தருமபுரி, அக். 27 -
லஞ்சம் மற்றும் ஊழல் விழிப்புணர்வு வாரத்தையொட்டி, தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக அதியன் கூட்டரங்கில் இன்று (27.10.2025) லஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், அனைத்து துறை அலுவலர்களும் லஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.
உறுதிமொழி நிகழ்வில், “நமது நாட்டின் பொருளாதாரம், அரசியல் மற்றும் சமூக முன்னேற்றத்திற்கு ஊழல் ஒரு முக்கிய தடையாக இருப்பதை நம்புகிறேன். அரசு, குடிமக்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் இணைந்து ஊழலை ஒழிக்க வேண்டும் என உறுதிபட கூறுகிறேன். அனைத்து செயல்களிலும் நேர்மை, சட்டவிதி, வெளிப்படைத்தன்மை ஆகியவற்றை பின்பற்றி, இலஞ்சம் வாங்கவோ கொடுக்கவோ மாட்டேன். பொதுமக்களின் நலனுக்காக பணியாற்றி, ஊழல் நிகழ்வுகள் குறித்து உரிய அதிகார அமைப்பிற்கு அறிவிப்பேன்” எனக் கூறிய உறுதிமொழி மாவட்ட ஆட்சித்தலைவர் வாசிக்க, அனைவரும் அதனை ஒருமித்துக் கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) கவிதா, தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) திரு. சுப்பிரமணியன், மாவட்ட வழங்கல் அலுவலர் திரு. கதிரேசன், உதவி ஆணையர் (கலால்) திருமதி நர்மதா உள்ளிட்ட பல அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

.jpg)