பாலக்கோடு, ஜூன் 19:
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு தாலுக்காவில் நடைபெற்ற 1435-ஆம் பசலிக்கான வருவாய்த் தீர்வாயம் (ஜமாபந்தி) நிகழ்ச்சி இன்று நிறைவடைந்தது. நான்கு நாட்கள் நடைபெற்ற இந்த ஜமாபந்தி நிகழ்வில் பொதுமக்களிடமிருந்து 350-க்கும் மேற்பட்ட கோரிக்கை மனுக்கள் பெறப்பட்ட நிலையில், தகுதியான 33 மனுக்களுக்கு உடனடி தீர்வு வழங்கப்பட்டு ஆணைகள் வழங்கப்பட்டன.
பாலக்கோடு தாசில்தார் அலுவலகத்தில் கடந்த ஜூன் 16-ஆம் தேதி தொடங்கிய ஜமாபந்தி நிகழ்ச்சி, பாலக்கோடு, புலிக்கரை, மாரண்டஅள்ளி மற்றும் வெள்ளிச்சந்தை ஆகிய நான்கு பிர்காக்களை உள்ளடக்கி நடைபெற்றது. வருவாய்த் துறை மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையின் சார்பில் நடைபெற்ற இந்த முகாமில் பொதுமக்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை அதிகாரிகளிடம் நேரடியாக முன்வைத்தனர்.
ஜமாபந்தி நிகழ்வில் சமூக பாதுகாப்புத் திட்டங்கள், வட்ட வழங்கல் துறை தொடர்பான கோரிக்கைகள், பட்டா மாற்றம், நில அளவை, பிறப்பு மற்றும் இறப்புச் சான்றிதழ்கள், இலவச வீட்டுமனைப்பட்டா, குடும்ப அட்டை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மொத்தம் 350 மனுக்கள் பெறப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
பெறப்பட்ட மனுக்கள் மீது உரிய விசாரணை மற்றும் ஆவண சரிபார்ப்பு மேற்கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து, தகுதியுடைய 33 மனுக்கள் தேர்வு செய்யப்பட்டு, அதற்கான ஆணைகள் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டன. ஜமாபந்தி நிறைவு நிகழ்ச்சியில் வருவாய்த் தீர்வாய அலுவலரும், மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலருமான திரு. பி.கே. கோவிந்தன் தலைமையில் பயனாளிகளுக்கு ஆணைகள் வழங்கப்பட்டன. மேலும், மீதமுள்ள மனுக்கள் மீது உரிய ஆய்வு மேற்கொண்டு தகுதியின் அடிப்படையில் விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த ஜமாபந்தி நிகழ்ச்சியில் பாலக்கோடு தாசில்தார் அசோக்குமார், துணை தாசில்தார்கள் காமராஜர், ஆறுமுகம், மகேஸ்வரன், வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், நிலஅளவையர்கள், உதவியாளர்கள் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். பொதுமக்களின் நிலம் மற்றும் வருவாய்த் துறை சார்ந்த பிரச்சினைகளை நேரடியாக கேட்டறிந்து தீர்வு காணும் வகையில் ஜமாபந்தி நிகழ்வுகள் நடைபெற்று வருவது மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.
.gif)

.jpg)