தருமபுரி, ஜூன் 19:
தேசிய தேர்வு முகமை (NTA) சார்பில் நடத்தப்படும் NEET (UG)-2026 மறுதேர்வு வரும் ஜூன் 21 (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ள நிலையில், தருமபுரி மாவட்டத்தில் 4,453 தேர்வர்கள் 9 தேர்வு மையங்களில் தேர்வு எழுத உள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்தத் தேர்வு காகித முறையில் (Pen & OMR Sheet) நடைபெற உள்ளது. பொதுத் தேர்வர்களுக்கு பிற்பகல் 2.00 மணி முதல் மாலை 5.15 மணி வரை தேர்வு நடைபெறும். மாற்றுத்திறனாளி தேர்வர்களுக்கு கூடுதல் நேரம் வழங்கப்பட்டுள்ளதால், அவர்களுக்கு மாலை 6.15 மணி வரை தேர்வு எழுத அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மாணவர்களின் வசதிக்காக மாவட்ட நிர்வாகம் பல்வேறு முன்னெச்சரிக்கை மற்றும் அடிப்படை வசதிகளை செய்துள்ளது. தேர்வு மையங்களுக்கு மாணவர்கள் சிரமமின்றி சென்று வர காலை 11.00 மணி முதல் மதியம் 1.00 மணி வரை மற்றும் தேர்வு முடிந்த பின் மாலை 5.30 மணி முதல் இரவு 7.30 மணி வரை அனைத்து வழித்தடங்களிலும் கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. மேலும், தேர்வு மையங்களில் தடையில்லா மின்சாரம், குடிநீர் வசதி, போதிய இருக்கைகள் மற்றும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான சக்கர நாற்காலி வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு முறைகேடுகளைத் தடுக்க அனைத்து மையங்களிலும் மொபைல் ஜாமர்கள் பொருத்தப்பட்டு செயல்படுத்தப்பட உள்ளன. தேர்வுப் பணியில் ஈடுபடாத அரசு அலுவலர்கள், ஊடகத்தினர் மற்றும் அங்கீகாரம் பெறாத நபர்கள் தேர்வு மையங்களுக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. தேர்வு நாளன்று போக்குவரத்து நெரிசலை தவிர்க்க காவல்துறையினர் சிறப்பு போக்குவரத்து ஒழுங்குமுறைகளை மேற்கொள்ள உள்ளனர். அவசர மருத்துவ தேவைகளுக்காக ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்புத் துறையினரும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.
மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்புக் குழு (DLCC) அனைத்து தேர்வு மையங்களையும் நேரில் ஆய்வு செய்து தேவையான வசதிகள் செய்யப்பட்டுள்ளதையும் உறுதி செய்துள்ளது. தேர்வர்கள் தங்களது அனுமதிச் சீட்டில் குறிப்பிடப்பட்டுள்ளபடி காலை 11.00 மணிக்கே தேர்வு மையங்களுக்கு வருகை தர வேண்டும் என்றும், மதியம் 1.30 மணிக்குப் பிறகு தேர்வு மையத்திற்குள் அனுமதி வழங்கப்படமாட்டாது என்றும் மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
மேலும், தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ள விதிமுறைகளை முழுமையாக படித்து கடைபிடிக்க வேண்டும் என்றும், கடைசி நேர அவசரங்களை தவிர்க்க முன்கூட்டியே தேர்வு மையங்களுக்கு வருமாறும் தேர்வர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தேர்வு மையங்களைச் சுற்றியுள்ள பகுதிகளில் அமைதியான சூழலை நிலைநிறுத்த பொதுமக்களும், பெற்றோர்களும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என தருமபுரி மாவட்ட ஆட்சியர் திரு. வே.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்.
.gif)

.jpg)