தருமபுரி, பிப்.23:
தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மக்கள் தேசம் கட்சி மற்றும் அகில இந்திய ஆதிதிராவிட பறையர் பேரவை சார்பில் திமுக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. உயர் நீதிமன்ற வழக்கறிஞரும், மக்கள் தேசம் கட்சி தலைவருமான ஆசைத்தம்பி தலைமையில் நடைபெற்ற இவ்வார்ப்பாட்டத்தில், தருமபுரி மாவட்ட புதிய பேருந்து நிலையத்திற்கு வள்ளல் அதியமான் அவ்வையார் பெயரை சூட்ட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.
மேலும், மத்திய அரசால் பட்டியல் இன மக்களுக்காக ஒதுக்கப்பட்ட ரூ.17 ஆயிரம் கோடி நிதியில், ரூ.5 ஆயிரம் கோடி மகளிர் உரிமைத் தொகைக்காக மாற்றி பயன்படுத்தப்பட்டதாகவும், மீதமுள்ள ரூ.12 ஆயிரம் கோடி மத்திய அரசிற்கு திருப்பி அனுப்பப்பட்டதாகவும் கூறி திமுக அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். அதிக கனரக வாகனங்கள் மூலம் நடைபெறும் கனிம வள கொள்ளையை அரசு கட்டுப்படுத்தத் தவறிவிட்டதாகவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் குற்றம்சாட்டினர்.
ஆர்ப்பாட்டத்திற்கு பின் செய்தியாளர்களை சந்தித்த ஆசைத்தம்பி, மத்திய அரசால் பட்டியல் இன மக்களுக்காக ஒதுக்கப்படும் நிதியை வேறு திட்டங்களுக்கு மாற்றுவது ஏற்க முடியாதது என வலியுறுத்தினார். இந்நிகழ்ச்சியில் மாநில செயலாளர் சுலைமான், மாவட்ட செயலாளர் செல்வகமல், பென்னாகரம் நகர செயலாளர் மோகன், மாவட்ட துணை செயலாளர் அன்பு, மொரப்பூர் ஒன்றிய செயலாளர் முக்கன் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் கட்சி உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662
.gif)

.jpg)