Type Here to Get Search Results !

பென்னாகரம் அடுத்த கள்ளிபுரம் மேற்கு பகுதியில் சாக்கடை கால்வாய் வசதி கேட்டு 8 மாதங்களாக போராட்டம்: மீண்டும் மனு அளித்த பொதுமக்கள்.


பென்னாகரம், ஜூன் 17:


தருமபுரி மாவட்டம் பென்னாகரம் வட்டத்திற்குட்பட்ட கள்ளிபுரம் மேற்கு பகுதியில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வரும் நிலையில், அடிப்படை வசதியான சாக்கடை கால்வாய் அமைக்கப்படாததால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இதுகுறித்து கடந்த 8 மாதங்களாக பல்வேறு போராட்டங்களை நடத்தி வரும் மக்கள், மீண்டும் அதிகாரிகளிடம் மனு அளித்துள்ளனர்.


கள்ளிபுரம் மேற்கு பகுதியில் முறையான சாக்கடை கால்வாய் வசதி இல்லாத காரணத்தால், வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் தெருக்களில் தேங்கி நிற்கிறது. இதனால் அப்பகுதி முழுவதும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளதுடன், குழந்தைகள், பெண்கள் மற்றும் முதியவர்கள் பல்வேறு நோய்த்தொற்றுகளுக்கு ஆளாகும் அபாயம் நிலவுவதாக பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.


குறிப்பாக மழைக்காலங்களில் கழிவுநீர் தேக்கம் அதிகரித்து கொசு உற்பத்தி மற்றும் தொற்று நோய்கள் பரவும் அபாயம் இருப்பதாகவும் மக்கள் கூறுகின்றனர். பல தெருக்களில் சாக்கடை நீர் தேங்கி நிற்பதால் அன்றாட வாழ்க்கையே பாதிக்கப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டுகின்றனர். இப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என அப்பகுதி மக்கள் மற்றும் புரட்சிகர மக்கள் அதிகாரம் அமைப்பினர் கடந்த எட்டு மாதங்களாக தொடர்ந்து பல்வேறு வழிகளில் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

மேலும், அண்மையில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலின் போது, சாக்கடை கால்வாய் வசதி ஏற்படுத்தித் தராததை கண்டித்து தேர்தலை புறக்கணிக்கப் போவதாக அப்பகுதி மக்கள் பேனர்கள் வைத்து போராட்டம் நடத்தியிருந்தனர். இதையடுத்து மாவட்ட நிர்வாக அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள், வட்டார வளர்ச்சி அலுவலர் (BDO) உள்ளிட்டோர் நேரில் சென்று மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.


அப்போது, சாக்கடை கால்வாய் திட்டத்திற்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், ஒரு வாரத்திற்குள் பணிகள் தொடங்கப்படும் என்றும் அதிகாரிகள் உறுதி அளித்ததாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து மக்கள் தங்களது தேர்தல் புறக்கணிப்பு முடிவை திரும்பப் பெற்றனர். ஆனால், அதிகாரிகள் அளித்த வாக்குறுதியைத் தொடர்ந்து பல மாதங்கள் கடந்தும் எந்தவித பணிகளும் தொடங்கப்படவில்லை என்றும், இதுவரை சாக்கடை கால்வாய் வசதி ஏற்படுத்தப்படவில்லை என்றும் பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.


இந்த நிலையில், அப்பகுதி மக்கள் மற்றும் புரட்சிகர மக்கள் அதிகாரம் அமைப்பினர் மீண்டும் வட்டார வளர்ச்சி அலுவலரை (BDO) நேரில் சந்தித்து 02.06.2026 அன்று கோரிக்கை மனு அளித்துள்ளனர். மனுவை பெற்றுக்கொண்ட அதிகாரிகள், இன்னும் ஒரு வார காலத்திற்குள் சாக்கடை கால்வாய் வசதி ஏற்படுத்துவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மீண்டும் உறுதி அளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்நிலையில், இந்த முறையும் அதிகாரிகள் அளித்த வாக்குறுதி நிறைவேற்றப்படாவிட்டால், பொதுமக்களை திரட்டி மிகப்பெரிய மக்கள் போராட்டம் நடத்தப்படும் என புரட்சிகர மக்கள் அதிகாரம் அமைப்பின் பென்னாகரம் வட்டார துணைச் செயலாளர் மாரியப்பன் எச்சரிக்கை விடுத்துள்ளார். அடிப்படை வசதிக்காக பல மாதங்களாக காத்திருக்கும் கள்ளிபுரம் மேற்கு பகுதி மக்களின் கோரிக்கைக்கு மாவட்ட நிர்வாகம் உடனடி தீர்வு காணுமா என்ற எதிர்பார்ப்பு அப்பகுதியில் நிலவி வருகிறது.


© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies