Type Here to Get Search Results !

குடிநீரா? கழிவுநீரா? – சுத்தம் செய்யப்படாத தொட்டியால் அவதிப்படும் கிராம மக்கள்.



பாலக்கோடு, ஜூன் 19:


தருமபுரி மாவட்டம் பாலக்கோடு ஒன்றியத்திற்குட்பட்ட பேளாரஹள்ளி ஊராட்சியில் உள்ள பல கிராமங்களுக்கு விநியோகிக்கப்படும் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்ட குடிநீர், சுத்தமற்ற நிலையில் வழங்கப்படுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். குடிநீர் சேமித்து வைக்கப்படும் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி பல ஆண்டுகளாக முறையாக சுத்தம் செய்யப்படாததால் குடிநீரில் சகதி, பாசி மற்றும் மண் கலந்து வருவதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.


பேளாரஹள்ளி ஊராட்சிக்குட்பட்ட தம்புடுகொட்டாய், பாரதிநகர், திக்குவாசிக்கொட்டாய் உள்ளிட்ட பகுதிகளில் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்தின் கீழ் 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அமைக்கப்பட்டு அதன் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

விதிமுறைகளின்படி மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் மாதத்திற்கு குறைந்தபட்சம் இரண்டு முறை சுத்தம் செய்யப்பட்டு பாதுகாப்பான குடிநீர் வழங்கப்பட வேண்டும். ஆனால், பேளாரஹள்ளி ஊராட்சியில் உள்ள குடிநீர் தொட்டி பல மாதங்களாக மட்டுமல்லாமல் வருடக்கணக்கில் முறையாக சுத்தம் செய்யப்படவில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.


இதன் காரணமாக குடிநீர் தொட்டியின் அடிப்பகுதியில் மண், சகதி, பாசி மற்றும் கழிவுகள் தேங்கி காணப்படுவதாகவும், அந்த நீரே பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. இதனால் குடிநீரை பயன்படுத்தும் குழந்தைகள், முதியவர்கள் மற்றும் பெண்கள் உள்ளிட்ட பலர் வயிற்றுப்போக்கு, தோல் நோய் மற்றும் பிற தொற்று நோய்களால் பாதிக்கப்படுவதாக அப்பகுதி மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.


பொதுமக்கள் கூறுகையில், “ஒகேனக்கல் குடிநீர் திட்டம் பாதுகாப்பான குடிநீரை வழங்குவதற்காக செயல்படுத்தப்பட்டது. ஆனால் தொட்டிகள் பராமரிக்கப்படாததால் குடிநீர் தரம் கேள்விக்குறியாகியுள்ளது. குடிநீரில் அடிக்கடி சகதி மற்றும் அழுக்கு கலந்து வருகிறது. இதுகுறித்து பலமுறை புகார் தெரிவித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை” என்றனர்.


மேலும், பாலக்கோடு ஒன்றியத்தில் உள்ள பல ஊராட்சிகளிலும் இதேபோன்ற நிலை இருப்பதாகவும், குடிநீர் தொட்டிகள் முறையாக பராமரிக்கப்படாதது நிர்வாக சீர்கேட்டை வெளிப்படுத்துவதாகவும் பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் மற்றும் சம்பந்தப்பட்ட ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகள் உடனடியாக ஆய்வு மேற்கொண்டு, அனைத்து குடிநீர் தொட்டிகளையும் சுத்தம் செய்து பாதுகாப்பான குடிநீர் விநியோகத்தை உறுதி செய்ய வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.


குடிநீர் என்பது மக்களின் அடிப்படை தேவையாகும் என்பதால், சுகாதாரமான குடிநீர் வழங்குவதில் அலட்சியம் காட்டாமல் நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை அப்பகுதி மக்களிடையே வலுத்து வருகிறது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies