தருமபுரி, பிப்.28:
தேசிய அளவில் ஆறு நோய்களைத் தடுக்கும் வகையில் 1978ஆம் ஆண்டு விரிவுபடுத்தப்பட்ட தடுப்பூசி திட்டம் தொடங்கப்பட்டது. அதை மேலும் வலுப்படுத்த 1985ஆம் ஆண்டு நாடு தழுவிய தடுப்பூசி திட்டம் செயல்படுத்தப்பட்டது.
இத்திட்டத்தின் கீழ் கர்ப்பிணித் தாய்மார்கள் மற்றும் குழந்தைகளுக்கு 11 வகையான தடுப்பூசிகள் வழங்கப்பட்டு, காசநோய், தொண்டை அடைப்பான், கக்குவான் இருமல், மஞ்சள் காமாலை, நிமோனியா, மூளைக்காய்ச்சல், இரணஜன்னி, போலியோ, தட்டம்மை, ருபெல்லா, ரோட்டா வைரஸ் வயிற்றுப்போக்கு, நியுமோனியா மற்றும் ஜப்பானிய மூளைக்காய்ச்சல் போன்ற நோய்களிலிருந்து பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருகிறது.
இந்தியாவில் ஆண்டுதோறும் சுமார் 1.2 இலட்சம் பெண்களுக்கு கருப்பை வாய் புற்றுநோய் புதிதாக கண்டறியப்படுகிறது. தருமபுரி மாவட்டத்தில் 1 இலட்சம் பெண்களில் சுமார் 30 பெண்கள் இந்நோயால் பாதிக்கப்படுகின்றனர்.
தமிழ்நாடு அரசு 2026ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தருமபுரி உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் கருப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி திட்டத்தை தொடங்கியுள்ளது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் 14 வயதிற்குட்பட்ட பெண் குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. தருமபுரி மாவட்டத்தில் இதுவரை 6,234 பெண் குழந்தைகள் பயன்பெற்றுள்ளனர்.
மேலும், மத்திய அரசின் நாடு தழுவிய தடுப்பூசி திட்டத்தின் மூலம் 28.02.2026 முதல் 14 வயதுடைய அனைத்து பெண் குழந்தைகளுக்கும் ஒருதவணை கருப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள் மற்றும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் வழங்கப்படும்.
இந்த தடுப்பூசி மூலம் கருப்பை வாய் புற்றுநோயை 99.7 சதவீதம் வரை தடுப்பதற்கான வாய்ப்பு உள்ளது. தற்போது உலகின் பல நாடுகளில் இந்த தடுப்பூசி வழங்கப்பட்டு வருகிறது. 14 வயது பெண் குழந்தைகள் அனைவரும் தடுப்பூசி பெற்று பயன்பெறுமாறு மாவட்ட நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.
“கருத்துடன் செயல்படுவோம்; கருப்பை வாய் புற்றுநோயிலிருந்து பெண் குழந்தைகளை பாதுகாப்போம்” என தருமபுரி மாவட்ட ஆட்சியர் திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.
© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662
.gif)

.jpg)