Type Here to Get Search Results !

இண்டூர் உள்வட்ட ஜமாபந்தி நிறைவு: 359 மனுக்கள் பெறப்பட்டன – 35 பயனாளிகளுக்கு ஆணைகள் வழங்கிய மாவட்ட ஆட்சியர்.


நல்லம்பள்ளி, ஜூன் 18:


தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி வட்டாட்சியர் அலுவலகத்தில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையின் சார்பில் 1435-ஆம் (2025-2026) பசலிக்கான வருவாய்த் தீர்வாயம் (ஜமாபந்தி) நிறைவு நாள் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் திரு. வே. சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இதில் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கை மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு ஆட்சியர் உத்தரவிட்டார்.


தருமபுரி மாவட்டத்தில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும் 16.06.2026 முதல் 19.06.2026 வரை ஜமாபந்தி நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக நல்லம்பள்ளி வட்டாட்சியர் அலுவலகத்தில் நல்லம்பள்ளி, பாளையம் மற்றும் இண்டூர் உள்வட்டங்களுக்கு தனித்தனியாக ஜமாபந்தி நடத்தப்பட்டது. இறுதி நாளான இன்று இண்டூர் உள்வட்டத்திற்குட்பட்ட பாலவாடி, மூக்கனஅள்ளி, தளவாய்அள்ளி, சோமேனஅள்ளி, கும்பலபாடி, பங்குநத்தம், கோணங்கிஅள்ளி, எச்சனஅள்ளி, எர்ரபையனஅள்ளி, நெக்குந்தி, நாகர்கூடல் மற்றும் நத்தஅள்ளி உள்ளிட்ட 12 வருவாய் கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் பெருமளவில் பங்கேற்றனர்.


ஜமாபந்தி நிகழ்ச்சியில் முதியோர் உதவித்தொகை, இலவச வீட்டுமனை பட்டா, பட்டா மாறுதல், உட்பிரிவு பட்டா, வாரிசுச் சான்று, பிறப்பு மற்றும் இறப்புச் சான்றிதழ், குடும்ப அட்டை, சாதி, வருமானம் மற்றும் இருப்பிடச் சான்றிதழ்கள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மொத்தம் 359 மனுக்கள் பெறப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். பெறப்பட்ட அனைத்து மனுக்களையும் முழுமையாக ஆய்வு செய்து, தகுதியான மனுதாரர்களுக்கு விரைந்து தீர்வு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.


இதனைத் தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில், பட்டா பெயர் மாற்றம், உட்பிரிவு பட்டா மாற்றம், இலவச வீட்டுமனை பட்டா, பிறப்புச் சான்றிதழ், மறுமணம் செய்து கொள்ளவில்லை என்பதற்கான சான்றிதழ் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளில் தகுதி பெற்ற 35 பயனாளிகளுக்கு மாவட்ட ஆட்சியர் நேரடியாக ஆணைகளை வழங்கினார். முன்னதாக நல்லம்பள்ளி வட்டாட்சியர் அலுவலகத்தில் பராமரிக்கப்பட்டு வரும் பட்டா-சிட்டா பதிவேடுகள், வரி வசூல் பதிவேடுகள், நில அளவை பதிவேடுகள், கிராமக் கணக்குகள் மற்றும் நில அளவை கருவிகள் உள்ளிட்ட வருவாய்த் துறை ஆவணங்களை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார்.


இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) திருமதி கவிதா, மாவட்ட நில அளவை உதவி இயக்குநர் திரு செந்தில்குமார், நல்லம்பள்ளி வட்டாட்சியர் திரு பிரசன்னமூர்த்தி மற்றும் பல்வேறு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர். ஜமாபந்தி நிகழ்வுகள் மூலம் பொதுமக்களின் நீண்டநாள் வருவாய்த் துறை சார்ந்த கோரிக்கைகள் நேரடியாக பெறப்பட்டு, துரிதமாக தீர்வு காணப்படுவது மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies