தருமபுரி, ஜூன் 18:
தருமபுரி நகராட்சிக்கு உட்பட்ட அன்னசாகரம் பகுதியில் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக விசைத்தறி நெசவு தொழிலில் ஈடுபட்டு வரும் நெசவாளர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தொழிற்சாலை வரியை ரத்து செய்து, பழைய குடிசைத் தொழில் வரியையே தொடர வேண்டும் என வலியுறுத்தி விசைத்தறி உற்பத்தியாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் தருமபுரி நகராட்சி அலுவலகம் அருகே கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தருமபுரி நகராட்சிக்கு உட்பட்ட அன்னசாகரம் பகுதியில் சுமார் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் தலைமுறை தலைமுறையாக விசைத்தறி நெசவு தொழிலை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், கடந்த 2024-ஆம் ஆண்டு முதல் விசைத்தறி கூடங்களுக்கு நகராட்சி நிர்வாகம் தொழிற்சாலை வரி விதித்துள்ளதாக நெசவாளர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
ஆர்ப்பாட்டத்தில் பேசிய நெசவாளர்கள், நகராட்சி நிர்வாக இயக்குநரகத்தின் சுற்றறிக்கையின்படி, தமிழக அரசால் இலவச மின்சாரம் வழங்கப்படும் வீடுகளில் நிறுவப்பட்டுள்ள விசைத்தறிகளுக்கு தொழிற்சாலை வரி விதிக்கக் கூடாது என்றும், அவை குடிசைத் தொழிலாகவே கருதப்பட வேண்டும் என்றும் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.
ஆனால் அந்த உத்தரவுக்கு முரணாக தருமபுரி நகராட்சி நிர்வாகம் குடிசைத் தொழில் வரியை தொழிற்சாலை வரியாக மாற்றி வரி வசூலித்து வருவதாகவும், இதனால் ஏற்கனவே நெருக்கடியில் இருக்கும் சிறு மற்றும் குறு நெசவாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் கூறினர். மேலும், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் விசைத்தறி தொழில் இன்னும் குடிசைத் தொழிலாகவே வகைப்படுத்தப்பட்டுள்ள நிலையில், தருமபுரி நகராட்சி மட்டும் தொழிற்சாலை வரி விதிப்பது நியாயமற்றது என்றும், இந்த முடிவு உடனடியாக திரும்பப் பெறப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட விசைத்தறி உற்பத்தியாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் கலந்து கொண்டு கோரிக்கை முழக்கங்களை எழுப்பினர். தொழிற்சாலை வரி விதித்த உத்தரவை ரத்து செய்து, பழைய குடிசைத் தொழில் வரி முறையை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.
மேலும், நகராட்சி நிர்வாகம் தங்களது கோரிக்கையை ஏற்று நடவடிக்கை எடுக்காவிட்டால், தருமபுரி மாவட்டம் முழுவதும் உள்ள விசைத்தறி தொழிலாளர்களை ஒன்றிணைத்து நகராட்சி அலுவலகம் முன்பு மிகப்பெரிய அளவிலான போராட்டம் நடத்தப்படும் என எச்சரிக்கை விடுத்தனர். விசைத்தறி நெசவு தொழில் ஏற்கனவே மூலப்பொருட்கள் விலை உயர்வு, உற்பத்தி செலவு அதிகரிப்பு மற்றும் சந்தை மந்தநிலை போன்ற பல்வேறு சவால்களை எதிர்கொண்டு வரும் நிலையில், கூடுதல் வரிச்சுமை தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை மேலும் பாதிக்கும் என ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் வேதனை தெரிவித்தனர்.
.gif)

.jpg)