Type Here to Get Search Results !

தருமபுரி அருகே சுடுகாட்டு சுற்றுச்சுவர் இடிப்பு; நில ஆக்கிரமிப்புக்கு எதிராக சாலை மறியல் காரணமாக ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு.


தருமபுரி | பிப்ரவரி 09:


தருமபுரி மாவட்டம், வெங்கட்டம்பட்டி அருகே உள்ள மாதேமங்கலம் கிராமத்தில், சுடுகாட்டின் சுற்றுச்சுவரை இடித்து நிலத்தை ஆக்கிரமித்ததாக கூறி, சம்பந்தப்பட்டவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால், ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


மாதேமங்கலம் கிராமத்தில் சுமார் 1,000-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இக்கிராம மக்களுக்கு பயன்பாட்டில் உள்ள, சுற்றுச்சுவருடன் கூடிய சுடுகாடு உள்ளது. இந்த சுடுகாட்டின் அருகே, அதே கிராமத்தைச் சேர்ந்த குட்டியப்பன் என்பவரின் மகன் மாதையன் (60) என்பவருக்கு சொந்தமான நிலம் உள்ளது. சுடுகாட்டின் சுற்றுச்சுவர், அவரது நிலத்திற்குள் இருப்பதாக கூறி, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து வந்த நிலையில், சுற்றுச்சுவரை இடிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.


அதன்பேரில், நல்லம்பள்ளி வட்டார வளர்ச்சி அலுவலர், வருவாய் ஆய்வாளர் மற்றும் வெங்கட்டம்பட்டி கிராம நிர்வாக அலுவலர் ஆகியோர் சம்பவ இடத்திற்குச் சென்று, ஜேசிபி இயந்திரம் மூலம் சுடுகாட்டின் சுற்றுச்சுவரை இடித்தனர். இதனை கண்டித்து, சுடுகாட்டின் நிலத்தை ஆக்கிரமித்து சுற்றுச்சுவரை இடித்துள்ளதாகவும், கிராம பொதுமக்களிடம் முன்அறிவிப்பு எதுவும் இன்றி நடவடிக்கை மேற்கொண்டதாகவும் கூறி, மாதேமங்கலம் கிராம மக்கள் மிட்டாரெட்டிஅள்ளி – தருமபுரி செல்லும் சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.


தகவலறிந்து வந்த அதியமான் கோட்டை காவல் நிலையம் காவல்துறையினரும், வருவாய்த் துறை அலுவலர்களும் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். உரிய விசாரணை மேற்கொண்டு, சுடுகாட்டிற்கு மீண்டும் சுற்றுச்சுவர் அமைத்து வழங்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டனர்.


இந்த சாலை மறியலால், தருமபுரி, வெங்கட்டம்பட்டி, குட்டூர், தம்மனம்பட்டி, ஏரிகோடிப்பட்டி, தின்னப்பட்டி மற்றும் மிட்டாரெட்டிஅள்ளி உள்ளிட்ட பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662

 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies