பாலக்கோடு, ஜூன் 19:
பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என்பதையும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டம் தொடர்பான பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் பாலக்கோட்டில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தருமபுரி மாவட்டம் பாலக்கோடு பேருந்து நிலையம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வட்ட செயலாளர் காரல் மார்க்ஸ் தலைமை வகித்தார்.
ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட கட்சியினர், பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வு பொதுமக்களின் வாழ்வாதாரத்தை கடுமையாக பாதித்து வருவதாக குற்றம்சாட்டினர். மேலும், அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த ஒன்றிய அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.
அதேபோல், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் பெயரை மாற்றியதை திரும்பப் பெற வேண்டும் என்றும், கிராமப்புற தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க ஆண்டுக்கு 200 நாட்கள் வேலை வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.
ஆர்ப்பாட்டத்தின் போது ஒன்றிய அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன. மத்திய அரசின் பொருளாதார கொள்கைகள் ஏழை மற்றும் நடுத்தர மக்களை பாதிப்பதாகவும், மக்கள் நலனை கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும் என்றும் ஆர்ப்பாட்டக்காரர்கள் வலியுறுத்தினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் முத்து, மாவட்ட குழு உறுப்பினர் கலாவதி, வட்ட குழு நிர்வாகிகள் கோவிந்தசாமி, சேகர், வரதராஜன், முருகன், முருகேசன், பாண்டியம்மாள், ராஜா, உதயகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர். மேலும் கட்சியின் நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் ஆதரவாளர்கள் திரளாக பங்கேற்று கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
.gif)

.jpg)