Type Here to Get Search Results !

தருமபுரி அருகே கல்குவாரி அமைப்பதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு: ஜமாபந்தியில் மனு அளித்து நடவடிக்கை கோரிக்கை.


தருமபுரி, ஜூன் 19:


தருமபுரி அருகே உள்ள நத்தஅள்ளி கிராமத்தில் தனியார் கல்குவாரி அமைப்பதற்கு வழங்கப்பட்டுள்ள அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி, அப்பகுதி பொதுமக்கள் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஜமாபந்தி நிகழ்ச்சியில் கோரிக்கை மனு அளித்தனர். நல்லம்பள்ளி தாலுக்கா அலுவலகத்தில் நடைபெற்ற வருவாய்த் தீர்வாயம் (ஜமாபந்தி) நிகழ்ச்சியில், தருமபுரி மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் பாண்டியன் தலைமையில், விவசாய அணி மாநில நிர்வாகி கிள்ளிவளவன், மாவட்ட செய்தித் தொடர்பாளர் கரிகாலன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் மற்றும் நத்தஅள்ளி கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு மனுவை சமர்ப்பித்தனர்.


மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது: நத்தஅள்ளி கிராமத்தில் தனியார் ஒருவருக்கு கல்குவாரி அமைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும், அந்த பகுதியைச் சுற்றியுள்ள 40-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் விவசாயத்தை மட்டுமே நம்பி வாழ்ந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கல்குவாரி அமைப்பதற்கு முன்பு நடைபெற்ற கருத்துக் கேட்பு கூட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் எழுத்துப்பூர்வமாக எதிர்ப்பு தெரிவித்திருந்த போதிலும், அந்த எதிர்ப்பு மனுக்களை முறையாக பரிசீலிக்காமல் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.


மேலும், கல்குவாரி செயல்படத் தொடங்கினால் பாறை வெடிப்பு நடவடிக்கைகளால் தூசி மாசு, அதிக சத்தம் மற்றும் நில அதிர்வுகள் ஏற்பட்டு சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் என்றும், நிலத்தடி நீர்மட்டம் குறைந்து விவசாய நிலங்கள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளதாகவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பாக விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பை நம்பி வாழும் மக்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்படும் என்பதால், வழங்கப்பட்டுள்ள கல்குவாரி அனுமதியை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.


அத்துடன், பொதுமக்கள் அளித்த எதிர்ப்பு மனுக்களை மீளாய்வு செய்ய வேண்டும், சுற்றுச்சூழல் மற்றும் நிலத்தடி நீர் பாதிப்பு குறித்து சுயாதீன நிபுணர் குழுவை அமைத்து ஆய்வு நடத்த வேண்டும், அனுமதி வழங்கப்பட்ட நடைமுறைகளில் ஏதேனும் முறைகேடு இருந்தால் அதுகுறித்து விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும், கிராமத்தின் சுற்றுச்சூழல் வளங்களையும் பாதுகாக்க மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். ஜமாபந்தி நிகழ்ச்சியில் மனுவை பெற்றுக்கொண்ட அதிகாரிகள், கோரிக்கைகள் குறித்து உரிய ஆய்வு மேற்கொள்ளப்படும் என தெரிவித்ததாக கூறப்படுகிறது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies