026-2027 ஆம் ஆண்டில் விவசாயிகளின் பாசன வசதியை மேம்படுத்தும் நோக்கில், பழைய திறனற்ற மின்மோட்டார் பம்புசெட்டுகளுக்கு பதிலாக புதிய 4 நட்சத்திர தரம் கொண்ட மின்மோட்டார் பம்புசெட்டுகள் வாங்க மானியம் வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் திரு. வே.சரவணன், இ.ஆ.ப., தெரிவித்துள்ளார். வேளாண்மைப் பொறியியல் துறையின் மூலம் செயல்படுத்தப்படும் இந்த திட்டத்தின் கீழ், தனிப்பட்ட விவசாயிகள் புதிய மின்மோட்டார் பம்புசெட்டுகளை வாங்கும்போது அதிகபட்சமாக ரூ.15,000 அல்லது பம்புசெட்டின் மொத்த விலையின் 50 சதவீதம் ஆகியவற்றில் எது குறைவோ அந்தத் தொகை மானியமாக வழங்கப்படும்.
இந்த மானியத் தொகை விவசாயிகளின் வங்கிக் கணக்கில் பின்னேற்பு (Back-end Subsidy) முறையில் நேரடியாக செலுத்தப்படும். பழைய திறன் குறைந்த பம்புசெட்டுகளை மாற்றுவதற்கும், புதிதாக அமைக்கப்பட்ட திறந்தவெளி கிணறு மற்றும் ஆழ்துளைக் கிணறுகளுக்கு புதிய 4 நட்சத்திர தரம் கொண்ட மின்மோட்டார் பம்புசெட்டுகளை நிறுவுவதற்கும் இத்திட்டம் பொருந்தும். மேலும், மின்சார வாரியத்தால் அனுமதிக்கப்பட்ட குதிரைத்திறன் (Horse Power) கொண்ட திறன்மிகு பம்புசெட்டுகளை வாங்கும் விவசாயிகளும் இத்திட்டத்தில் பயன்பெறலாம்.
இத்திட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் விவசாயிகளுக்கு முன்னுரிமை வழங்கப்பட உள்ளது. புதியதாக கிணறு அமைத்து மின் இணைப்பு பெற்றுள்ள விவசாயிகள், ஏற்கனவே நுண்ணீர்ப்பாசன அமைப்புகளை நிறுவியுள்ளவர்கள் மற்றும் நுண்ணீர்ப்பாசன அமைப்பு நிறுவ விருப்பமுள்ள விவசாயிகளும் தகுதியுடையவர்களாக கருதப்படுவார்கள்.
திட்டத்தில் விண்ணப்பிக்க விரும்பும் விவசாயிகள், விவசாய அடையாள அட்டை எண் (Farmer Registry ID), சிட்டா, அடங்கல், ஆதார் அட்டை, நில வரைபடம், மின் இணைப்பு சான்றிதழ், வங்கி கணக்கு புத்தக நகல் மற்றும் ஆதிதிராவிடர்/பழங்குடியினர் பிரிவினருக்கான சாதி சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும். இந்த திட்டம் தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு தருமபுரி பழைய மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் செயல்படும் வேளாண்மைப் பொறியியல் துறையின் மாவட்ட செயற்பொறியாளர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம். மேலும் தருமபுரி மற்றும் அரூர் வருவாய் கோட்டங்களில் செயல்படும் உதவி செயற்பொறியாளர் அலுவலகங்களையும் அணுகலாம்.
தொடர்புக்கு:
- உதவி செயற்பொறியாளர் (வேளாண்மைப் பொறியியல்), தருமபுரி – 97862 10717
- உதவி செயற்பொறியாளர் (வேளாண்மைப் பொறியியல்), அரூர் – 75983 13950
விவசாயிகள் மின்சாரச் செலவை குறைத்து, நீர் பயன்பாட்டு திறனை அதிகரிக்கும் வகையில் இந்த மானியத் திட்டத்தை பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் கேட்டுக்கொண்டுள்ளார்.
.gif)

.jpg)