இண்டூர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் சாலை மறியல் – தலைமை ஆசிரியையை மாற்ற கோரிக்கை.
தருமபுரி, செப்டம்பர் 19 (புரட்டாசி 03) -
தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள இண்டூர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் மாணவிகள் சாலை மறியலில் ஈடுபட்டு பரபரப்பை ஏற்படுத்தினர்.
இப்பள்ளியில் 6ஆம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு வரை 274 மாணவிகள் கல்வி கற்கின்றனர். கடந்த ஏழு ஆண்டுகளாக இப்பள்ளியில் பணியாற்றி வரும் தலைமை ஆசிரியர் ராஜாத்தி, மாணவிகளிடம் தகாத வார்த்தைகள் பயன்படுத்தி வந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால், மாணவிகள், பெற்றோர்கள் மற்றும் கிராம மக்கள் இணைந்து இண்டூர் – பாப்பாரப்பட்டி சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
மாணவிகள் “தலைமை ஆசிரியையை மாற்ற வேண்டும்” என கோஷங்கள் எழுப்பினர். மேலும், கிராம மக்கள் தலைமையாசிரியர் மாணவிகளிடம் பயன்படுத்திய தகாத வார்த்தைகளுக்காக அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தினர்.
சுமார் மூன்று மணி நேரம் நீண்ட இந்த மறியல் காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மாவட்ட கல்வி அலுவலர், முதன்மை கல்வி அலுவலர், வட்டாட்சியர் மற்றும் இண்டூர் போலீசார் மாணவிகள் மற்றும் கிராம மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அதில், தலைமை ஆசிரியர் பணியிட மாற்றம் செய்யப்படும் என அதிகாரிகள் உறுதியளித்ததை அடுத்து, மாணவிகள் மறியலை கைவிட்டு கலைந்து சென்று பள்ளிக்கு திரும்பினர். இதனால் ஏற்பட்ட பரபரப்பு ஓய்ந்தது.


கருத்துகள் இல்லை
கருத்துரையிடுக