தருமபுரி, மே.13:
தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக குறிஞ்சி கூட்டரங்கில், மழைநீர் சேகரிப்பு மற்றும் காலநிலை மாற்றத்தால் ஏற்படும் எல்நினோ விளைவுகளை எதிர்கொள்வது தொடர்பாக அனைத்து துறை அலுவலர்களுக்கான கலந்தாய்வு கூட்டம் மாவட்ட ஆட்சியர் திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் 12.05.2026 அன்று நடைபெற்றது. தருமபுரி மாவட்டத்தில் 13 வருவாய் குறுவட்டங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் மிகவும் குறைந்துள்ளதால், அதை உயர்த்த பல்வேறு நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக நடைபெற்ற இந்த கூட்டத்தில், மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு துறை கட்டிடங்களிலும் கட்டாயமாக மழைநீர் சேகரிப்பு அமைப்புகளை உருவாக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. இதன் மூலம் எதிர்வரும் பருவமழைக் காலத்தில் சுமார் ஒரு கோடி லிட்டர் மழைநீரை சேகரிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டது. மேலும், ஏற்கனவே உள்ள மழைநீர் சேகரிப்பு அமைப்புகளை சிறப்பாக பராமரிக்கவும் அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கப்பட்டது.
மழைநீர் சேகரிப்பு வசதிகள் இல்லாத அரசு மற்றும் தனியார் கட்டிடங்களிலும் கட்டாயமாக மழைநீர் சேகரிப்பு கட்டுமானங்களை அமைக்க அனைத்து துறை அலுவலர்களும் முன்வர வேண்டும் என மாவட்ட ஆட்சியர் வலியுறுத்தினார். மேலும், ஊரக வளர்ச்சித்துறையின் சார்பில் கடந்த நிதியாண்டில் 4 லட்சத்து 13 ஆயிரம் மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டு பராமரிக்கப்பட்டு வருவதாகவும், இந்த நிதியாண்டில் மேலும் 4 லட்சத்து 40 ஆயிரம் மரக்கன்றுகள் நடவு செய்ய தயாராக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. அனைத்து துறைகளும் தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள காலியிடங்களில் மரக்கன்றுகளை நடவு செய்தால், ஊரக வளர்ச்சித்துறை மூலம் மூன்று ஆண்டுகள் வரை பராமரிப்பு மற்றும் நீர்ப்பாசன வசதிகள் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டது.
மாவட்டத்தில் உள்ள 63 துறைகளின் அலுவலர்களும் மழைநீர் சேகரிப்பு மற்றும் மரக்கன்று நடவு திட்டங்களுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கி, தருமபுரி மாவட்டத்தின் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அறிவுரை வழங்கினார். இந்த கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ரூபன் சங்கர் ராஜ் மற்றும் பல்வேறு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662
.gif)

.jpg)