அரூர், அக். 28 -
தருமபுரி மாவட்டம், அரூரில் இந்திய குடியரசு கட்சியின் முதுபெரும் தலைவர் பி.வி. கரியமால் அவர்களின் உருவப்பட திறப்பு விழா மற்றும் நினைவேந்தல் நிகழ்ச்சி நேற்று (அக்.26) சிறப்பாக நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்டத் தலைவர் பி. பழனிசாமி தலைமை வகித்தார். சேலம் மண்டல செயலாளர் பழனிசாமி ஒருங்கிணைப்பாளராகவும், குமரேசன் தொகுப்பாளராகவும் பணியாற்றினர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய செ.கு. தமிழரசன் கூறியதாவது:
“மத்திய அரசு வழங்கிய ரூ.8,660 கோடி ஆதிதிராவிடர் நல நிதியை, தமிழக அரசு திருப்பி அனுப்பியதாக குற்றச்சாட்டு உள்ளது. இதற்கு அரசு இதுவரை விளக்கம் அளிக்கவில்லை.ஒரு காலத்தில் இப்படியான நிதி ‘கலர் டிவி’ வழங்கும் திட்டத்திற்கும், மதுரை உலகத் தமிழ் மாநாட்டிற்கும் திசை திருப்பப்பட்டதாகும்.தாழ்த்தப்பட்ட பிரிவினருக்கான காலிப் பணியிடங்களை நிரப்புவோம் என திமுக கூறியிருந்தும், நான்கரை ஆண்டுகளாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
தற்போது சாதி ஆணவக் கொலைகள் குறித்து ஆணையம் அமைத்துள்ளனர். ஆனால், அரசு சட்டம் இயற்றும் அதிகாரம் கொண்டிருக்கையில் ஆணையம் தேவையில்லை. இதற்கான காலக்கெடும் இல்லை. இது வெறும் கண்துடைப்பு நடவடிக்கை.
தலித் மக்களுக்கான உரிமைகள் பறிக்கப்படுகின்றன. பாதுகாப்பின்மை, தாக்குதல்கள், சமத்துவமின்மை தொடர்ந்து நடந்து வருகிறது.
தமிழகத்தில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கான இடஒதுக்கீடு தற்போது 18% ஆக உள்ளதை, கர்நாடகம் மற்றும் பீகாரைப் போன்று 23% ஆக உயர்த்த வேண்டும்.” எனக் குறிப்பிட்டார்.

.jpg)