Type Here to Get Search Results !

பாலக்கோடு சனத்குமார் நதியில் இறந்த கண்றுக்குட்டிகள் வீச்சு: துர்நாற்றம் பரவி, நோய் அபாயம் அதிகரிப்பு.


பாலக்கோடு, நவ. 25:

பாலக்கோடு மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளின் முக்கிய நீராதாரமாக விளங்கி வரும் சனத்குமார் நதி, துர்நாற்றத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. நதியில் இறந்த கண்றுக்குட்டிகள் உட்பட பல்வேறு குப்பைகள், கோழி–ஆடு–மாடு இறைச்சி கழிவுகள் கொட்டப்பட்டு வருவதால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு, நோய் பரவும் அபாயம் உருவாகியுள்ளது.

கணபதி கொட்டாய், ஜெர்தலாவ், சித்திரப்பட்டி, பூவன் கொட்டாய், கொட்டாவூர், மல்லசமுத்திரம், காவாப்பட்டி உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள் குடிநீர், விவசாயம் மற்றும் கால்நடை தேவைகளுக்காக இந்த நதியை நம்பி வாழ்கின்றனர். பஞ்சப்பள்ளி அணை நிரம்பி தண்ணீர் திறக்கப்பட்டதால் தற்போது நதியில் நீரோட்டம் அதிகரித்துள்ள நிலையில், கழிவுகள் கலப்பது மேலும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த பிரச்சினை குறித்து பொதுமக்கள் பாலக்கோடு பேரூராட்சியில் புகார் அளித்தபோது “இது ஜெர்தலாவ் பஞ்சாயத்து எல்லைக்குள் வருகிறது” எனவும், ஜெர்தலாவ் பஞ்சாயத்தில் புகார் அளித்தால் “இது பாலக்கோடு நகரப் பகுதியைச் சேர்ந்தவர்கள் செய்தது” எனவும் துறைகள் ஒருவரின் மீது ஒருவர் பொறுப்பை தட்டிக்கழிக்கின்றனர். இதுவரை எந்த துறையும் புகாருக்கு உரிய நடவடிக்கை எடுக்காததால் மக்கள் விரக்தியில் உள்ளனர்.


விவசாயம், குடிநீர், கால்நடைகளுக்கு பயன்படும் நீரை இவ்வாறு குப்பைகளும் இறந்த உயிரினங்களும் அசுத்தப்படுத்துவது பெரும் ஆரோக்கிய அபாயத்தை ஏற்படுத்தும் என்பதால், நதியில் உள்ள கழிவுகளை உடனடியாக அகற்றி, நதியை அசுத்தப்படுத்துவோருக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.


© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662

 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies